Monday, December 31, 2012

நேரம் வந்துவிட்டது

நேரம் வந்துவிட்டது நம்ம சாருக்கு
இந்த நட்டநடு வேளையில்
வெயிலோடு வெயிலாய்
வீடு போய்த் திரும்புவதற்கின்றிக்
கொண்டுவந்த உணவை முடித்துத்
தன் வகுப்பறைப் பெஞ்சிலேயே
சற்றுத் தலைசாய்ப்பதற்கு
நேரம் வந்துவிட்டது

சாய்ந்த அவர் தலைக்குள்ளே
ஓசையின்றி நிகழுது ஒரு பெரும்பள்ளம்;
இப்புவிக் கோளத்தையே ஈர்த்து
விழுங்கக் கனலுமோர் பெரும்பசி வாய்.
நேரம் வந்துவிட்டது நம்ம சாருக்கு
அந்த நேரம் வந்துவிட்டது

குழிக்குள் விழுந்ததோர் கோலிக் குண்டாய்
முழிக்குது உலகம் – அதன்
மேலொரு மேடையிலே –
பாடம் முடித்த வகுப்பறை ஒன்றில்
ஆடும் குழந்தைகள்

விழித்து எழுந்தவர் கெஞ்சியும் கடிந்தும்
வெளியே போய்த்தான் விளையாடலாகாதா என
அந்த உறக்கம் வேண்டி
அவர்களிடம் யாசிக்கும் அந்த நேரம் வந்துவிட்டது

Read more...

அப்படி

மாதக் கடைசியில் கிடைக்கும் கரன்சிகளை
அப்படியே குக்கரில் போட்டெடுத்தா தின்கிறோம்?
கடவுளையும் மாமனிதர் சொற்களையும்
உண்டு கடைத்தேற
நமக்குள்ளும் வேண்டுமன்றோ
ஒரு கடைத்தெரு

நம்மைப்பற்றி எண்ணுந்தோறும்
கவலைப்பட்ட அவர்களைப் பற்றி
ஒருபோதும் சிந்திக்காத ’மேதை’களன்ளோ நாம்?
ஆனாலும் அதற்கில்லை அவர்கள் வருத்தம்

மனித வரலாற்றில்
உண்மையை அறிந்த
அந்த மாமனிதர்களையும்
அவர்கள் சுகங்களையும் துக்கங்களையும்
நான் அறிவேன்
எப்படி என்கிறாயா?
யானுமொரு மாமனிதனல்லவா,
அப்படி

Read more...

Sunday, December 30, 2012

குமட்டிக்கொண்டு வருகிறது

குமட்டிக்கொண்டு வருகிறது
வீதியை அசுத்தப்படுத்திவிட்டு
அந்தக் குற்றவுணர்வே இல்லாமல்
ஜம்மென்று வீற்றிருக்கும் இவ்வீடுகளின்
சுத்தமும் நேர்த்தியும் அழகும் படோடபமும் காண்கையில்

0

யாருமறியா இவ் வைகறை இருளில்
முதல் ஒளியாய்
இவ்வீதியைப் பெருக்கிக்கொண்டிருக்கிறான் ஒருவன்,
தன் கண்ணீரால் கழுவ விரும்பும்
உன் வெற்றுப் பாதங்களை நெஞ்சிற்கொண்டு.
*1 ஒரு கவிஞன் சொல்கிறான் அவன் வேலைபற்றி:
அவன் விடியலை வரைந்து கொண்டிருக்கிறானாம்
*2 அவன் சொல்லை நாம் நம்பித்தானாக வேண்டுமாம்
ஏனெனில் அவன் கவிஞனாம்

வெதுவெதுப்பேறி வியர்த்து நிற்கிற அவன் உடல்
ஒரு குளிர்காற்றின் அலைபட்டுச் சிலிர்க்கிறது
தன் ஆதர்ச மனிதனை எண்ணி
ஆயிரமாண்டுகளாய் மணமாகாது
காத்திருந்த கன்னியொருத்தி
பாய்ந்து போய் அவனைத் தழுவிக்
கொத்திக் கொண்டதுபோல்


*1 தேவதேவன்
*2 ராபர்ட் ஃப்ராஸ்ட்

Read more...

அந்தக் கட்டடம்

அடுக்கடுக்கான கட்டடங்கள்
நூறு இருநூறு ஆயிரம் ஆண்டுகளாய்க்
கொடுத்த முட்டுக்கட்டைகளையெல்லாம்
இடித்தபடி சரிகின்றன
இடிபாடுகளுக்கிடையே அகப்பட்டு
அலறிச் சிதைந்து
அடங்கிப்போன உடலங்கள் நாம்

நமது மீட்புப் பணியினால்
காக்கப்பட்ட உயிர்கள் எத்தனை?
கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள் எத்தனை?

புனிதமான மீட்புப் பணியாளர்களே
அறிந்தீரோ இப்போதாவது
கட்டடம் ஒன்றை
எந்த அத்திவாரத்தின் மீது
எங்ஙனம் கட்டுவதென்பதையும்
அதை எங்ஙனம் பராமரிப்பதென்பதையும்?

அந்த இடிபாடுகளுக்கிடையே
நேற்றுப் பெய்த மழையில்
இன்று முளைத்திருக்கும்
அச்சிறு புல்லைப் போய்க் கேளுங்கள்
அதற்குத் தெரியும் அதன் ரகசியம்

0

அது நிழல் தராது
(தன் நிழலைத் தானே விழுங்கி
ஒளி தருவது அது)

அதற்குக் கூரை கிடையாது
வானத்துச் செல்வங்களை
அது மறைக்க விரும்புவதில்லை

அதற்குச் சன்னல்கள் கிடையாது
ஏனெனில்
அதன் சுவர்கள் எதையும்
மறைப்பதுமில்லை தடுப்பதுமில்லை

அதற்குக் கதவுகள் கிடையாது
பாதுகாக்கப்பட வேண்டிய பொருளென்று
எதையும் அது வைத்திருக்கவில்லை
மேலும் சாதித் தடைகளை அது அறியாது

அதற்குச் சுவர்கள் கிடையாது
ஏனெனில்
வெளியிலிருந்து வெளியை
அது பிரிப்பதில்லை

அதற்குக் தரை கிடையாது
ஏனெனில்
அங்கு யாவும் அந்தரத்தில்
சுழன்று கொண்டிருக்கிறதேயன்றி
இருப்பதெற்கென எதுவுமில்லை

அதற்கு அறைகள் கிடையாது
ஏனெனில்
அங்கு நடப்பது ஒரே செயல்பாடுதான்

Read more...

Saturday, December 29, 2012

ஒரு கணக்கு

வாருங்கள் நண்பர்களே
இன்று உங்களுக்கோர் கணக்குப்பாடம்
சொல்ல எனக்கு அனுமதியுங்கள்

உலகின் மககள்தொகையை
ஒரு பத்து பேராகக்கொண்டு
சராசரி மனதத் தரத்திற்கு
ஒரு 20% மதிப்பெண்களே கொடுக்கிறேன்
சரிதானா?
நம் வேதனைகளுக்குக் காரணமான
இந்த ஈனச் சிறு உலகை
நீங்களும் அறிந்தவர்தாமே!

என் உத்தம நண்பர்களான
உங்கள் இருவருக்கும் தலைக்கு
95, 95 விழுக்காடுகள் சமமாகக் கொடுக்கிறேன்
உற்றுக் கவனிக்க வேண்டும் நீங்கள் இக் கணக்கை

மொத்த உலகின் தரம் உயர
இந்த 20 விழுக்காட்டிலும்
உங்கள் பங்கு மகத்தானது
அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
என்றாலும்
80 விழுக்காட்டு இழிமையிலும்
உங்கள் பங்கு 5, 5 விழுக்காடுகளே
உள்ளதை நீங்கள் உணரவேண்டும்
அவ்வப்போது இந்த 5, 5 விழுக்காடுகள்
80 விழுக்காட்டுப் பாவங்களுக்கும்
வித்தாகவோ துளி விஷமாகவோ நெருப்புக் குஞ்சாகவோ
நேர்ந்துவிடுவதையும் நீங்கள் அறிய வேண்டும்
இதுவே என் விண்ணப்பம்

சீரழிந்த இந்த உலகின் சீரழிவில்
உங்கள் பங்கும் உண்டு என்பதை
நீங்கள் மறுக்க முடியாதல்லவா?
மேலும் நீங்கள்
உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்
நீங்கள் உங்களிட்த்துக் கூட்டும்
ஒவ்வொரு மதிப்பெண்ணும்தான்
இந்த உலகின் சராசரி மனிதத் தரத்தை
உயர்த்துகிறது என்பதை

இந்த உலகத்தின் பாவத்தில்
நம் பங்கும் இருக்கும்வரை
நிம்மதிதான் உண்டோ, சொல்லுங்கள்

இப்போது கணக்கின் இறுதிக் கட்டத்திற்கு
வந்துவிட்டோம்.
கவனமாகக் கேட்க வேண்டுகிறேன்:
இந்த உலகியல்
துல்லியமானதும் கறாரானதுமான
ஒரு கணக்குப் பாடம் ஆகும்.
இங்க 100% எடுக்காதவர் அனைவருமே
தோற்றவர்களே - பாவிகளே
இத்தனைக்கும் மேலே
நூறு விழுக்காடு என்பது
நாம் அடைய முடியாத இலட்சியமுமல்ல.
சாத்தியமானதும் எளிமையானதும்
மனிதன் தவிர்க்கக் கூடாததுமான
ஒரு நிலை நிற்றல் என்பதையும்
அழுத்தம் திருத்தமாக
அடிக்கோடிட்டுக் கூறுகிறேன் இங்கே.
நம் மூக்குத் துவாரத்திற்குள்ளும்
புகுந்து நிற்கும் வானத்தை
எட்டாத உயரத்திலிருக்கிறதாய்
எப்படிச் சொல்வோம்?
மட்டுமின்றி
நூறு விழுக்காடு மதிப்பென் பெற்றும்
வேதனிக்கும் ஓர் உள்ளத்திற்கு மட்டுமே
குற்றவுணர்ச்சி இருக்காது
(பிரக்ஞையற்றவர்க்கும் அது இருக்காது
என்பது வேறு விஷயம்)

Read more...

Friday, December 28, 2012

அந்நாள்வரை அவ்விடத்தில்

அந்நாள்வரை அவ்விடத்தில்
யாரும் பார்த்திராத அதனைப்
பார்க்க நேர்ந்ததில் அதிர்ந்தேன்
எங்கு நான் இதற்கு முன்அதனைப் பார்த்தேன்?
ஆருயிராய் என் உயிரின் உயிராய் நிலவும்
இவ்வுறவை நான் எங்ஙனம்
அறியாதிருந்தேன் இதுவரை?

இன்று அதனைக் காண நேர்ந்த
என் ஆனந்தம் குறைவுபடக்
காண்பான் என்னைக் கொல்கிறது
அதன் கண்களின் மிரட்சி,
களைப்புற்றுச் சோர்ந்த அதன் தோற்றம்
என்னுயிர் அறிகிறது
அது தன் உடம்பெங்கும் ஏற்ற காயங்களை
அதன் வலியை, அதன் தனிமையை

எச்சரிக்கை படபடக்கும் இதயத்தோடு
என் குட்டி மாணவர்களை அணைத்தபடி
அதனை அவர்களுக்குச் சுட்டுகிறேன் கிசுகிசுக்கிறேன்
எங்கள் இதயங்களில் கசியும் நீர் ஒன்றே
அதன் தாகம் தணித்து உயிர் காக்கும் ஒரே மருந்தென்ற
மர்மம் அறிந்தாற்போல பம்மியவர்கள் போலும்
அப் பம்மலையும் சந்தேகித்தவர்கள் போலும் நிம்மதியின்றி
அன்று நாங்கள் இருந்தோம் எங்கள் வகுப்பறையுள்
அது பறந்துபோம் வரை அதனைப் பார்த்தபடியே

Read more...

சிறு நகர்வும் இயலாதபடி

சிறு நகர்வும் இயலாதபடி
அறையப்பட்டது போன்ற நிச்சலனம்.
விரிந்த ஈரப்பதமான துணிமீது
அனலூட்டப்பட்ட இரும்பின் இயக்கம்.
இப் பிரபஞ்சத்தின்
கர்ப்பக்கிரகக் கட்டுப்பாட்டறையாக
மூளையெங்கும் கனலும் ஓர் அழுத்தம்

அவன் விழி திறந்தது
இயந்திரமொன்றின் மூடித்திறப்பாகியது!
அறை வீடு வீதி யாவும்
கனன்றன அந்தக் கட்டுப்பாட்டறையாக.
அவன் தள்ளப்பட்டிருந்தான்
ஒரு மாபெரும் பொறியியல்
தொழில்நுட்பனாய் அங்கே

Read more...

Thursday, December 27, 2012

செங்கோல் வரையும் கருவிகள்

புள்ளி A B
ஒரே கோட்டில் இருந்தும்
ஒருவருக்கொருவர் எதிரிகளானது எப்படி?

இருவருக்கும் சமபங்களிக்கும்
ஒரு கம்பத்தை
இன்றிங்கே எப்படித்தான் நாட்டப் போகிறோம்
சண்டையின்றி சச்சரவின்றி?

கவனித்தாயா,
எந்தப் புள்ளியில் கவராய நுனி
ஊன்றுகிறதோ அந்தப் புள்ளிக்காகவே
அது வாதிடுகிறது;
கூடுதலாக வேண்டுகிறது.
ஆகவே... மற்றும் ஆகவேக்கு மேலும்
அசராமல் பதறாமல்
அதே கவராயத்தின் அதே அளவு மாறாமல்
அடுத்த புள்ளியையும் நாம் கவனிக்கிறோம்

அப்புறமான செயலோ மிக எளிது
இரு புள்ளிகளின் வில்லும் வெட்டிக்கொள்ளும்
அல்லது சந்தித்துக் கொள்ளும் புள்ளியிலிருந்து
நேர் கீழே இப்படி நட்டுவிடலாம் அந்தக் கம்பத்தை
இன்னொரு கருவியின் உதவியும் கொண்டு

Read more...

