ஒஸாமா பின்லேடன்
எவ்வளவு கம்பீரமாய் ஒலிக்கிறது உன் பெயர்
என் பெயரைப் போலவே.
உன்னைப் போலவே
ஒவ்வொரு கவிஞனும் – நானும்–
ஒரு தீவிரவாதிதானே
ஒரு சிறு வேறுபாடு மாத்திரமே உண்டு
உன்னிடமிருப்பது அறியாமையும் வெறுப்பும்
இக்கவிஞனிடமிருப்பதோ ஞானமும் அன்பும்
அன்பு மீதூறி நான் உன்னை
ஆரத் தழுவிக்கொள்ளும் இவ்வேளை
இதோ யுத்தம் முடிகிறது
சாந்தி மலர்கிறது
அத்துணைப் பிரம்மாண்டமான கட்டிடத்தை
அத்துணைப் பேராத்திரத்துடன் நொறுக்கி
எத்துணைப் பயங்கரத்தை நாட்டிவிட்டாய், ஒஸாமா.
இத்துணை வேகமும் சக்தியும்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்பதை நான் அறிவேன்;
உன் மறைவிடங்கள் அனைத்தையுமே நான் அறிவேன்.
ஒஸாமா, இக் கவிதை என்னுள் கருக்கொள்ளத் தொடங்கி
இது எழுதி முடிக்கப்படும் வரை –
ஒஸாமா, ஒஸாமா, ஒஸாமா – உன் பெயரை நான்
எத்தனை ஆயிரம் முறை எத்தனை நேசத்துடன்
உச்சரித்திருப்பேன்!
இதோ பார், ஒஸாமா,
நீ மனித உயிர்களின் அழிவை அஞ்சாது
இடித்து நொறுக்கினாயே அந்தக் கட்டடத்தைவிடக்
கோடிமடங்கு பிரம்மாண்டமாயும்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்
மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டும் நிற்கும்
மத, இன, தேச நம்பிக்கைகள் எனும் கட்டிடத்தை
இதோ, இக்கவிஞன் நொறுக்கித் தள்ளியபின்
எங்கு போய் ஒளிவாய் என் நாயகனே
வா,
வெட்டவெளியாய் விரிந்த கரம் நீட்டி அழைக்கும்
ஓர் இதயத்தின் அற்புதக் கதகதப்பிற்குள்
வந்துவிடு
என் ஆருயிரே