சில அந்தரங்கக் குறிப்புகள்
நாம் கண்டது அதுவல்ல
காண்பது அத்துணை எளிதல்ல
கண்ணாடி காட்டுவது
காண்பவன் முகத்தைத்தான்
அதனை அல்ல
தொலைந்துதான் காணமுடியும்
நாமோ
தொலைத்துவிட்டுப்
பின்னரே அதனைக்
கண்டுபிடித்து விட்டதாய்க்
குதிக்கிறோம்
o
உண்மை மிக நுட்பமானதும்
எளிதில் சிதைந்து விடக்கூடிய
நொய்மையானதும் கூட
(அதன் தாத்பர்யம் மகத்தானது)
அத்தகையதை வெளியிடுவதற்கென
தகுந்த்தோர் மொழி வேண்டும்
அதுவே கவிதை
o
சிருஷ்டித்துக்கொள்
எவ்வளவு வேண்டுமானாலும்.
அவை
பேரியக்கத்தின் திறவுகோல்களாக
விக்கிரகங்களாக தியானமந்திரங்களாக
ஆகலாம்
பவுத்தம் கிறித்தவம் மார்க்சியம்
இன்னபிறவும் ஆகலாம்
எனினும் உன் சிருஷ்டிகள் அழிக்கப்படும்போது
அதற்காக ரொம்பவும் அழவேண்டியதில்லை
இயற்கை இருக்கிறது
ஆனால் உன் சிருஷ்டிகரம்
இயற்கையை அழிக்குமானால்
இயற்கைக்குப் பதிலிகளாய்
உன் சிருஷ்டிகள் வந்துதவாது
தற்கொலை செய்துகொள்ளும் உனைக் காக்க
யாராலும் இயலாது
விரைந்து வா
சிருஷ்டிகரம் என்றாலே
இயற்கையைப் பேணுதல் என்றறி
o
வாழ்வே வழிகாட்டுகிறது
ஆனால் அதைச் சொல்வதற்கு
சொற்களில்லை
சொற்களால் சொல்லப்படுகிற
எல்லாவற்றையும் அது
விலக்கி நிற்கிறது
சொல் ஒரு திரை
வாழ்வு அதை விலக்கும்
o
’நான்’ என மாட்டேன்
’நீ’ இருப்பதால்.
’நீ’ எனவும் மாட்டேன்
’நானை’யும் அது சுட்டுவதால்
’நாம்’ எனவும் முடியவில்லை
’அதனை’ அது விலக்குவதால்
ரொம்ப ரொம்பக் கஷ்டமடி
சொற்களை வைத்துக்கொண்டு
கவிஞன் படும்பாடு
o
உனக்குப் புரிகிறதா இதெல்லாம்?
துள்ளுகிறதா உன் இதயம்?
அதுதான் காதல் என்பது
காதல் என்பது இனங் கண்டுகொள்ளல் அல்ல
காதல் என்பது காணுதல் ஆகும்
தனக்குள் இருக்கும் உன்னதத்தைத்
தான் கண்டுகொள்ளல், மற்றும்
என் உன்னதத்தை உன் உன்னதம்
அல்லது உன்னதை என்னது
பிறிதெது வொன்றும் காதல் ஆகாது
o
காதலனாக இரு
வாழ்வின் மகத்தான இலட்சியம்
அதுவாக இருக்கிறது
நான் உனக்கு இப்பூமியைப்
பரிசாகத் தருவேன்
அண்ட சராசரங்கள்
அனைத்தையும் தருவேன்
பெற்றுக்கொள்ள
இடமிருக்கிறதா உன்னிடம்?
பேணிக்கொள்ளத் தெரியுமா உனக்கு?
காதல் உனக்கு வழிகாட்டும்
o
ஆயிரமாயிரம் மலர் கொண்டமைந்ததுபோல்
ஒளிரும் இம்மேடை,
இந் நிலப்பரப்பெங்கும் சிதறிக் கிடந்த
கற்களையெல்லாம் பொறுக்கிப்பொறுக்கித்
தொகுத்த செயல்பாட்டால் ஆனது
சொல்லிவைத்தாற்போல்
வானமும் முழுநிலவெய்திப் பொலிந்தது
திக்குகளெல்லாம் திகைத்து அழிய
திரைச்சீலைகளற்ற அம்மேடையில் வந்து
நடம்புரிய நின்றது காதல்
மருந்துக்கும் ஒரு சிறு கல்துண்டு
காணமுடியாத நிலப்பரப்பு
அமிர்தப் பெரும் படுகை ஆனது