Wednesday, December 26, 2012

அவளுடைய உலகம்

தேங்கி முதிர்ந்து
கழிவாகி நாறும்
இந் நீர் உலகில்
பூப்பை அறிவிக்கும்
இரத்தச் சிவப்பு நீ!

தன்னை ஒற்றியெடுத்துத்
தன்னோடேயாக்கிக் கொள்ளும்
தாய்மைக்கு நீ ஏங்கினையோ?

எட்டி உதைப்பது போல்
உன்னை அருவருத்து விலக்கும்
மூர்க்க உலகை,
மலரும் புத்துணர்வின்
விரியும் பிரியம், இயற்கை -
ஏதொன்றையும் அறியாத
மூட உலகை,

நீ கண்ணகியாய் எழுந்து
எரி்த்துவிடாதபடிக் காக்கிறது,
காதலாகித், தன்னை முழுமையாய்த்
தன் பணிக்கு அர்ப்பணித்து மடியும் ஒரு ஜீவன்,
தீரமும் மென்மையும் அசையாத
உறுதியுமிக்க ஒரு பொருள், சுகாதாரத் துண்டு,
உன் வாட்டம் கண்டடைந்துவிட்ட பேரன்பு

இன்று வன மூர்க்கம் களைந்து
சோர்ந்து பொலியும் நின்முகம்
எங்கும் நிறைந்ததோர் தாய்மையின் மார்பில்
ஒரு மலராய் அணைந்திருக்கிறது, விழிமூடி;
மிருகம் ஒன்றின் காலடி யோசை கேட்டு
விழி திறக்கிறது

Read more...

நினைவுப் பரிசு

உண்மையிலேயே விடைபெறத் தயாராகி
அவள் முன் போய் நிற்கையில்
எண்ணிலா ஆண்டுகளை ஈந்து நிற்கின்றாள்
அத்துடனே ”எக்கணமும் தயாராயிரு”
என்னும் சிறு குறிப்பு வேறு

Read more...

ஓர் அதிகாலை ரோஜா

அக்காட்சியினைக் கண்டு
ஏன் என் இதயம் வலிக்கிறது?

ஆயிரம் ஆயிரம்
ஆண்டுகளாய் நீண்ட
இரவின் அழுகையின்
இறுதியாய்ப் பூத்த அபூர்வ மலர்,
அத்துணை விரைவில்
அத்துணை எளிதாய்
அழிந்துவிடக் கூடிய
நொய்மையைப் பெற்றிருக்கிறதே என்றா?


ஒவ்வொரு காலையிலும்
பூக்கிறதுதானாமே இந்த மலர்
தன் இரகசியத்தையெல்லாம் விளம்பியபடி?

அய்யோ, ஒருக்காலும்
இக் காட்சியினைக் காணாதோர்
கோடி கோடி!...ஏன்?

Read more...

Tuesday, December 25, 2012

இடையறாத ஒரு கர்ஜனை

விண்ணிற்கும் வீடுகளுக்கும்
நடுவே அமர்ந்துகொண்டு அவன் யோசிக்கிறான்
வீடு முணுக்கென்று இருண்டு கொள்கிறது
இருளும் மரங்களுடன்
மூக்குச் சிவந்த வானத்தின்
விஷ சர்ப்பம் அவனைத் தீண்டுகிறது

விஷ சர்ப்ப விழிகளாய் - சிலவேளை
அவை உமிழ்ந்து வைத்த மாணிக்கக்கற்களுமாய்
எங்கும் ஒளி உமிழும் வீடுகளின் அமிலப்பெருமழை
கோடி கோடிச் சிற்றோடை வீதிகள்
கூடிக் கூடிப் பாய்ந்து சேரும் மகாசமுத்திரம்
ஒவ்வோரிரவும் அவன் கேட்கிறான்
அச்சமூட்டும் அதன் கர்ஜனையை

Read more...

குழந்தைப் பருவம்

வான் வந்திறங்கும் திடல்,
நடுவே
பனித்துளி மாறாப் புல்மெத்தை;
இன்னும் அதில் புரண்டு
குட்டிக்கரணமடித்துக் கொண்டிருக்கும்
குழந்தைக் குதூகலம்;
மனிதர்கள் மத்தியிலோ
கவிந்துவிடும் இருள்;
கரையும் மண்சுவர்;
கரையான் அரிக்கும் பத்தகங்கள்;
எழுவது முதல் விழுவதுவரை
உழைப்பில் மாட்டிக்கொண்டிருக்கும் மனிதரின்
உயிர் வாழ்க்கைப் பாரம்;
நீரால் ஆகிய உலகில்
நீரின்றி வாடும் பயிர்கள்;
பழகிப் போனதால்
ஒளி போன்றே காணும் இருள்;
தன்னந் தனி நடைப் பயணம்;
எனினும், உற்ற ஒரே துணையாய்க்
கூடவே வரும் நிலா

Read more...

Monday, December 24, 2012

அந்த நபர்

அவனளவுக்கு அறிவாளியுமல்ல;
அவனளவுக்குக் குணசாலியுமல்ல;
அவனளவுக்குத் தீரமும் கிடையாது.
எனினும் ஏன் அவன் அந்த நபரிடம்
விடாது பேசித் தன்னை வீணடித்துக்கொண்டிருக்கிறான்?

மொத்த பூமியின்
ஒரு மோகன உருவம் - தான் - என
அவள் அறிவாளோ?

அவளே அறியாத
ஒரு மாபெரும் இரகசியமோ
அவள் வெட்கம்?
அவள் புன்சிரி?

Read more...

பனை நிழல்

அவ்வறைக்குள் நுழைந்து உரையாட வருபவர்கள்
பனை நிழலில் நிற்க நேர்ந்தவர்கள்போல்
தடுமாறுகிறார்கள். நிலைகொள்ளாமல்
விரைவில் எழுந்து போய்விடுகிறார்கள்

அந்த அறையும் சரி, அவ்விடமுள்ள மனிதரும் சரி,
வேறு வேறானவர்கள் அல்ல என்பதுபோல்
அங்கே கனன்றது மிக நேர்த்தியானதோர் இருப்பு,
குழுவென்றும் கொள்கையென்றும்
சாதியென்றும் சமயமென்றும்
ஓய்வுகொள்ளவிடாது உந்தும் நெருப்பு,
புத்துயிர்ப்புக்கான
மரணத் தீயின் மவுனக் காந்தம்.
எனினும்
இருள் சூழ்கையில்
இருளோடு இருளாய்க் கரைந்து நிற்கிறது அது.
ஒளியில்
ஒளியின் குரலாய் நிமிர்ந்து நிற்கிறது

Read more...

Sunday, December 23, 2012

அவன் உணர்வுகள்...

அவன் உணர்வுகள் தீவிரமாகிவிடுகின்றன,
மக்கள் கூட்டம் நடுவேயும்
தன்னந் தனியே இருந்து
எல்லாவற்றையும் யோசிக்கும் இவ்வேளையிலும்

சிலுவை சுமப்பது போலும்
சவுக்கடிகள் போலும்
கல்லடிகளின் திடீர்த்திடீர்த் தாக்குதல்கள் போலும்
நிகழ்ந்த வலிகளின் நீங்காத நிழல்.
அவனைச் சுற்றிப்
பாறைகளும் முட்செடிகளுமாய் நிறைந்த
அனல் வீசும் தரிசு,
அபூர்வமாகவே நீரூற்றுக்கள்
அதனருகில் ஒளிரும் காட்டு மலர்கள்.
அவன் தன் சிலுவைச் சுமையை நட்டு
தன்னைத் தானே அறைந்துகொள்கிறான்
காறி உமிழ்ந்துகொள்கிறான், துடித்து மரிக்கிறான்;
ஒளிமலர்ப் புல்வெளி மகரந்த மணமும்
குழந்தைக் குதூகலமுமான
ஓர் உலகில் உயிர்த்தெழுகிறான்

எனினும் அவ்வப்போது அவன் உணர்வுகள்
தீவிரமாகி விடுகின்றன
மக்கள் கூட்டம் நடுவேயும்
தன்னந் தனியே இருந்து
எல்லாவற்றையும் யோசிக்கும் இவ்வேளையிலும்

Read more...

அன்னாரை முன்னிட்டேயானாலும்

எண்ணற்ற ஆண்டுகளுக்குப்பின்
நான் இன்று கண்டடைந்துவிட்ட உறவுகள்
ஒருநாளும் சாகாதவர்கள்
மரணத்தை வென்றவர்கள்
நினைத்தவுடன் உறவாட
வந்து நிற்பவர்கள்
என்போல் எவருக்கும்
ஒரே சமயத்தில் எக்காலத்தும்

அப்படி ஒரு ஆகிருதியை
எப்படி அவர்கள் அடைந்தார்கள்?
அப்படி ஒரு ஆளுமையை
அடைவதுதான் என் இலக்கோ?

என் கால்களுக்கிடையே வந்து நின்று
ஆடையைப் பிடித்து இழுக்கிற பூனையே
கவலைப்படாதே என் செல்லமே
ஒருக்காலும் நானுன்ளைச் சிநேக ரத்து செய்பவனல்ல,
அன்னாரை முன்னிட்டேயானாலும்

Read more...

அவன் கவிதைகள்

பிரியாவிடை கொடுத்துப் போனான்
பிரிவு எனும் சொல் கேட்டாலே
துடிதுடித்துச்
செத்துவிடுவான் போலானவன்

எங்கேயெனத் தானறியா இடம் நோக்கி
எது அவனைத் தள்ளுகிறது?
எதற்காக?

வந்து சேர்ந்தான்;
இரகசியமனைத்தும் தானறிந்தான்

அவனை இவ்விடத்தில்
அனைத்துயிரும் காண்பதற்கோ
தன் கவிதைகளை வழிநெடுக
விட்டு விட்டுச் சென்றுள்ளான்?

Read more...

Saturday, December 22, 2012

என் சிறு தோட்டத்தின் விடியலிலே

சொல்லொணாக் குதூகலம் பொங்கப்
பூத்து நிற்கும் ரோஜாவே,
எந்த ஒரு வேகம்
என் இதயத்துள் புகுந்து அதிர்கிறது இப்போது?
விரும்புகிறேன் நான் இவ்வேளை
என் இதயத்துடிப்பை உன்னுடன் பகிர்ந்துகொள்ள

நன்றி நன்றி
என் தோட்டத்தை ஒளிமயமாக்கியமைக்கு
உனக்கு நன்றி
எனினும் நான் உனை
ஏதாவதொன்று பண்ண விரும்புகிறேன்
அது: உன்னைக் கொய்து
என் கூந்தலில் சூடிக்கொள்வதல்ல;
யாராவதொருவருக்குக் கொடுத்து மகிழ
என் கரங்களை உந்தும் இந்த விழைவே -
ஓ, கடவுளே
உன்னையும் இங்கே பூக்கவைத்திருக்கிறதா!

Read more...

எத்தனை கால நண்பர் அவர்!

வருவார். மிக அவசரமான சுறுசுறுப்புக்காரராய்த்
தோற்றம் தந்தபடி
புத்தக அடுக்கினுள் தேடிப்புத்தகங்கள்
பத்திரிகைகளைப் பரபரவென்று எடுத்துப்போவார்;
இருப்புக் கொள்ளார்;
ஏறிட்டுப் பார்த்தறிதல், பேசுதல் அபூர்வம் அவருக்கு.
சிறிது பேச்சும், மவுனத்தைத் துரத்தித் துரத்தியடிக்கும்
கையிருப்புச் சொற்கள்.
உரையாடற் கலையினை அறியாதொருவர்
எங்ஙனம் அறிவார் வாசிப்புக் கலையை?
எனினும் உலகியல் காரியங்களிலெல்லாம்
நட்பின் இலக்கணமாய் உற்ற துணையாய்
எத்தனை கால நண்பர் அவர்!

தன்னறிவை அஞ்சியபடி
சதா ஓடிக்கொண்டிருக்கும் ஒருவரை
விடாமல் துரத்திக்கொண்டிருக்கும் இருப்பைத்
தேடித் தேடி
அவராகவும் அவ்விடம் வருவதுதான் விந்தை
மற்றும்
அந்தப் பறபற மற்றும் கவனமின்மைக்குக் காரணமும்

அவர் உரையாடுவதில்லையா?
வாசிப்பதில்லையா?

ஓடிவந்து அவரைச் சூழ்ந்துநிற்கும் இருப்பாய்
உரையாடலின் தாய்மை நெஞ்சம்
எப்போதும் அவர் கவனத்திற்காய்
அண்ணாந்து பார்த்தபடிக்
காலமற்றுக் காத்து நிற்பதை அவர் பார்ப்பதி்ல்லையா?

Read more...

Friday, December 21, 2012

வந்தவர் காத்திருக்கிறார்

’ஒரு நிமிஷம்’ எனச் சொல்லிவிட்டு
வேகமாய்ப் பாத்ரூமுக்குள் நுழைந்துவிட்டேன்

வந்தவர் காத்திருக்கிறார்

ஒவ்வொன்றையும் உணர்ந்த சுமையால்
முட்டிக்கொண்டு வரும் துக்கமும்,
ஒட்டுமொத்தமும் உணர்வாகிய போதில்
உற்றதொரு சாந்தியும்,
உற்றதொரு சாந்தியின் முதுகில்
தொற்றிக்கொண்டதோர் வேதாளமும்

Read more...

