தோலுரித்தல்
வலியோ வலுவோ
கொலைவெறியோ குணவெறியோ காமமோ
இன்னதென அறியாததொரு கொந்தளிப்புடன்
அந்த மரநிழலில் அமர்ந்திருந்தேன்
கல் மரத்தைத்
தாக்கித் தாக்கிப் பிளக்கும் கோடரியின்
தணியாத வேகமோ-
உயிர்க் குருத்தைத் தேடும்
சிறுத்தைத் தசை நாரோ-
என் சுவாசத்தை என் சுவாசமே
தன் மோப்பத்தால் ஆராய்ந்துகொண்டிருக்க
வழிவிட்டு அமர்ந்திருந்தேன்
பாளை அரிவாள் முன் நிற்கும் வாழை மரம் போலவோ
கத்திமுன் உருண்டுகிடக்கும் பலாக்கனி போலவோ
இன்றில்லை வாழ்க்கை
பகற்கனவோ மனக்கோளாறோ என
விரியும் சில படிமங்களில்
திணறினேனோ இளைப்பாறினேனோ
நான் அறியேன்
வீழ்த்தி தரையில் போட்டு ஏறி மிதித்தபடி
அட்டுப் பிடித்துப் பிடித்துக்
கெட்டித்ததில் வளர்ந்த சிராய்களையெல்லாம்
இழைப்புக் கோடரியால்
எரியும் நெருப்பை நோக்கிச்
செதுக்கித் தள்ளுகிறேன்
வயிற்றைக் கீறி பின் தைத்து
சிசுவையும் தாயையும் பத்திரமாய்க் காப்பாற்றிக்
கைகழுவிக் கொண்டிருக்கும் மருத்துவன் போல்-
வாடாமல் ஓங்கி நின்றிருந்த பனைஉச்சி ஓலைகளின் அசைவில்
கைகழுவும் நீரொலியைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்