தோலுரித்தல்
அம்மா, உன் கைத்துப்பாக்கி
என் நெஞ்சைக் குறி வைத்ததும்
கைகளை உயர்த்தினேன்
அழுக்கேறிக் கனத்த டி ஷர்ட்டையும்
கால் சராயையும் – தோலை உரிப்பதுபோல்
தலைவழியாகவும் கால்வழியாகவும் பிய்த்தெடுக்கிறாய்
ஓடும் நீரிலும் உணர்ச்சியற்ற கல்லிலுமாய்
மாறி மாறி முக்கியும் அடித்தும் துவைத்தும்
கசக்கியும் பிழிந்தும் – துப்பாக்கி வெடிப்பதுபோல்
ஓசைபட அவற்றை உதறிக் காயப்போடுகையிலும் –
துயரம் என் நெஞ்சை அடைக்கிறது. ஏனம்மா
உன் முகத்தில் இத்தனை வெஞ்சினம்? கருணைக் கொடூரம்?
பற்கள் கிடுகிடுக்க நடுங்கும் என் வெற்றுடம்பைக்
கைகளால் அணைத்தபடியே – இந்த ஆற்றுவெளியைப்
பார்த்துக்கொண்டிருக்கும் என்னை அதட்டியபடி
என்னைக் கொன்றுவிடுபவள்போல்
தண்ணீரில் தள்ளி அமுக்குகிறாய்
பிறகு கை பிய்ந்துவிடுவதுபோல் கரைக்கு இழுக்கிறாய்
ஏனம்மா, இத்தனை வெறியுடன் என் தலையைத் துவற்றி –
அடித்து விரட்டுவதுபோல் தள்ளுகிறாய்?
உன் விரல்களிலிருந்த மென்மைகளை
ஏன் தொலைத்தாய்? எங்கு தொலைத்துவிட்டாயம்மா?
ஆற்றிலிருந்து வீட்டுக்கு – தூய்மையுடனும் ஈரத்துடனும் –
சுமைகளோடுதான் சென்றுகொண்டிருக்கிறோம்.
வழியில் ஆறுதலாக ஒரு வார்த்தை பேசக்கூடாதா, அம்மா?
என்ன விசேஷம் அம்மா, இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி
இன்றென்னை சிறப்பாக அலங்கரிக்க நினைக்கிறாய்?
பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி வந்த இஸ்திரி பெட்டியால்
நெருப்புக் கனல, உடலெல்லாம் வியர்க்க
நீ என் சட்டையை
அழுத்தித் தேய்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கையில்
உன்னை நெருங்கவே அச்சமாக இருக்கிறதம்மா