ஒஸாமா பின்லேடன்

எவ்வளவு கம்பீரமாய் ஒலிக்கிறது உன் பெயர்
என் பெயரைப் போலவே.
உன்னைப் போலவே
ஒவ்வொரு கவிஞனும் – நானும்–
ஒரு தீவிரவாதிதானே
ஒரு சிறு வேறுபாடு மாத்திரமே உண்டு
உன்னிடமிருப்பது அறியாமையும் வெறுப்பும்
இக்கவிஞனிடமிருப்பதோ ஞானமும் அன்பும்
அன்பு மீதூறி நான் உன்னை
ஆரத் தழுவிக்கொள்ளும் இவ்வேளை
இதோ யுத்தம் முடிகிறது
சாந்தி மலர்கிறது

அத்துணைப் பிரம்மாண்டமான கட்டிடத்தை
அத்துணைப் பேராத்திரத்துடன் நொறுக்கி
எத்துணைப் பயங்கரத்தை நாட்டிவிட்டாய், ஒஸாமா.
இத்துணை வேகமும் சக்தியும்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது என்பதை நான் அறிவேன்;
உன் மறைவிடங்கள் அனைத்தையுமே நான் அறிவேன்.
ஒஸாமா, இக் கவிதை என்னுள் கருக்கொள்ளத் தொடங்கி
இது எழுதி முடிக்கப்படும் வரை –
ஒஸாமா, ஒஸாமா, ஒஸாமா – உன் பெயரை நான்
எத்தனை ஆயிரம் முறை எத்தனை நேசத்துடன்
உச்சரித்திருப்பேன்!
இதோ பார், ஒஸாமா,
நீ மனித உயிர்களின் அழிவை அஞ்சாது
இடித்து நொறுக்கினாயே அந்தக் கட்டடத்தைவிடக்
கோடிமடங்கு பிரம்மாண்டமாயும்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்
மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டும் நிற்கும்
மத, இன, தேச நம்பிக்கைகள் எனும் கட்டிடத்தை
இதோ, இக்கவிஞன் நொறுக்கித் தள்ளியபின்
எங்கு போய் ஒளிவாய் என் நாயகனே
வா,
வெட்டவெளியாய் விரிந்த கரம் நீட்டி அழைக்கும்
ஓர் இதயத்தின் அற்புதக் கதகதப்பிற்குள்
வந்துவிடு
என் ஆருயிரே

Read more...

Thursday, December 20, 2012

எங்கும் விலங்குகளின் காலடியோசைகள்

எந்த நன்னாளின் எந்த நல்வேளையோ?
தன் கொட்டகையெங்கும்
தான் கட்டிவைத்திருந்த
தன் வளர்ப்பு விலங்குகளையெல்லாம்
அவன் அவிழ்த்து விட்டுவிட்டான்

ஒன்றின் பெயர் அமைதியின்மை;
அது அமைதியைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் வெறுப்பு;
அது அன்பைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் தனிமை;
அது நட்பைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் செல்வம்;
அது புகழைத் தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் பேராசை;
அது எளிமை தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் பொறாமை;
அது பொறுமை தேடி ஓடியது.
ஒன்றின் பெயர் அகந்தை;
அது தன்னழிவைத் தேடி ஓடியது.

அவன் நின்றான் அசையாமல்
அனைத்தையும் பார்த்தபடி
ஒன்றிலிருந்து பிறிதொன்றை நோக்கியோடும்
நடையினைத் துறந்தவனாய்

Read more...

மெய்ச்செயல் இரகசியம்

நாற்காலிக்கெதிரே
சாக்கடை பெருகிக்
குளம் கட்டிக்கொண்டிருக்கிறதே
எத்தனை நாளாய்?

எவ்வளவு காலமாய்!

அடைப்பைக் கவனிக்கிறாயா

என்ன செய்யத் துணிந்துவிட்டாய்

எது உன்னை இச்செயல் செய்யத் தூண்டியது?

என்ன அதிர்ச்சி இது? ஏன்? எப்படி?

பார்,
ஒரு சிறு அழுகல் இலை
அற்பப் பதர்
குப்பை

Read more...

Wednesday, December 19, 2012

அவனே

யாரொருவன் தன்னை அறிந்தவனோ
யாரொருவன் இருள் உதிர உழைப்பவனோ
யாரொருவன் சுய ஒளியால் பிரகாசிப்பவனோ

யாரொருவன் பசுமரமாய் நிற்பவனோ
யாரொருவன் சுனைநீராய் இனிப்பவனோ
யாரொருவன் உறவுபகையறியாத உறவினனோ

யாரொருவன் பசிக்குணவும் தாகத்திற்கு நீரும் ஆனவனோ
யாரொருவன் கட்சி கட்டளைகளில்லாதவனோ
யாரொருவன் தானே ஒரு பிரகடனமாய் ஆனவனோ

அவனே மனிதரென் றறிவோம்

Read more...

பாரம்

ஒவ்வொருவராய்க் கழன்று சென்றுவிடத்
தனித்து நின்ற அவன் தலையில்
பாரம் முழுதும் அழுத்துகின்ற வேதனை

கழன்று சென்றோர் ஒவ்வொருவருமே
பாரம் மேல் பாரமாக
வேதனை மேல் வேதனை

ஏகமாய் நின்றதொரு பிரக்ஞை

இலைகள் பாரமெனவும்
இனி தளிர்த்தலும் பாரமெனவும்
எல்லா இலைகளையும் உதிர்த்து நின்ற மரம் கண்டது:
வானமே இலைகளாகிவிட்ட பெரும்பாரம்,
முள்கிரீட மேற்று நிற்கும் பெருந்துக்கம்,
ஏகமாய் நின்றதொரு பிரக்ஞை,
இன்மையில் பூத்த ஒரு குழந்தையின் சிரிப்பில்
இல்லாமற் போகும் மாயம்

Read more...

Tuesday, December 18, 2012

கடவுளும் கடவுளும்

அவனைக் கண்டதும் அதிர்ந்து
திருட்டு முழி முழித்தார்,
தொழுகைகளும் திருவிழாக்களுமான
தன் அந்தரங்க ஆசையை
அனுபவித்துக் கொண்டிருந்த கடவுள்

இதுவா உம்ம ஜோலி என்ற
இகழ்ச்சிக் குரல் சுட்டெரிக்க
கடவுளைப் போலின்றி கடவுளைப்போல்
மறைந்து வாழும் அவனைக் கண்டு குன்றினார்

தம் கடை கலைத்து மனிதர்தமைக்
காக்க வேண்டாமோ கடவுள்?
செயலூக்கமற்ற ஆயாசம்
சபலம்
கொண்டாட்டக் களைப்பு
தூக்கம்
மற்றும் ஒருநாளும் நீங்காத தூக்கச் சடவுடன்
வழமைகளை மட்டும்
தவறாது காத்துக் கொள்கிறார்
காலம் காலமாய்க்
கொட்டாவி விட்டபடி கடவுள்

Read more...

பசுமர அதிசயம்

முன்னிரவின் துயில் துறந்து
இருள் அதிர அதிர
அடிபம்பு ஒலித்துக்கொண்டிருக்கும்
நகரப் பெண்டிர்

ஒலி எழுப்பக் கூசும் பேனா –
அழுது அழுது வறளத்
தன் இதயம் வடித்துக்கொண்டிருக்கும்
ஒரு ஜீவன்

நிலவு நோக்கி
உயர்ந்து மெலிந்து நிற்கும் தெருவிளக்கு

வாடி வறண்ட இத் தீயுலகில்
வாட்டம் எதிர்த்து நிற்கும் ஒரு பசுமரம்

இரகசியச் சுனையின் பேரம்பலம்

பொங்கி எழுந்த நீரூற்று

தனிப் பெருந் தீரம்

தெய்வ காரியம்

உள் ஒளிச்சேவை

உள்ளார்ந்த கடமை

பெருஞ்செயல்

உழைப்பு

உயிரின்பே-
ரியக்கம்

Read more...

Monday, December 17, 2012

காலி வீடொன்று...

காலி வீடொன்று புத்தம் குடியிருப்புக்குத்
தயாராய் நின்றிருக்கும்
கொள்ளை அழகை நான் பார்த்திருக்கிறேன்
இன்று அங்கே வந்து குடியமர்ந்தவனைப்
போய்ப் பார்த்தேன்

அவ்வீட்டினுள்ளே அவன்
ஒரு விநோதமான பிராணியைப் போலும்
விசித்திரமான கைதியைப் போலும்-
ஏன் அவ்விதம் காட்சியளிக்கிறான்?
சூழ்ந்து நிற்கும் அவன் பொருட்களையெல்லாம்
ஒன்றுவிடாமல் நான் ஏன் கூர்ந்து பார்க்கிறேன்?

பக்கத்திலேயே குடியிருக்கும் என்னைக் கண்டு
முதலில் அஞ்சுவதுபோல் தோன்றினான் அவன்
பின்னர் அச்சந்தருவது போலும் தோன்றுகிறான்

நேசக்கரம் நீட்டும் என் கையிலும்
பற்ற வரும் அவன் கையிலும்தான்
எவ்வளவு தயக்கங்கள்!
என் புன்னகையிலும்
அவன் பதில் புன்னகையிலும்தான்
எத்தனை புரியாத இரகசியங்கள்!

Read more...

கைவிடப்பட்ட...

உடைந்து சிதைந்து
கள்ளிகளும் களைகளும்
கஞ்சாவும் காமவக்கிரங்களும்
நடமாடுமிடமாகிவிட்டது
கைவிடப்பட்ட கடற்கரைப் பூங்கா;
தலைவிரித்தாடும் முட்செடிகளும்
பன்றிகளும் கழிப்பிடமுமாய்க்
கடற்கரை;
பிணமொன்று கிடந்தது ஒருநாள் அங்கே
’இவள்’தான் காரணமென்ற கடிதத்துடன்.
ஆசிரியர்களின் கொட்டாவி உலவும்
பேய் மண்டபமாகிவிட்டது
கடற்கரைச் சாலைப் பள்ளிக்கூடம்;
வீதி வீதியாய்க் குப்பை பொறுக்கிக்கொண்டு
நாறித் திரிகிறார்கள்
குழந்தைச் செல்வங்கள்;
ஊர் சுற்றும் வாகனங்களின்
ஓய்வு நிலையமாகிவிட்டது
விளையாட்டு மைதானம்;
குப்பை பொறுக்கித் திரியும்
குழந்தைகளின் பெற்றோர்களாகிவிட்டார்கள்
மனிதர்கள்

இயற்கை மடி விட்டு எழுந்துவிடாத
அணில்களும் பறவைகளும்
புழு பூச்சி விலங்குகளும்
புல் தாவரங்களும் கடல் நுரை அலைகளும்
பால்வாடிக் குழந்தைகளும்தான்
விசாரமின்றிக் குதூகலித்துத் திரிகிறார்கள்
இந்தக் கவிதைக்கு வெளியே

கவிதையோ கைவிடப்பட்ட
துக்கத்தின் குரலெனக் காந்துகிறது
கைவிடப்பட்ட மனிதன்தானோ கவிஞனும்?
இயற்கை மடியினின்று
இறங்கிவிட்ட குழந்தையோ?
கைவிட்டதும் யார் எது எனத்
தெரிந்துகொண்ட மேதையோ?

Read more...

Sunday, December 16, 2012

அவன் வாழ்க்கை

மனைவி அவள் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கையில்
தனித்திருக்க நேர்ந்த ஒரு கணவனது போன்றதாக இருந்தது
திருமணமாகாத அந்த முதிர் இளைஞனின் வாழ்க்கை

உடலை அவன் கரங்களுக்குத் தந்துவிட்டு
எங்கோ நின்றுகொண்டிருக்கும் அவள் உயிரை நோக்கிக்
காதல் கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கும்
ஒரு துன்பியல் எழுத்தாளன் அவன்

அநீதி கண்டதிர்ந்து
தாளாமல் தற்கொலை செய்துகொண்ட நண்பர்களை
ஒருநாளும் மறக்க இயலாத புண்ணுடையோன்

விடியலின் ஒரு கதிருக்காக
காதலின் ஓர் அன்பு முத்தத்திற்காக
வாக்குறுதி அளித்துச் சென்றவனின் வருகைக்காக
இரவெல்லாம் உறக்கமற்று விழித்திருக்கும் தனியன்.
துயர்ச் சுமையாலேயே களைப்புற்ற தன் தூக்கத்தால்
வருகையைத் தவறவிட்டுவிடும் துரதிருஷ்டசாலி

Read more...

காதல் என்பது...

காதல் என்பது ஒரு சந்திப்பு
காதல் என்பது ஒரு கண்டுகொள்ளல்
காதல் என்பது இறையனுபவம்
காதல் என்பது ஒரு குதூகலம்
காதலுக்குக் காலம் கிடையாது
எந்தச் சொற்களாலும்
உணர்த்திவிட முடியாதது அது
காதல் மட்டுமே காதலை அறியும்
காதல் கொண்ட இதயத்தில்
காதல் மட்டுமே இருக்கிறது
காதலின் தனிச்சிறப்பு
அது மரணமறியாதது
அது அதீதப் பேதமையின்
பொங்கும் இன்பம்
பவுர்ணமிப் புன்னகை
வாழ்வு தன்னைத் தானே கண்டுகொண்டுவிட்ட
திகைப்புக் கொண்டாட்டம்
ஆனந்தக் கிறக்கம் தணிந்த
ஆழ்ந்த நிதானம்
பேரமைதி
மவ்னம்
மீப்பெருஞ்
செயல்பாட்டுக் களஞ்சியம்
அளப்பரிய செல்வம்

Read more...

Saturday, December 15, 2012

சொல்ல விரும்பியவை

மிதமிஞ்சிய நஷ்டங்களின் துக்க முடிவு
மீத் துயர்க் காயங்களின் முடிவின்பம்
போதுமானவை தந்த அமைதி
இவற்றில் எது ஒன்றுமில்லை அது

இந்த இருள் சூழ்வதற்குச் சற்றுமுன்தான்
மடி ததும்ப இங்கே பரவியிருந்தது
நெஞ்சைக் குளிர்விக்கும் அந்த ஒளி
அதைத்தான்
ஒவ்வொன்றிலும் அமர்ந்துகொண்டு
என்னை ரொம்பத் தெரிந்ததுவாய்க்
கண் சிமிட்டும் அதையேதான்-
எத்துணை ஆவலுடன் தான் சொல்ல விரும்பினேன்!

கீழே போய்க் காகிதமும் பேனாவும்
எடுத்து வந்து அமர்வதற்குள்
மளமளவென்று வேகமாய்க் கவிந்துவிட்டது
இந்த இருள்,
முற்றும் புரிபடாத முதல் உறவு.
ஒரு கணமும் எனைவிட்டுப்
பிரிய மனமில்லாத உடன்பிறப்பு.
அதையும்தான் சொல்ல விரும்புகிறேன்

Read more...

