கால் பந்தாட்டம்
1
கண்ணன் ராதையின் காதல்வனத்தை
ஒரு கால் பந்தாட்டப் பாலையாக்கியது எது?
காண்பானென் றெவருமில்லாத
மாபெரும் கலை நிகழ்ச்சியாய்த்
தன்னைத் தானே கொண்டாடிக்கொண்டிருந்த பூமியைக்
குருஷேத்ரமாக்கியது?
ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாய் அரிந்துவிடும்
உன் ஆயுதம் கொண்டு
இம் மைதானத்தையும் தரித்துவிட்டாய்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
எப்போதும் உன் குழுவினை அனுசரித்தபடி
’எதிர்க்குழு’வினை ஏமாற்றும் ஓராயிரம் தந்திரங்களை
ஒவ்வொரு நிமிஷமும் புதிதுபுதிதாய்க் கண்டடைந்தபடி
’உன் வெற்றி’ நோக்கி முன்னேறுகிறாய்.
கால்பந்து படும் பாடு கடவுள் படும் பாடு
ரணகளம் சித்ரவதை –
வாழ்க்கை ஒரு விளையாட்டு அல்ல சிறுவனே
எனினும் என் நெஞ்சு
சற்றே ஆசுவாசிக்கவோ
அனைத்தையும் விளையாட்டாக்கி
ஆடி மகிழ்கிறது உன் குழந்தைமை?
2
உன்னை உந்தும் சக்தி எதுவென யோசி.
அதைத் துற; தொடர்ந்து துறந்துகொண்டே இரு.
குழுவல்ல; நீயே முக்கியம்.
மொத்த உலகத்தின் பிரதிநிதியான நீ.
குழுவும் அதில் உள்ளடங்கியுள்ள ’ஒரு நீ’யும் அல்ல.
உன்னை உந்தும் சக்தியென ஒன்றிருக்காத அந்நிலையில்தான்
நீயே சக்தி. தோல்வி பலவீனங்களெனும்
சிறுமைகளறியாத சக்தி.
அங்கே
எதிர்நிலைகள்
ஒன்றுபடுதல்
செயல்படுதல்
என்னும்
எண்ணங்களுக்கே இடமில்லை
அங்கே வெற்றி என்பதும் கிடையாது
தீராத காதல் விளையாட்டு மாத்திரம்.
3
அஞ்சாது
தனித்திருந்து
தன்னை அறிந்து
தன்னந் தனியான வாழ்வினையும் அறியும்
மாண்புமிக்கோன்
’தான்-பிறர்’ எனும் பேதக் கொடுவாய்க்குள்
குழு ரகசியமாய் முளைக்கும்
கொடூரப் பல் இல்லாதான்
அவனின் விரிந்த விழித் திரையெங்கும்
வாழ்வின் நடனம்
கதறி அழைக்கும் வாழ்வினுக்குப்
பாறாங்கல் முதுகு காட்டி
குழுவே செயல் குழுவே செயல் எனும்
மந்திர உச்சாடனம் உருவேற்றிய
சாமி முன்னே
கண்மூடி அமர்ந்தார்
அவர் அனுஷ்டானங்களெதையுமே
கலைக்க முடியவில்லை வாழ்வின் நடனத்தால்