அந்தச் சிரிப்பு
நிலா காட்டியபடி அம்மா சோறூட்டிக் கொண்டிருந்தாள்
ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவர்க்கு
ஓர் அன்பான தாயோ தந்தையோ பிள்ளையோ
உடன் பிறப்போ நண்பனோ சகாவோதானே?
இவ்விதமாய் உலகம் முழுக்க
நிறைந்துள்ளது அன்பு இல்லையா?
தன் முகத்தை முகத்தைக் காட்டி
அவன் முகத்தை மலரவைக்க முயன்றாள் அவள்
வாழ்க்கை பொய்த்ததுவா?
வாய் பார்த்து ஊட்டினாள்
இடுப்பு வழுக்காதபடி அமர்த்திக்கொண்டாள்
அநீதி போர் வறுமை இன்ன துயர்கள்
எங்கிருந்து தோன்றி இவ்வுலகை வதைத்து
அதிரவைக்கின்றன?
எதற்காக?
குட்டித் தம்பி சாப்பிட்டாச்சு என்று
அவனைச் சிரிக்கவைக்க தட்டை அசைத்தபடி
மகிழ்ச்சிப் பிரகடனம் செய்தாள்
வியப்பிலாழ்த்துகிறது அதன் நோக்கம்
துக்கிப்பதற்கு ஒன்றுமில்லை
கொஞ்சம் இப்படி உட்கார்ந்துகொள்
அம்மா தட்டைக் கழுவிவிட்டு வந்துவிடுகிறேன்
ஒரு கையால் இலட்சியச் செயல்பாடுகள்
மறு கையால் அதை அறவே அழிக்கும்
வாழ்க்கைப் பாணியை விடாத குரங்குப்பிடி
எத்தனை துரதிருஷ்டமானது இந்த வாழ்க்கை
கழுவித் துடைக்கப்பட்ட அவன் முகம்மீது
அம்மாவின் முத்தம் பதிந்தது
இருந்துமிங்கே அவ்வப்போது
நாம் அதை அனுபவிக்கிறோம் என்றால்
அது – அந்தக் கருணை –
நமக்கிடும் பிச்சையன்றி வேறேது?
அவன் முகம் அம்மாவை இமைகொட்டாமல் நோக்கியது
ஏதோ ஒன்று அவளை ஆழமாய்க் கிளர்த்தி
மிக அழுத்தமான முத்தமொன்றை அவன் கன்னத்தில் பதித்தது
அவனுக்கு அந்தச் சிரிப்பு வந்துவிட்டது