அது நிராதரவாய் எரிந்தபடி நின்றது

ஒருபோதும் அதனை மனிதர் கண்டுகொள்வதில்லை
காணும் தேவை ஏற்பட்டு விரும்பியதுமில்லை
தம் அற்ப ஆயுளின் அற்பத் தேவைகள்
அதன் ஆயுள்முன் ஒரு பொருட்டானதில்லையாதலால்
பதிலுக்குத் தாமும்
அதை ஒரு பொருட்டாக்காது மறுதலித்தனர்போலும்
எனினும் அவ்வப்போது அதன் பிரசன்னம் கண்டு
அஞ்சி மண்டியிட்டு ஆராதனைகள் செய்து
வேண்டுதல்களில் ஈடுபடுவதைத்
தம் அனுஷ்டானங்களாக்கிக் கொண்டு
மீண்டும் அதை நிராதரவாகவே விட்டுவிட்டனர்

மனிதர்களால் ஆகவேண்டியது அதற்கு ஒன்றுமில்லை
அதனையே ஒரு ஆசையாக நாம் உருவகித்தாலன்றி
எந்த ஒரு ஆசையும் அதன் இயல்பு அல்ல
அதன் வலிமை ஈடு இணையற்றது எனினும்
அதீத நொய்மை மற்றும் பேரறிவின் தாளாத் துயரால்
அவனை நோக்கிக் கதறியபடி நின்றது அது.
ஒரே சமயத்தில் அது அவனுக்கு மிக அண்மையிலும்
அவனைவிட்டு அவன் தொடமுடியாத தூரத்திலும் இருந்தது.
மனிதர்கள் அதற்கு ஒரு பொருட்டேயில்லாத அதன் தூரம்
அவன் கைபற்றி மண்டியிட்டுக் கதறிக்கொண்டிருக்கும் அண்மை

அவன் அதைக் கண்டு கொள்வதேயில்லை
எனினும் அவனுடைய அறிவாய் அவனிடம் புகுந்து உதவியது அது
அவனைப் பெருஞ் செல்வந்தனாக்கிய கையோடே
துயர் மிகுந்து அவனிடம் கைநீட்டி இறைஞ்சி நின்றது
தன் அழகுகளாலும் அதனால் அவனைக் கவர இயலவில்லை
என்றாலும் ஒருக்காலும் மோகபங்கடைந்து அது சோர்ந்ததில்லை
அதனுடைய ஆசையே
அதனைத் தீராப் பெருந்துயருக்குள்ளாக்கித் துன்புறுத்தியது
அதேசமயம் அது அனைத்தையும் விட்டுத் தூரே போய்
விச்ராந்தியாயிருக்கும் பான்மையையும் பெற்றிருந்ததால் பிழைத்தது

மனிதர் அதனைக் கண்டுகொள்ளாததால்
அது நிராதரவாய் எரிந்தபடி நின்றது
அதைக் கண்டவர் நெஞ்சத்தை உத்தேசித்து அவருக்காக
அது அனைத்துடனும் கூடிக் கும்மாளமிட்டபடி
தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது
மனிதர் அதனையும் கண்டுகொள்ளாததால்
மீண்டும் மீண்டும் அது நிராதரவாய் எரிந்து நின்றது

Read more...

Friday, December 14, 2012

சில அந்தரங்கக் குறிப்புகள்

நாம் கண்டது அதுவல்ல
காண்பது அத்துணை எளிதல்ல
கண்ணாடி காட்டுவது
காண்பவன் முகத்தைத்தான்
அதனை அல்ல

தொலைந்துதான் காணமுடியும்
நாமோ
தொலைத்துவிட்டுப்
பின்னரே அதனைக்
கண்டுபிடித்து விட்டதாய்க்
குதிக்கிறோம்

o

உண்மை மிக நுட்பமானதும்
எளிதில் சிதைந்து விடக்கூடிய
நொய்மையானதும் கூட
(அதன் தாத்பர்யம் மகத்தானது)
அத்தகையதை வெளியிடுவதற்கென
தகுந்த்தோர் மொழி வேண்டும்

அதுவே கவிதை

o

சிருஷ்டித்துக்கொள்
எவ்வளவு வேண்டுமானாலும்.
அவை
பேரியக்கத்தின் திறவுகோல்களாக
விக்கிரகங்களாக தியானமந்திரங்களாக
ஆகலாம்
பவுத்தம் கிறித்தவம் மார்க்சியம்
இன்னபிறவும் ஆகலாம்
எனினும் உன் சிருஷ்டிகள் அழிக்கப்படும்போது
அதற்காக ரொம்பவும் அழவேண்டியதில்லை

இயற்கை இருக்கிறது

ஆனால் உன் சிருஷ்டிகரம்
இயற்கையை அழிக்குமானால்
இயற்கைக்குப் பதிலிகளாய்
உன் சிருஷ்டிகள் வந்துதவாது
தற்கொலை செய்துகொள்ளும் உனைக் காக்க
யாராலும் இயலாது
விரைந்து வா
சிருஷ்டிகரம் என்றாலே
இயற்கையைப் பேணுதல் என்றறி

o

வாழ்வே வழிகாட்டுகிறது

ஆனால் அதைச் சொல்வதற்கு
சொற்களில்லை

சொற்களால் சொல்லப்படுகிற
எல்லாவற்றையும் அது
விலக்கி நிற்கிறது

சொல் ஒரு திரை
வாழ்வு அதை விலக்கும்

o

’நான்’ என மாட்டேன்
’நீ’ இருப்பதால்.
’நீ’ எனவும் மாட்டேன்
’நானை’யும் அது சுட்டுவதால்

’நாம்’ எனவும் முடியவில்லை
’அதனை’ அது விலக்குவதால்

ரொம்ப ரொம்பக் கஷ்டமடி
சொற்களை வைத்துக்கொண்டு
கவிஞன் படும்பாடு

o

உனக்குப் புரிகிறதா இதெல்லாம்?
துள்ளுகிறதா உன் இதயம்?
அதுதான் காதல் என்பது

காதல் என்பது இனங் கண்டுகொள்ளல் அல்ல
காதல் என்பது காணுதல் ஆகும்
தனக்குள் இருக்கும் உன்னதத்தைத்
தான் கண்டுகொள்ளல், மற்றும்
என் உன்னதத்தை உன் உன்னதம்
அல்லது உன்னதை என்னது

பிறிதெது வொன்றும் காதல் ஆகாது

o

காதலனாக இரு
வாழ்வின் மகத்தான இலட்சியம்
அதுவாக இருக்கிறது

நான் உனக்கு இப்பூமியைப்
பரிசாகத் தருவேன்
அண்ட சராசரங்கள்
அனைத்தையும் தருவேன்
பெற்றுக்கொள்ள
இடமிருக்கிறதா உன்னிடம்?
பேணிக்கொள்ளத் தெரியுமா உனக்கு?

காதல் உனக்கு வழிகாட்டும்

o

ஆயிரமாயிரம் மலர் கொண்டமைந்ததுபோல்
ஒளிரும் இம்மேடை,
இந் நிலப்பரப்பெங்கும் சிதறிக் கிடந்த
கற்களையெல்லாம் பொறுக்கிப்பொறுக்கித்
தொகுத்த செயல்பாட்டால் ஆனது

சொல்லிவைத்தாற்போல்
வானமும் முழுநிலவெய்திப் பொலிந்தது
திக்குகளெல்லாம் திகைத்து அழிய
திரைச்சீலைகளற்ற அம்மேடையில் வந்து
நடம்புரிய நின்றது காதல்

மருந்துக்கும் ஒரு சிறு கல்துண்டு
காணமுடியாத நிலப்பரப்பு
அமிர்தப் பெரும் படுகை ஆனது

Read more...

Thursday, December 13, 2012

விஷ்ணுபுரம் விருது 2012
Read more...

தேவதேவன் ஒரு பேட்டி

நவீன தமிழ்க் கலைஞர்களில் தனித்துவம் மிக்கவர் தேவதேவன். தனது கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடல்கள் மூலம் நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்க் கவிதைக்கு வளம் சேர்த்திருப்பவர். இயற்கையின் மீது அபரிமிதமான காதல் கொண்ட தேவதேவன், குழு சார்ந்தும் சர்ச்சைகள் மூலமும் தங்கள் பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முயலும் தற்காலப் படைப்பாளிகளுக்கு மத்தியில், தொடர்ச்சியான தனது செயல்பாடு மற்றும் கவிதைகள் மூலம் மட்டுமே தனக்கான இடத்தை நிறுவியிருப்பவர். இதுவரை தேவதேவன் கவிதைகள் 12 தொகுதிகளாக வந்துள்ளன.

தேவதேவன் கவிதைத் தொகுதிகள்; குளித்துக் கரையேறாத கோபியர்கள் (1976), மின்னற் பொழுதே தூரம் (1981), மாற்றப்படாத வீடு (1984), பூமியை உதறியெழுந்த மேகங்கள் (1990), நுழைவாயிலேயே நின்றுவிட்ட கோலம் (1991), சின்னஞ்சிறிய சோகம் (1992), நக்ஷத்ரமீன் (1994), அந்தரத்திலே ஓர் இருக்கை (1995), நார்சிஸஸ் வனம் (1996), புல்வெளியில் ஒரு கல் (1998), விண்ணளவு பூமி (2000), விரும்பியதெல்லாம் (2002), மேலும் கவிதை பற்றி உரையாடல் (1993, கட்டுரை); அலிபாபாவும் மோர்ஜியானாவும் (1999, நாடகம்); தேவதேவன் கதைகள் (2002) ஆகிய நூல்களும் வெளியாகியுள்ளன.


தீராநதி: நீங்கள் கவிஞராக உருவானதற்கான அடிப்படைப் பின்புலங்கள் மற்றும் சிறுவயது அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

தேவதேவன்: நான், ஒரு பிரச்சினைக்குரிய குழந்தையாகவே பிறந்தேன். கிளர்ச்சியற்ற, உற்சாகமற்ற, வாய்ப்பேச்சு அரிதான ஒரு குழந்தையாக இருந்தேன். தாங்கிக் கொள்ள முடியாத துயராக அது இருந்தது. தன்னை விடுவித்துக் கொள்வதற்கும் பிறருக்குப் புரியவைப்பதற்கும், தன்னைப் பற்றியே அறிந்துகொள்ளாத வகையிலுமான துயராகவும் அது இருந்தது. கல்வி மற்றும் வாசிப்பு தொடரும் முன்னான சிறுவயதிலேயே ‘நான் யார்?’ எனும் கேள்வி, என்னை ஆட்கொண்டது. நல்லவேளையாக அசௌகரியமான ஏழ்மைச் சூழலிலும், வேகமாக எழுதப் படிக்கத் தெரியாத எனது தந்தை, புத்தக வாசிப்பில் மிகுந்த அக்கறை காட்டியவாறு இருந்தார். ஒவ்வொரு அந்திப் பொழுதிலும், சாயங்காலம் தொடங்கி இரவு வரை, சமயங்களில் நள்ளிரவு வரையும், சிறு மண்ணெண்ணெய் விளக்கொளியில், எனது சகோதரி நாக்கு உலர்ந்து போகும்வரை புத்தகங்கள் வாசிக்கும் ஒலி, எங்கள் வீட்டில் நாள் தவறாமல் கேட்டுக் கொண்டேயிருந்தது. இதனால், என் வாசிப்பைத் தொடங்குவதற்கு முன்னேயே கணிசமான புத்தகங்களை, எனது சகோதரியின் குரல்மூலம் நான் முழுமையாகவே வாசித்து விட்டிருந்தேன். இதனால், அப்பருவத்தில் மனித வாழ்க்கையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு முன்னமேயே, புத்தகங்கள் மூலம் அதனை அறிந்தவனாகவும் சிந்திக்கிறவனாகவும் ஆகிவிட்டேன். வகைதொகை, தேர்வு அறியாதபடியான அந்த வாசிப்பில், எப்போதுமே மேலான ஏதோவொன்று என்னை ஈர்த்தபடியே இருந்தது. ஒரு கட்டத்தில் மனித வாழ்க்கையில் புத்தகங்களின் இடத்தை நான் அளவு கடந்து சிலாகித்தேன். பிற்காலத்தில் ‘கவிதை பற்றிய நூலில் அதைப் பதிந்தும் வைத்தேன். எனது இளம் பருவத்துக் கனவுகளில், போர் மேகங்கள் சூழ்ந்த பிரமாண்டமான வானத்தையும், மூச்சடக்கிக் கொண்டதுபோல், மக்கள் அரவமற்றுப் பதுங்கிக் கொண்டிருக்கும் வீதிகளின் வெறிச்சோடிய வெளிகளையும் அனுபவத்திருக்கிறேன். “ஜப்பான்காரன் குண்டுபோட்ட சமயம். அவள் என் வயிற்றில் ஏழு மாதம்” . என் இயல்பான உரையாடல்களையும் வெளியே நான் கவனித்துள்ளது என் நினைவில் உள்ளது. இன்று என் நினைவில் நிற்கும் இளம் பருவத்து வாழ்க்கை என்பது, இதுபோன்ற சிறுசிறு மனப்பதிவுகளாக மட்டுமேயாக உள்ளது.

சொந்த வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கும் கல்விக்கும் போதிய வசதியில்லாத சூழலில், வீணான சில அலைக்கழிவுகளுக்கும் தடுமாற்றங்களுக்கும் ஆளாகவிட்டமைதான் என் வாழ்க்கையில் நிகழந்த பெரும் இழப்பு என்று கருதுகிறேன். மற்றபடி, ரொம்ப இளமையிலேயே எனது சீரான பயணத்தை, குறிப்பாக, கவிதை வாழ்வைத் தொடங்கிவிட்டேன். எனது பள்ளிப் பருவச் செயல்பாடுகள் மற்றும் உறவுகளில் ஒரு கவிஞனாகவே எனது ஆளுமை வெளிப்பட்டது. நாளடைவில், அதே மனிதர்களும் சமூகமும்தான், அஞ்சியும் தங்கள் மாமூலான அவசர வாழ்க்கையாலும் ஒருவனைத் தனிமைப்படுத்தியும் விடுகின்றனர். அப்பொழுதுதான் நான் தீவிரமாகக் கவிதை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும். அது தனிமை நீக்கம் வேண்டிய ஒரு விண்ணப்பமா அல்லது விடாப்பிடியான தீரமா? அதன் உள்ளுறை இலட்சியத்தை, அதன் முழுமையான பொருளை ஒருவர் உணரத்தான் முடியுமேயொழிய அத்தனை எளிமையாக சொற்களால் விளக்குதல் அரிது.


தீராநதி: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள் யார்?

தேவதேவன்: முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள் வில்லியம் பிளேக், ராபர்ட் ஃபிராஸ்ட், எமிலி டிக்கின்ஸன், வேர்ட்ஸ்வொர்த், தாகூர் ஆகியோர். மேலும், எல்லாப் பெருங்கவிஞர்களும் என்னைக் கவர்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த மாதிரி நான் விழுந்து விழுந்து வாசிப்பேன்.


தீராநதி: குறிப்பாக உங்களைப் பாதித்த கவிஞர்கள் என்று யாராவது உண்டா?

தேவதேவன்: அப்படிச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது சரியாகவும் இருக்காது. நான் வாசித்த எல்லாப் பெருங் கவிஞர்களும் என்மீது தங்கள் பாதிப்பை அல்லது ஈர்ப்பை அளித்திருக்கிறார்கள். அவர்களது எல்லாப் படைப்புகளாலும் , நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ நான் பாதிப்படைகிறேன் என்றே சொல்லவேண்டும். மட்டுமல்லாமல், வாழ்விலும் நான் எதிர்கொள்ளும் எல்லாவற்றாலும் பாதிப்படைந்து விடுவதே எனது பிரச்னையாக உள்ளது. ஆனால், உடனுக்குடன் அனைத்தும் மறந்து விடுகிறது. என்றாலும், அதன் சாராம்சம் போலும் ஒரு கனல் அல்லது ஒரு துயர் என்னுள் தங்கிவிடுகிறது என நினைக்கிறேன். அனுபவங்கள், ஞாபகங்கள் போன்றவற்றை ஒரு சுமையென எண்ணியது போல, எப்போதுமே என் மூளை உதறிக்கொண்டே வந்துள்ளது.

தீராநதி: பிரமிளுடன் அடிக்கடி நீங்கள் ஒப்பிடுகிறீர்கள். தமிழ்க் கவிதை உலகில் பிரமிள் கவிதைகளின் இடம் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன?

தேவதேவன்: இன்றைய தமிழ்க் கவிதையின் முன்னேடி பிரமிள்தான். பிற எழுத்தாளர்கள், கவிஞர்களைவிட, தன் காலகட்டத்தின் தார்மீக எழுச்சியால் ஆட்கொள்ளப்பட்ட ஆளுமையும்கூட அவர். தன் காலத்தின் தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும் நவீனத்துவத்தையும் செரித்துக் கொண்டு முன்னோக்கிப் பாயும் வேகம், அவருடைய கவிதைகளில்தான் துவக்கம் கொண்டுள்ளது.


தீராநதி: தற்காலத் தமிழ்க் கவிஞர்களில் நீங்கள் நெருக்கமாக உணர்கிற கவிஞர்கள் யார், யார்?

தேவதேவன்: கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான எனது பெரும் தொகுப்பு நூலின் முன்னுரையில் அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். அபி,ராஜ சுந்தரராஜன், சு.வில்வரத்தினம், யூமா.வாசுகி, ஜெ.பிரான்ஸிஸ் கிருபா இவர்கள், தற்காலக் கவிஞர்களில் முக்கியமானவர்கள் என்பதே சுருக்கமான எனது மதிப்பீடு.தீராநதி: ஒரு கவிதையை எப்படிக் கட்டமைத்து எழுதத் தொடங்குகிறீர்கள்? கவிதையை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக உங்கள் சிந்தனையோட்டம் எப்படி இருக்கிறது?

தேவதேவன்: வாழ்வு நம் மீது செலுத்துகிற வன்முறையாலோ, அபூர்வமான தொடுகையாலோ உந்தப்பட்டே எல்லாக் கவிஞர்களும் கவிதை எழுதுகிறார்கள் என்பது என் அனுமானம். கவிதை எழுதத் தொடங்குவதற்கு முன், என் முன்னாலோ அல்லது அகத்துள்ளோ இருப்பது ஓர் ஆழமான துயரம்: அடிக்கடி என் மனம் வந்து சிக்கிக் கொள்கிற பாதாளம். இதனை ஒத்திசைவுக்கு ஏங்கும் ஆன்மாவின் வேதனை என்றோ, பேரொழுங்குக்கான தவிப்பு என்றோ, மனிதனின் முக்கியமான ஒரு ஜீவதாதுவில் நிகழும் கொந்தளிப்பு என்றோ நாம் கவிதை பாடலாம்தான். அந்தக் கொந்தளிப்பைத்தான் நாம் மொழிபெயர்க்கிறோம். ஒவ்வொரு கவிதையும் அதனதன் கால, இட பிரச்னைகளுக்கேற்ப தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்கிறது. ‘துயரமான இந்த இரவில் ஒரு கவிதை எழுதலாம்’ என்ற நெருடாவின் வரி, ஞாபகத்துக்கு வருகிறதல்லவா?


தீராநதி: உங்கள் முதல் தொகுப்பான, ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ பெரும்பாலும் அழகியல் தன்மையுடையதாய் இருந்தது. ஆனால், இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மின்னற் பொழுதே தூரம்’ கொள்கை ரீதியான ஒரு உரைநடைக்குள் செல்வதாய்த் தோன்றுகிறது. இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது?

தேவதேவன்: முதலில் இங்கே நான் ஒரு விபர உண்மையைத் தெளிவாக்கிக் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். எழுபதுகளின் துவக்கத்தில் நூல் வெளியீட்டு முயற்சியை நான் மேற்கொள்ளும் தருவாயில், என் கையிலிருந்தது மொத்தம் நூற்றி நாற்பத்தெட்டுக்கும் மேற்பட்ட சில கவிதைகள். இவற்றையே இரு கூறுகளாக வகைப்படுத்தி, இரு தொகுப்புகளாக்கினேன். ஒன்று: ‘மின்னற் பொழுதே தூரம்; மற்றது ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’. இவற்றில் எது முதல், எது இரண்டாவது என்று கணக்கிடுவது சரியானதல்ல. பிரசுர ரீதியில் மாத்திரமே ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ முன்னதும், ‘மின்னற் பொழுதே தூரம்’ 1970களின் துவக்கத்திலேயே வெளிவந்திருக்க வேண்டியது. அதனையே முதலில் பிரசுரிக்க நினைத்து, முயன்று, அது எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாக வெகு நீண்ட காலதாமதத்திற்குள்ளாயிற்று. அந்த இடைவேளையில்தான், ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ தொகுப்பை வெளியிட்டேன். அதிலிருந்தும் ஐந்து ஆண்டுகள் கழித்தே, 1776இல் ‘மின்னற் பொழுதே தூரம்’ வெளியானது. இரண்டுமே ஒரே காலத்தில், ஒரே பேனாவால், ஒரே மையால்தான் எழுதப்பட்டுள்ளது.

என் கவிதைகள் கொள்கை ரீதியான உரைநடைக்குள் செல்கிறது என்ற மதிப்பீடும் தவறானது. ‘மின்னற் பொழுதே தூரத்’திலுள்ள ‘வியர்த்த போதம்’, ‘வர்க்க போதம்’, ‘குற்ற போதம்’ போன்ற கவிதைகளை ஒரு சேர வாசித்தால், இது புரியும். அத்தொகுப்பிலேயே உள்ள ‘இலட்சியவாதிகளுக்கு’ என்ற கவிதை, எல்லாவித கொள்கை, கருத்தியல், இலட்சியங்களாலும் மானுட வாழ்க்கை கந்தலாகும் கோலம் அறிந்து, அதைத் தீவிரமாய் அறிவிக்கும் கவிதை… இக் கவிதை மிகமிகச் சிறந்த கவிதை என்று பிரமிளால் சுட்டப்பட்டது. கவித்துவத்தைப் பொறுத்தவரை ‘குளித்துக் கரையோறாத கோபியர்க’ளில் தொடங்கி, அது இன்றுவரை என்னிடம் மாறாத ஒரு கதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று எண்ணுகிறேன். ‘குளித்துக் கரையேறாத கோபியர்க’ளில் ஆங்காங்கே மரபுக் கவிதையின் யாப்பொலி உண்டு. யாப்பொலி, நம் உணர்வினைப் பிசிறின்றி வெளிப்படுத்தும்போது மாத்திரமே செய்யுளிலிருந்து தாவிக் கவிதையாகிறது. யாப்பை நாம் உதறுவதற்கும், பேச்சொலியைச் சார்வதற்கும் எது உயர் நியாயமாக இருந்ததோ, அதுவேதான், கவிதை உரைநடையைச் சார்வதற்கும் சமயங்களில் பொருந்தக்கூடியது என்பதே எனது அனுபவமாகும்.தீராநதி: தங்களது கவிதை உலகம் எளிமையானதாகவும் அதே சமயத்தில் அசாதாரணமான கவித்துவப் பொதுமை உடையதாகவும் அமைகிறது. எப்படி இதனைச் சாத்தியப்படுத்துகிறீர்கள்?

தேவதேவன்: உங்கள் அவதானம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கவிதை, ஒரு சொல் விளையாட்டோ, வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல; அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது. முதலில் அது அவன் வாழ்வில் ஒரு புரட்சிகரத்தை உண்டாக்கி விடுகிறது. பின்னர் அதன் அழகியல், புனைவின்றியே ஒளிரத்தக்க பெருங்காட்சியாகவும் கண்கூடான ஒரு செயல்பாடாகவும் திகழ்கிறது. முதலில் கவிதையில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டோமானால், நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ளத் தொடங்கிவிடுவோம். ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மையறிதலன்றி வேறில்லை என்ற நிலைக்குக் கொண்டுவந்து விடும். ஆளுமையின்மையெனும் பேராளுமை என்றும் நாம் அந்நிலையை சொல்லத் தகும். அப்போது நம் புறஉலகில், அகத்திலும்தான் நாம் எதைக் காண்போம்? புனைவுகற்ற எளிமையும், மானுடத்திற்கே பொதுவான மெய்மைகளையும்தானே.தீராநதி: உங்களது கவிதைகளில் துறவுத்தன்மையும் ஆங்காங்கே சிறிதளவில் காணப்படுகிறது. இது குறித்து உங்கள் பதில் என்ன?

தேவதேவன்: கடினமான ஒரு சாதனை என்பது, நமக்கு விருப்பமானவற்றை எல்லாம் விட்டுவிலகி இருப்பதுதான். இதுதானே துறவு பற்றிய நமது பொதுப் புத்தியிலுள்ள படிமம்? ஆனால், துறவு பற்றிய சரியான சிந்தனை அல்ல அது. மெய்யான துறவு என்பது, எவ்வித இழப்புணர்வும் இல்லாத ஒரு பெருநிலை. மெய்மையை நோக்கியவாறு பொய்மைகளைக் களைதல், ஒரு போர் வேட்கையின் முன் சிறுசிறு விருப்பங்கள் உள்ஒடுங்கிப் போதல். இது மதவாதிகளின் அனுஷ்டானங்களில் உண்டாவதில்லை. இப்பெருநிலைக்குள் எல்லாவித உலக சுகங்களும் புலனின்பங்களும் இருக்க முடியும். ஆனால், தன்மயமான விருப்பங்களின் இன்பத் தேட்டங்களில் அச்சமும் பதற்றமும், போட்டியும் பொறாமையும், சச்சரவுகளுமே சாத்தியம். மதவாதிகளுடையது தன்மயமற்றது என்று சொல்வதற்கில்லை. துறவு என்பது கவிதையோடும் அழகோடும் நெருங்கிய தொடர்புடைய ஒரு சொல். ஆன்மிகத்தை ஆபாசப்படுத்துவிடுகிற மதவாதிகளாலேயே துறவு என்ற சொல்லும் ஆபாசப்படுத்தப்பட்டு விடுகிறது. கவிஞனின், மனிதனின் தன்னைத் துறந்து யாவுமாகி நிற்கிற ஏகாந்த நிலையே, பெருநிலையும் துறவு நிலையும் ஆன்மிகமானதும் கவிதை அவாவக் கூடியதும் அல்லவா? மேலும், துறவி என்றொருவன் இருக்க முடியாது. துறவு நிலை என்பதுவே இருக்க முடியும் என்பதையும் வற்புறுத்த வேண்டும். நம் கவிதைகளில் துறவுத்தன்மை காணப்படுவது வியப்பானதே அல்ல.தீராநதி: பிற்காலங்களில் சில அரசியல் கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்; சில தலித் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்கூட, இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

தேவதேவன்: தீராத எனது தாகமும் அதிருப்திக் கனலுமேயன்றி வேறு என்னவாக இருக்கமுடியும்? எனது முதல் தொகுப்பான ‘மின்னற் பொழுதே தூரம்’ தொகுப்பும், ஒரு வகையில் அரசியல் கவிதைகள் அடங்கியதுதான். ஆன்மிகமான தரிசனங்கள் எல்லாமே ஆழ்மையான அரசியலின் பாற்பட்டதே என்பது என் அனுபவம். அக்காலங்களில், உலக நன்மை குறித்த ஓர் அரசியல் மீது அக்கறை கொண்டபடியே, பிரிவினைகளும் அதிகார வேட்கைகளும் கொண்ட அரசியலை அவதானித்தபடியும் நண்பர்களிடையே சச்சரவிட்டபடியும் நான் இருந்தேன். ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ தொகுப்பிலுள்ள ‘மறுபடியும் புரட்சி மரத்துப் போச்சு’ என்ற வரியினையுடடைய ‘அவரைப் பந்தல்’ கவிதை, நமது வருத்தத்தையும் அக்கறையையும் கூறும் ஓர் அரசியல் கவிதைதான். எனது மூன்றாவது தொகுப்பான ‘மாற்றப்படாத வீடு’ கவிதைகளையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தச் சமூகம் மாற்றப்பட்டேயாக வேண்டிய சமூகம் என்பதில், சுரணையுள்ள ஒருவனுக்குத் துளிகூட மாறுபாடு இருக்க முடியாது. சமூகம் தற்போது தருகிற சௌகரியமான இருக்கைகளில் அமர்ந்து கொண்டே, புரட்சி, சீர்திருத்தம் பேசுவபர்களால் தான் சமூக மாறுதல் சாத்தியமற்றுப் போய்க் கொண்டேயிருக்கிறது. இந்தச் சமூகப் பிரச்னையே, தன் சொந்தப் பிரச்னையாகவும் ஒருவனால் உணரப்படுகையில்தான் அவனிடமிருந்து அரசியல் கவிதைகளும் பிறக்கின்றன. கவிதையென நம் மனம் கற்று வைத்திருந்த அழகியல் காரணமாகவே அத்தகைய கவிதைகள் அரிதாகவும் இருக்கிறது. ஆனால், அரசியலும் அக்கவிதைகளில் மறைபொருளாகவும் நுண்பொருளாகவும் இருந்துவிடுகிறது. எனது பிற்காலக் கவிதைகளில் வெளிப்படையானதும் நேரடியானதும் தீரமானதுமான ஓர் அரசியல் பார்வை உள்ளது என்பது உண்மைதான். பிறிதொரு அழகியலோடுள்ள நல்ல அரசியல் கவிதைகளை நான் வாசித்தும் அனுபவித்தும் கற்றுக்கொண்டமையே அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.


தீராநதி: இளம் பருவத்திலேயே நான் யார்? எனும் கேள்விக்கு ஆளாகியிருக்கிறீர்கள். தன்னை மையமாகக் கொண்ட இக்கேள்விகள், மனிதனின் அகங்காரத்தினின்று எழுகிற ஒன்றில்லையா? இதுவே, ‘இப்பூமியின் மையம் நானே’ என்று இப்பூமியை மனிதன் சிதைப்பதற்கும் இயற்கையில் நிகழ்ந்த சகல சமன்குலைவுகளுக்கும் காரணமாகி விட்ட ஆரம்பக் கோணல் இல்லையா?

தேவதேவன்: இப் பூமியிலுள்ள உயிரினங்களிலேயே, ஒரு கோணத்தில் அபூர்வமான தனிச் சிறப்புள்ள ஓர் உயிர், மனிதன்தான் என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அந்தத் தனிச் சிறப்பு தான் பிரக்ஞை மற்றும் மெய்மையறிதல். மனிதனின் முதல் பிரக்ஞை ‘நான்’ என்பதையே ஒரு கவிதை வரியாக எழுதியிருக்கிறேன். அது தன் தொடக்கத்திலேயே மையமற்றதும், அப்படி ஒரு மையம் இருக்கும் பட்சத்தில், அம் மையத்தை உதறுவதற்காகவே எழுந்த பிரக்ஞையுமாகும். மனிதன் பிரச்னைக்குள்ளாகும் போதெல்லாம், ‘நான் யார்?’ எனும் விசாரமே அவனது விடுதலைக்கான அறிவை அவனுக்குக் கொடுக்கிறது. மற்ற வேளையில், அதாவது விடுதலையான நிலையில், அவன் யார்? எதிரேயிருக்கும் நீங்களாகலாம், ஒரு புழுவாகலாம், இந்த மரம் ஆகலாம், ஒரு புல் ஆகலாம், துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணாகலாம், மொத்த மானுட குலத்தாலுமே வஞ்சிக்கப்பட்ட ஏழையாகலாம். யாதும் ஆகலாம். மானுட குலத்தின் முக்கியமான அனுபவம் இதுதான். அறமும், அன்பும், கருணையும், பேரறிவும், இயற்கை வெளிக்காட்டும் பேரெழிலும், பெருங்களிப்பும் ஊற்றெடுக்கும் இடம் இது. எல்லாவற்றுள்ளும் எல்லோருள்ளும் தன்னைக் காணும் பேருள்ளம் அது. இந்நிலைக்கும், மனிதன் சுயநலத்தாலும், பேராசை வெறியாலும், மூடத்தனத்தாலும் இயற்கையைச் சீர்குலைத்துள்ளமைக்கும் நேர்மாறான சம்பந்தமல்லவா உள்ளது.தீராநதி: உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவை ஒரு தரிசனத்தைக் கூறுவதாக உள்ளன. நீங்கள் கற்றறிந்த தத்துவப் பயிற்சி ஏதும் இதற்குக் காரணமா? கவிஞனுக்குத் தத்துவப் பயிற்சி தேவை என்று கருதுகிறீர்களா?

தேவதேவன்: நிச்சயமாக இல்லை. அவனிடமிருப்பது அனுபவ ஊற்று; இடையறாத மெய்மையறிதல்; உயிர்த் தழல் என்பதால் அது அவனுக்குத் தேவையில்லை. எனினும், எல்லாமும் அவன் மீது வந்து விழுகிறதே, எறியப்படுகிறதே, அவற்றை என்ன செய்வது? அறிவாக, உலகில் இதுவரை என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதெல்லாமே ஓர் ஆசையின் காரணமாக, நம் வாசிப்பிற்குள் வந்துவிடுகிறது என்றாலும் கூட, கவிஞன் மெய்மையையே உணர வேண்டியவனாக இருக்கிறான்.மெய்மையறிதல் ஒரு தத்துவம் அல்ல. தத்துவம் ‘பிலாஸபி’ என்னும் ஆங்கிலச் சொல்லின் கிரேக்க மூலத்திற்கு ‘உண்மையைக் காதலி’ என்றுதான் பொருள்.


தீராநதி: நவீன தமிழ்க் கவிஞர்களில் ஆரோக்கியமான, மரபின் தொடர்பு அறுபடாத முக்கியக் கவிஞர்களுள் ஒருவராக நீங்களும் குறிப்பிடப்படுகிறீர்கள். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இதன் பின்புலம் என்ன?

தேவதேவன்: ஆங்கில இலக்கியங்களுக்குப் பின்புலமாய் அமைந்த கிரேக்க அழகியலும், கிறிஸ்தவ இறையியலும் கூட, இன்று நம் மனதைப் பறித்துக் கொண்டுள்ளதாமே? எனது கவிதைகள் சங்க இலக்கிய மரபோடும், பக்தி இலக்கிய மரபோடும் அடையாளம் காணப்பட்டுப் பேசப்படுகின்றன. புனித கவிஞர்களோடும் இந்திய ஆன்மிக மரபோடும் அது தொடர்பு காட்டுவதை உணர்ந்த கையோடே, அது கிரேக்க அழகியல் மரபோடும், அராபிய இறைவீர மரபோடும் தொடர்பு காட்டுவதும், இன்னும் இப்படியே நாம் பார்த்துக் கொண்டுபோனால் பிறநாட்டு முக்கிய மரபுகளோடும்கூட, அது தொடர்பு காட்டக்கூடும் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. ஆன்மிகமான பேரனுபவங்கள் எல்லாமே, தன்னியல்பாகவே மானுடகுலம் முழுமைக்கும் சொந்தமானதாக இருப்பதாலேயே, அது உலகின் அனைத்து மரபினுடைய தொடர்ச்சியாகவே காட்சியளிக்கிறது. இதில் ஒரு அதிசயமும் இல்லை. மெனக்கெடலும் இல்லை என்பதே என் கருத்து.


தீராநதி: இறைவழிபாட்டுக்கு மாற்றாக அந்த இடத்தில் இயற்கை வழிபாட்டை முன்வைக்கிறது உங்கள் கவிதை. கவிதை இயக்கம் என்று கூறலாமா?

தேவதேவன்: முதலில் நமது கவிதை இயக்கத்தின் அடிப்படை எந்தக் கருத்தியலும் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன். எல்லாக் கருத்தியல்களுமே மனிதனைப் பேராபத்தில் கொண்டே முடிக்கக் கூடியது என்பதை நாம் அறிவோம். எல்லாக் கருத்தியல் கொடுங்கோன்மைகளையும், நாம் நம் அகத்திலிருந்தும் நம் புறத்திலிருந்தும் அகற்றிய பிறகு, கண்கூடாக நம் எதிரே இருக்கும் இயற்கை வெளியைத்தான் மெய்மை என்றறிகிறோம். இயற்கையைக் கண்டுகொள்ளுதலும் அதன் அருமையுர்ந்து பேணுதலுமே உண்மையான நமது மதம் ஆகிறது. இந்தப் போக்கில்தான் நிகழ்கால வாழ்வையும் பிரச்னைகளையும் நாம் எதிர்கொள்கிறோம்.


தீராநதி: கவிதைதான் கலைவடிவங்களில் மிக உயர்ந்தது என்று முன்பு ஒருமுறை சொல்லியுள்ளீர்கள். இதனை இப்போது விளக்க முடியுமா?

தேவதேவன்: கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு அப்படிச் சொல்லியிருப்பேன். உயர்ந்ததைத்தான் கவிதை என்று சொல்கிறோம் என்று புரிந்து கொண்டால், அந்தக் கேள்வி தெளிவு பெற்றுவிடுகிறது. ஆனால், அப்புறம் உயர்ந்தது, மேன்மையானது எது, என்ன என்ற கேள்வி. சரியான கேள்வி அதுதான். ஒவ்வொரு கவிதையும் அதையே உணர்த்த முயல்கிறது. விளக்க முடியாததும், ஆனால், சொற்களால் விளக்கி ஆக வேண்டியதுமானது அந்த மேன்மையையே.தீராநதி:பல காலகட்டங்களிலும் குழு மனப்பான்மை குறித்து கடுமையான விமர்சனங்களைக் கூறி வந்திருக்கிறீர்கள். எப்போதும் அமைப்பாகி விடாத ஓர் இயக்கத்தை நீங்கள் முன்னிறுத்துவது தெரிகிறது. உங்கள் சொந்த வாழ்க்கையில், நீங்கள் இதுவரை ஒரு அமைப்போடும் உங்களைப் பொருத்திக்கொள்ளவில்லையா? ஓர் இயக்கமாகக் கடி எதையாவது செய்ய முயன்றதில்லையா?

தேவதேவன்: குடும்பம் என்பதும் ஓர் அமைப்புதான்; நண்பர்கள், சுற்றம், ஜாதி, இனம், மதம், கொள்கை, கட்சி, தொழிற்சங்கம் இவைகளும், மனிதர்கள் குழுக்குழுவாக வாழ்கிறார்கள் என்பதை ஒரு துயர்தொனிக்கும் கூற்றாகக் கூறி வந்திருக்கிறேன். துளியும் நஞ்சை விளைவிக்காத இயக்க நிலையும் அமைப்பு நிலையும் நம்மிடையே ஒரு கவிக் கனவாகவே உள்ளது. மனிதர்களுக்கு அது ஏன் மிகக் கடினமான காரியமாக இருக்கிறது? என் வாழ்வின் உற்சாகமான ஓர் கால கட்டத்தில், அதாவது நான் கவிதை எழுதத் தொடங்கிய துவக்க காலத்தில், நாடகம், இலக்கியம், சினிமா, நாட்டியம், இசை, ஓவியம் எனக் கலைகள் மீது ஆர்வமும் கவனமும் செலுத்தத் தொடங்கியபோது, ‘தர்சனா’ என்னும் திரைப்படக் கழகத்தைத் தொடங்கினோம். சிறந்த செயலாளனாக இருந்த ஒரு நண்பனின் பண்பையும் துணை வலியையும் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, ஒரு கனவு உருவாயிற்று. அந்தத் திரைப்படக் கழக இயக்கத்தையே ஆதார நம்பிக்கையாகக் கொண்டு, கலைகள் மீதும், மானுட மேன்மை மீதும் தாகம் கொண்டுள்ள நுண்ணுணர்வாளர்களை எல்லாம் கூட்டிச் சேர்த்து, ஒரு சமூகமாக வாழும் ஒரு மாதிரிக் கிராமத்தை உண்டாக்கத் திட்டமிட்டோம். ரொம்ப நல்ல அனுபவம் அது. அது நிறைவேறவில்லை. இந்த நிறைவேற்றமின்மையை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுகிறேன். இப்போதும் நம் குடியிருப்புகளுக்கெல்லாம் வெளியே போய், தூய காற்றும், புத்தம் புதிய நிலப்பரப்புமாய் விருப்பமான வழியில் புது வாழ்வை அமைத்துக்கொள்ளக் கிடைக்கிற சுதந்திரமான வெளியிலும் கூட, மனிதர்கள் எப்படி தங்கள் வீட்டினை சமூகத்தை அமைத்துக் கொள்கிறார்கள்? வழக்கமான நோய்களை எல்லாம் பரப்பக் கூடிய, தங்கள் நூற்றாண்டுப் பழமையுடைய அழுக்கு மூட்டைகளுடனேயே அங்கேயும் போய்க் குடியிருக்கிறார்கள். இந்த மனிதர்களை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.


தீராநதி: நீங்கள் வாழும் தூத்துக்குடி நகரம் குறித்த உங்கள் மனப்பதிவுகள் என்னவாக இருக்கிறது?

தேவதேவன்: நிலாவொளியில் ஒளிரும் மடிப்பு மடிப்பான அழகிய மணல் தேரிகளுடைய நிலக்காட்சியை, நான் இங்கே என் இளமையில் கண்டு காதல் வயப்பட்டிருக்கிறேன். இன்று கட்டடங்கள் அவற்றை முழுமையாக விழுங்கிவிட்டன. உலகின் எப்பகுதியிலுள்ள மனிதர்களானாலும் அவர்களுடைய பிரச்னைகள் ஒன்றுபோலவே உள்ளன. எனக்கு, அழகிய இப்பூமிப் பரப்பில் ஒரு சிறுபகுதி நிலம்தான் தூத்துக்குடி என்பதைத் தவிர, அதன் மீது தனிப்பட்ட கவனமோ, பாசமோ, அக்கறையோ இல்லை. இங்கே கடற்கரையோரத்தில் வாழும் மீனவர்களைத் தவிர, மற்றவர்கள் பூர்வகுடிகள் அல்லர். தொழிற்சாலைகள், நூற்பாலைகள், உப்பளங்கள், துறைமுகம், மீன்துறை என ஏற்பட்டு, பிழைப்புத் தேடி, இங்கு பணி செய்வதற்காகவே பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் வந்து குடியேறியவர்களாலான ஒரு குடியேற்ற நகரம்தான் தூத்துக்குடி. நெய்தல் நில மக்களுக்கும்கூட இந்தியாவின் எல்லாக் கடற்கரைகளுமே ஒன்று போலவே, வேற்றுணர்வை அளிக்காத காதல் தளங்களாகவே இருக்கும் என்பதே நினைப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது.

Read more...

தேவதேவனின் பரிணாமம்

தேவதேவனின் அசல்பெயர் பிச்சுமணி கைவல்யம். அவருக்கு இப்பெயரை வைத்தவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர். தேவதேவனின் தந்தை பிச்சுமணி படிப்பறிவில்லாத கூலித் தொழிலாளி. தாய் பாப்பாத்தியம்மாவிற்கும் படிப்பு இல்லை. ஈ.வெ.ரா. மீது பிச்சைமணி கொண்ட ஈடுபாடு ஒருவகையில் அறிவின் மீதான ஈடுபாடாக இருக்கலாம். தேவதேவன் பள்ளியிறுதி வரை மட்டுமே படித்தார். வேலைக்கான தேடலுக்குப் பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்தார். ஆயினும் வேலை கிடைக்கவில்லை. சிறிது காலம் அச்சகம் வைத்திருந்தார். கேரளத்தில் சிறுவேலை ஒன்றில் சிலகாலம் இருந்தார். உடலுழைப்பு வேலைகளில் ஈடுபட்டார். அவருடைய 33-ம் வயதில் ஆசிரியர் வேலை கிடைத்தது.

தேவதேவனின் பூர்வீக ஊர் கோவில்பட்டி அருகே இ.ராஜாகோயில். தாயின் பூர்வீகம் அருகே வேடப்பட்டி. தந்தை தன் 19-ஆம் வயதில் மில் வேலைக்காகத் தூத்துக்குடிக்கு வந்தது முதல் தூத்துக்குடியே சொந்த ஊர். அழுக்கும் நெரிசலும் நிரம்பிய இந்தத் துறைமுக நகர்மீது தேவதேவனுக்கு வெறுப்பும் ஈடுபாடும் உள்ளது. தேவதேவனின் உறவில் கணிசமானவர்கள் இலங்கைக்குக் கப்பலேறிச் சென்று மறைந்து போனார்கள். அவர்கள் ஞாபகமாகச் சில இலங்கை பாணி மரப்பொருட்களும் ஒரு மூட்டை தூக்கும் ஊசியும் அவர் குடும்பத்தில் இருந்தன.

5-5-1948-ல் பிறந்த தேவதேவன் தூத்துக்குடி கோயில்பட்டி பகுதிக்குப் பொதுவாக உள்ள கரிய நிறமும் திராவிட முக அமைப்பும் உடையவர். வயதுவந்த காலம் முதல் தாடி உண்டு. இப்போது அதில் நரையோடியுள்ளது. தலையின் இலேசான முன்வழுக்கைக்கு அது மிகவும் பொருத்தமாகத் தெரியும். தயங்கியும், நடுவே யோசித்தும், குழப்பங்களுக்குள்ளாகியும் தான் அவரால் பேச முடியும். மெலிந்த சன்னமான குரல். வாழ்வின் பல்வேறு நுட்பங்கள் பற்றி அவரால் பேசமுடியும். ஆனால் அவற்றைத் தன் கவிதைகளினூடாகவே நிறுவுவார். இதனால் தன் கவிதைகளைப் பற்றி மட்டும் பேசுபவர் என்ற குற்றச்சாட்டு அவர்மீது உண்டு. உற்சாக அரட்டைகளில் பொதுவாக அவருக்கு ஈடுபாடு இல்லை. அரசியல் தருக்கங்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றிலிருந்து மௌனமாக ஒதுங்கி விடுபவர். எனவே பெரும்பாலும் நண்பர் கூட்டங்களில் அவர் மௌனமாகவே இருப்பார். ஆனால் விசேஷமான நகைச்சுவை உணர்வு உண்டு. மதிநுட்பம் தெரியும் விஷயங்களை விட குழந்தைத்தனமான விஷயங்களில் தான் அவர் உற்சாகமடைவது வழக்கம். சிலவருடங்களுக்கு முன் சின்னம்மை நோய் அபாயகரமாக முற்றி மரணமுனை வரை சென்று திரும்பினார். இன்றும் அவர் உடல்நிலை பயத்திற்கு ஏற்றதல்ல எனினும் மானசீகமாக ஒரு கற்பனை வனத்தில் அவர் வசிக்கிறார் என்பது பேச்சில் தெரியும்.

தேவதேவனின் தனிப்பட்ட ருசிகளிலும் இயல்பான மென்மை தெரியும். அவர் கவிதைகளில் தெரிவது போலவே மரங்கள், சிறு உயிரினங்கள், குழந்தைகள் மீது அலாதியான ஈடுபாடு அவருக்கு உண்டு. அவை பற்றிப் பல மணிநேரம் பேசத் தயங்க மாட்டார். எளிய உணவுப் பழக்கங்கள் உடையவர். பழங்கள் – குறிப்பாக பப்பாளிப் பழம் – மீது பிரியம் உண்டு. அசைவ உணவு உண்பதில்லை; முட்டை உள்பட அசைவம் உண்பதில் கருணையின்மை மட்டுமல்ல ஒருவகை ‘ஒழுங்கின்மை’யும் உண்டு என உணர்கிறார். தேவதேவனின் குலதெய்வம் செட்டியாபத்து சோலையப்பன் அனந்தம்மாள். அங்கு ‘ஆத்தி’ (பன்றி) வளர்த்து பலி தருவதுண்டு. எனவே கடவுளுக்கு ஆத்தியப்பன் என்ற பெயரும் உண்டு. பல்வேறு காரணங்களினால் தேவதேவன் குடும்பம்,குலதெய்வத்திலிருந்து விலகி வந்துவிட்டது. அவரது தந்தையின் நாத்திக வாத ஈடுபாடு முதல் காரணம். பண்டிகைகள், வழிபாடுகள் எதையும் அவர் குடும்பம் கொண்டாடியதில்லை. தேவதேவன் நாத்திக வாதத்தின் மையத்திலிருந்து முற்றிலும் கடவுள் சாராததும் முழுமையாக இயற்கை சார்ந்ததுமான ஒரு ஆன்மீகத்தைக் கண்டடைந்து கொண்டதாகவும், அதுவே தன் மதம் என்றும் கூறுகிறார்.

மிக இளமையிலேயே தேவதேவன் படிக்க ஆரம்பித்து விட்டார். படிப்பு ஒரு வெறியாக வெகுகாலம் இருந்துள்ளது. புனைகதைகள், தத்துவ நூல்கள், பண்டை இலக்கியங்கள் என அவரது ஈடுபாடு பெரியது. படிப்பு பற்றிய குறையுணர்வு ஏதும் இப்போது இல்லை. முறையான கல்வி இருந்தால் இவ்வளவு படித்திருக்க முடியாதோ என்ற எண்ணமும் உண்டு. தோரோ மீதான ஒரு ஈடுபாடு பல வருடங்களுக்குத் தேவதேவனைத் தொடர்ந்திருக்கிறது. பிரமிள் தொடர்பால் ஜெ.கிருஷ்ணமூர்த்தி மீது ஆர்வம் ஏற்பட்டது. பிரமிள் தன்னிடமுள்ள முக்கியமான நூல்கள் பலவற்றைத் தனக்கு அளித்தது மிக உதவியாக இருந்தது என்று குறிப்பிட்டார். நவீன புனைகதையாளர்களில் தல்ஸ்தோஸ் மீது ஈடுபாடு, பழைய மரபில் பக்தி இயக்கத்தைச் சார்ந்த கவிதைகளில்தான் தனக்கு முதல் ஆர்வம் என்கிறார். குறிப்பாக ஆண்டாள். ஆண்டாளின் வாழ்வும் கவிதையும் தன்மை வெகுகாலம் மீட்டியதாகக் குறிப்பிடுகிறார். ஆனால் பெருங்காப்பியங்கள் எதுவும் தன்னை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வசீகரிக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். தன்னுடைய படிப்பு ஒருவகையில் தன் பெயரை – கைவல்யம் – அர்த்தப்படுத்துவதற்கான தேடல் என்று அவர் குறிப்பிட்டதுண்டு.

தேவதேவன் மனைவி பெயர் சாந்தி.இரு குழந்தைகள். மூத்தவள் அம்ருதாவிற்கு சமீபத்தில் மணமாகியது.. இரண்டாமவன் அரவிந்தன் பொறியியல் முடித்துப் பணியாற்றுகிறார். குடும்பத்தின் மீதும், தூத்துக்குடி மணி நகரில் சொந்தமாகக் கட்டிய வீடு மீதும் மிகுந்த பிரியம் அவருக்கு உண்டு. அதை உலகியல் என்பதை விட உலகியலினூடாக அதைத் தாண்டும் மனவிரிவுக்கான பாதை என்றே அவர் கொள்கிறார். விலாசம் தேவதேவன், 4-5 மணிநகர், தூத்துக்குடி, 628003, தமிழ்நாடு. தேவதேவன் தனிமை விரும்பி. ‘நோயாளிக்கு ஓய்வு போல எனக்குத் தனிமை மிக அவசியமானது’. குடும்பத்தின் நடுவே தனிமை!

தேவதேவனின் முதற்தொகுதி ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ 1974-இல் வெளியாகியது. அதில் துவக்க காலக் கவிதைகள் உள்ளன. இத்தொகுதி சுந்தர ராமசாமியின் முன்னுரைக்குச் சென்றது. தொகுப்பு பொருட்படுத்தும்படி இல்லை என்று ராமசாமி மறுத்துவிட்டார். பிரமிள் முன்னுரையுடன் அது வெளிவந்தது. பிற்பாடு தேவதேவனில் முன்னிற்கப் போகும் சில கூறுகளை அத்தொகுப்பில் பிரமிள் அடையாளம் கண்டிருந்தார். இன்றைய என் வாசிப்பில் அந்த தொகுப்பில் நல்ல கவிதை என்றும் எதுவும் கிடைக்கவில்லை. உலகியல் சார்ந்த – போகம் சார்ந்த – ஒருவகைக் கற்பனாவாதமே அத்தொகுப்பில் உள்ளது. கவிதைகளில் பெரும்பாலானவை தன்னிலை வெளிப்பாடுகள்.

ஆனால் இத்தொகுப்பில் சில சிறப்பம்சங்கள் தெரிகின்றன. தமிழின் நவீனத்துவ கவிதைகளின் உலகிலிருந்தும், மார்க்ஸியப் புரட்சிக் கவிதைகளிலிருந்தும் வெகுவாக விலகி பக்தியிலக்கிய மரபுடன் தன்னை அடையாளம் கண்டபடி இவை தனித்து நிற்கின்றன. முன்னோடிகள் இல்லாத பயணம் என்பதே இவை தோல்வியடைந்தமைக்கும் காரணம் போலும். பிரபஞ்சத்தை இவை ஒரு பெரும் காமலீலையெனக் காண முயல்கின்றன. அதேபோல மானுட காமத்தைப் பிரபஞ்சப் பேரியக்கத்தின் குறியீடாகவும் காண்கின்றன. மனித உடலைப் பிரபஞ்சமாகவும் பிரபஞ்சத்தை மனித உடலாகவும் காண்பது இந்திய மரபின் அமைப்பு முறைகளில் முக்கியமானது. நமது படிமப்பேருலகு இதன் மூலம் உருவானது. இந்த அம்சத்தைத் தேவதேவனில் காண்கிற பிரமிள் ‘பாலுணர்வின் விஷய விபரங்களை இயற்கையின் விகாசமாகக் காண்கிற கருக்களம்’ என்று இக்கவிதைகளை அடையாளப்படுத்தி, இவை தமிழின் அகத்துறைக் கவிதைகளுக்கு இட்டுச் செல்லக் கூடியவை என்கிறார்.

(இக்கட்டுரை எழுதப்பட்ட பிறகு 1998 செப்டம்பர் 30-இல் குற்றாலம் விமரிசன சந்திப்பில் ரமேஷ் – பிரேம் வாசித்த கட்டுரையில் இவ்வியல்பைப் பின் நவீனத்துவ கவிதையின் முக்கியமான இயல்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்தேன். இவற்றை இவர்கள் ஐதீகக் கவிதை என்கிறார்கள். நமது பழைய தாந்திரீக மரபுக் கவிதைகளை இவ்வரிசையில் சேர்க்கலாமா என்று கேட்டேன். சேர்க்கலாம்; ஆனால் அவற்றில் முழுமுற்றான முடிவாக இறைமை அல்லது பிரம்மம் உள்ளது. அது முக்கியமான ஒரு வேறுபாடு என்றார்கள். மேற்கத்திய பக்திக் கவிதைகளில் உள்ளது போன்றோ இந்திய பக்தி காலகட்டத்துக் கவிதைகளில் உள்ளது போன்றோ முழுமுற்றான முடிவு நமது தாந்திரீகக் கவிதைகளில் இல்லை என்று நான் கூறினேன். திருப்புகழ், சித்தர் பாடல்கள் முதலியவற்றில் உள்ள ‘சிவ’மும், ‘முருக’னும் இறுதி விடைகளாக அல்ல, ஒருவகை முன்னிலைப் பெயர்களாகவே பல சமயம் முன் வைக்கப்படுகின்றனர். அதற்கான சமூகத் தேவை அவற்றுக்கு இருந்தது போலும் என்றேன் விவாதம் நீண்டு போயிற்று.)

அதேசமயம் இக்கவிதைகளில் தெரிவது ஒருவகை தத்தளிப்புத்தான். மரபின் தீவிரமான சாயலுடன் சமகாலத்தைப் பார்க்கும் கவிமனம் தேடுவது இன்னது என்றறியாமல் அலைமோதுகிறது. புற உலகை முழுமையாகச் சுயபடிமங்களாக மாற்றிவிட முடியுமா என்று ஏங்குகிறது. பெரும்பாலும் அம்முயற்சி அர்த்தமற்ற தாவலாகவே எஞ்சுகிறது. படிமங்கள் வெறும் உவமைகளாக நின்றுவிடுகின்றன. கவித்துவ மன எழுச்சியின் பாற்பட்டதாக இன்றி மனக் கிளர்ச்சியின் வெளிப்பாடாகவே இவை உள்ளன. எனவே இவற்றுக்குக் கவித்துவ ஒருமையும் கைகூடவில்லை.

’அவிழ்த்துப் போட்ட சேலையாய்
பாறையில் படர்ந்த கொடிகள்
காற்று பிடித்து
இழுத்துப் போட்ட சட்டையாய்
தரையில் பூத்த செடிகள்’
என்பது போன்ற அர்த்தமற்ற படிமங்களும்
’தனிமைக் குளத்தில் இறங்கினான்
கொஞ்ச நேரத்தில் குஞ்சுமீன்கள்
கூட்டமாய் வந்து
மொய்த்தன தனிமையை’

என்பது போன்ற ஒலியொருமை கூடாத சொல்லாட்சிகளும்

’ரசனைக் கொடி தழைத்து
மலர்ந்தது ஒரு கலைத் தாமரை’

போன்ற செயற்கையான சொற்றொடர் உருவாக்கங்களும் சேர்ந்து உருவாக்கிய இத்தொகுதி தேவதேவனைச் சற்றும் நமக்கு காட்டுவதில்லை என்றே கூற வேண்டும்.

தேவதேவனின் இரண்டாவது தொகுப்பில் சட்டென்று குரல் மாறுபடுவதைக் காணலாம். ‘மின்னற் பொழுதே தூரம்’ என்ற தலைப்பே பல வகையிலும் மொழியினூடாக தேவதேவனின் தேடும் மொழியின்மையைச் சுட்டிக் காட்டுகிறது.

’நேற்றைய பாக்கிகள்
நேற்றைய ருசிகள்
ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும்
நாளைய திட்டங்களும் கூட’

என்று தன்னை விடுவித்துக் கொள்கிறது அவர் கவிதை. ‘கணங்களில் அமிழ்ந்து’ இன்றில் திளைப்பதே விடுதலை என்ற பிரக்ஞையும் இவர் கவிதைகளில் இத்தொகுப்பில்தான் துவங்குகிறது. முதல் தொகுப்பில் உள்ள முதிர்ச்சியற்ற நடைக்குப் பதிலாக உள்ளழுத்தமும் மீறலும் கொண்ட மொழிநடை இத்தொகுதியில் உள்ளது. இத்தொகுதியில் உள்ள எல்லாக் கவிதைகளிலும் கவிதை என்ற ‘சாதனம்’ மூலம் (சாதனம்: நம் யோக மரபின் அர்த்தத்தில்) எதை நோக்கி நகர்வது என்பதில் தேவதேவனுக்கு ஏற்பட்டுள்ள தெளிவை இத்தொகுதி காட்டுகிறது. முதல் தொகுதியில் இருந்த

’மேலே தெரியும் சூரியன்
புடவை வியாபாரியாய்
உதறிக் காட்டுவான்
தன் சரக்குகளை’

என்பது போன்ற உள்ளீடற்ற உவமைகளுக்குப் பதிலாக

’இரை பொறுக்கவும்
முட்டையிடவும் மாத்திரம்
பூமிக்கு வந்தமரும்
வான்வெளிப் பறவை ஒன்று’

போன்ற அபாரமான படிமங்கள் விழுந்து பல்வேறு மனத்தளங்களில் பிரதி பலித்துச் செல்கின்றன.

தேவதேவனின் முதல் தொகுதியின் மொழி தட்டையாகவும் குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவப்பட்டதாகவும் உள்ளது. இரண்டாம் தொகுதியில் சொற்கள் வானம் பிரதிபலிக்கும் ஆடிகள் ஆகிவிடுகின்றன. முதல் தொகுதியின் ஆகச் சிறந்த வரிகள் இவை:

’கடல் நீலம் விம்மி அலைக்கும்
பூமி மீது
கொக்கு பூத்த வயல்கள் சிலிர்க்கும்
புரண்டு திரிந்து ஆட அழைக்கும்
பொன்மணல் காடு மின்னும்’

இவ்வரிகளில் மொழி கவிமொழியாக மாறித் தன்னைச் சிதறடித்து விரிகிறது. ‘கொக்கு பூத்த வயல்’, ‘பொன் மணல் காடு’ போன்ற சொல்லாட்சிகளைப் பகுத்து பிரித்துப் பொருள் கொள்ள முயலும் மனம் அர்த்தமின்மையையே அடையும். ஆனால் இவ்வரிகளைக் கவித்துவம் பற்றிய பிரக்ஞையுடன் படிக்கும் ஒருவர் அடைவது மனவிரிவை. தேவதேவனின் பரிணாம வளர்ச்சியை இங்கு காண்கிறோம். அவர் தன் மொழியினூடாகத் தன் கவிமொழியைக் கண்டடைந்து விட்டிருக்கிறார்.

கவிதை எம்மொழியில் எழுதப்பட்டாலும் அது ஒரு தனிமொழியாகும். மொழி என்றால் என்ன? ஒலி உச்சரிப்புகளும் அவற்றால் சுட்டப்படும் விஷய உருவகங்களும் அடங்கிய அமைப்பு அல்லது ஒலிக்குறிப்பான்கள், குறிப்பீடுகள் ஆகியவற்றின் தொகுப்பு. அதன் நோக்கம் தொடர்புறுதலும் அறிதலும். இரண்டும் புரிதல் உணர்தல் என்று இருதளங்களில் நடக்கின்றன. அதாவது மொழி பிரக்ஞைத் தளத்திலும் அபோத தளத்திலும் ஒரே சமயம் இயங்குகிறது. புரிதல் என்பதை இவ்வாறு வகுத்துக் கொள்ளலாம். அது பொதுத் தருக்கம் சார்ந்தது. புறவயத்தன்மை உடையது. அந்நிலையில் கூறுபொருளும் அதன் ஒலியடையாளமும் ஒரு குறிப்பிட்ட சொற்களத்தில் நிலையாக இணைந்துள்ளன.

அதாவது வரையறுக்கப்பட்ட அர்த்தம் உடையவை அச்சொற்கள். பசு என்றால் ஒரு குறிப்பிட்ட மிருகம் என்று வரையறுத்த பிறகே நாம் அச்சொல்லைப் பொது வழக்கில் பயன்படுத்துகிறோம். சட்டத்திலும் வியாபாரத்திலும் அச்சொல்லைப் பார்த்தால் அது அம்மிருகம் தான் என ஐயமறத் தீர்மானித்து விடுகிறோம். புழக்க மொழியை அறிய எந்த ஒலிக்குறிப்பான் எந்த விஷயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். (சொற்களை அறிதல்) பிறகு அவ்வொலிக் குறிப்பான்களை இணைத்து நிகழ்வுகளைக் கூறும் முறையைக் கற்க வேண்டும் (இலக்கணம்). இவையிரண்டும் ஒரு குறிப்பிட்ட சொற்களுக்குள் பொதுவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கையில்தான் நாம் உரையாட முடியும். அகராதியின் துணையுடன் நாம் இம்மொழியை அறிய முடியும் என்று கூறலாம். மொழி எனும்போது நாம் உத்தேசிப்பது இந்தப் புழக்க மொழியையே. இதை மேற்கத்திய மொழியியல் பரோல் என்கிறது. இம்மொழியை நாம் ஒவ்வொருவரும் எப்படி பொருள்படுத்திக் கொள்கிறோம்? இவற்றைப் பொருள்களுடன் இணைக்கும் அந்தரங்கமான மொழிப்படிமங்களின் பேரமைப்பு ஒன்று நாமறியாது நம்மில் உள்ளது. அது நாமனைவரிலும் பரவியுள்ளது. இதை அகமொழி என்று மேற்கத்திய மொழியியல் கூறுகிறது (அதாவது முழுமொழி, அல்லது மீ மொழி. லாங் என்பது கடல், பரோல் – அலை.)

இலக்கியம் இம்மொழிக்குள் செயல்படும் ஒரு தனிமொழி. இதை லாங், பரோல் இரண்டுக்கும் இடையே உருவாகும் ஒரு விசேஷ அமைப்பு என்று நாம் வேண்டுமானால் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு சொல்லும் இயல்பாகவே படிமம்தான். வாழ்வின் போக்கில் இயல்பாகவே உருவாகி நம்மையறியாமலேயே நம்மில் உறைந்திருப்பது இப்படிமத்தன்மை. ஆகவே ஒவ்வொரு சொல்லுக்கும் சகஜமாகவே முடிவின்மை உள்ளது. இம்முடிவின்மை பலசமயம் புழக்க தளத்தில் ஒத்திவைக்கப்பட்டு, நிலைத்த தன்மை ஒன்று உருவகம் செய்யப்படுகிறது. வியாபாரக் குறிப்பு ஒன்று பசு என்று குறிப்பிடும்போது அது அம்மிருகமின்றி வேறல்ல. கவிதை அந்நிலைத்த தன்மையைச் சிரத்தையுடன் ரத்து செய்து ஒவ்வொரு சொல்லுக்கும் விசேஷ படிமத்தன்மையும் முடிவின்மையும் அளிக்கிறது. ‘பார்த்தால் பசுபோல’ என்று கூறும்போது பசு ஓர் படிமம் ஆகிவிடுகிறது. இவ்வாறு கவித்துவப் படிமங்களினாலான ஒரு தனிமொழி மொழியமைப்புக்குள் கற்பிதம் செய்யப்படுகிறது. அதுவே கவிமொழி. தமிழ் தெரிந்த ஒருவர் தமிழ்க் கவிதையை அறிய முடியாது. கவிமொழி அறிந்த ஒருவரே தமிழ்க்கவிதையை அறிய முடியும். மொழி மற்றும் கலாச்சாரத்தின் வரம்புகளை மீறி உலகளாவிய கவிமொழி ஒன்று எக்காலத்திலும் உள்ளது என்று நம்மால் காணமுடியும்.

உலகளாவிய போக்குகளைக் கற்பிதம் செய்து கொள்வதில் உள்ள சிக்கல்கள் இன்று அடையாளம் காட்டப்படுகின்றன. எல்லாவித உலகப் பொது இயல்புகளையும் மறுக்க முனையும் சிந்தனையாளர் வட்டம் ஒன்றும் உள்ளது. ஆயினும் கவிமொழி, அதன் பிரதேச சிறப்பியல்புகளைத் தாண்டி, உலகளாவிய ஒன்றுதான் என்று கூறுவேன். எனவே சிறந்த கவிதைக்கான சர்வதேச இலக்கணம் ஒன்று உண்டு. அது அகவயமானது. ஆழ்மனம் சார்ந்தது. பலசமயம் வடிவம், அணி, ரசம் என அது புறவயப்படுத்தப்படுகிறது. ஆனால் புறவயமான நிர்ணயங்கள் எல்லாம் தற்காலிகமானவை, பேசப்படும் சூழலுடன் நிர்ணயமான இணைப்பு கொண்டவை. எனவே சர்வதேச வடிவமோ, இலக்கணமோ, அழகியல் கொள்கைகளோ கவிதைக்கு இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் கவி மொழி கால இட எல்லைகளைக் கடந்ததுதான். பெருங்கவிஞன் இயல்பாக உலகமனைத்திற்கும் பொதுவானவனாக ஆகிறான். எதுவும் அவனை மறைக்க முடிவதில்லை. (மொழி பெயர்க்காமல் இருந்து விடலாம் என்பது வேறு விஷயம்) கவித்துவம் குறைந்த ஒருவனை எத்தனை ராட்சத முயற்சிகளும் கூடப் பெருங்கவிஞன் இடத்திற்குக் கொண்டு வருவதுமில்லை. ஷேக்ஸ்பியரை விட மேலாக கிறிஸ்டோபர் மார்லோவைத் தூக்கிப் பிடிக்க பிரிட்டிஷ் அறிவியக்கம் செய்த முயற்சிகளை உதாரணமாகப் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு.

சர்வதேச அளவில், மானுடப்பொதுவாக, கவிமொழியைத் தீர்மானிக்கும் பொது அம்சம் என்ன? மானுட உடல்தான் என்று எனக்குப் படுகிறது. மனித மொழியைத் தீர்மானிப்பதில் உடலுக்குள்ள இடம் மிக முக்கியமானது. உடலின் வடிவம் மூலமே பிரபஞ்சம் அளக்கப்படுகிறது. உடலின் அறிதல் மூலமே பிரபஞ்ச இயல்புகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. உடலினூடாக அன்றி தூலப் பிரபஞ்சத்தை அணுகுவது சாத்தியமல்ல என்பதால் உடலையே நாம் பிரபஞ்சமாக அறிகிறோம் என்றால் அது வியப்பில்லை. நிறம், கனம், நீளம், வெப்பம், குளிர், வேகம், ஒளி, இருள் என நாம் கூறுபவை எல்லாமே மானுட உடலின் சில இயல்புகள் மட்டுமே என்பது இப்போதுள்ள நரம்பியல் கோட்பாடு. மொழி என நாம் இப்போது வகுக்கும் பிரம்மாண்டமான படிம அமைப்பு உண்மையில் பிரபஞ்சத்தை நாம் உடல் வழியாக அறிதலின் விளைவாக உருவானதாகும். மனித உடல் அழியும் என்பதால் காலம், மனித உடல், பருவடிவம் என்பதனால் வெளி. இவ்வாறு அனைத்தையும் தீர்மானிக்கும் மனித உடல்தான் மொழியின் மானுடப் பொதுத்தன்மையை உருவாக்குகிறது. ஒன்றோடொன்று மொழிபெயர்க்கப்பட முடியாத மானுட மொழிகள் எதுவுமில்லை. டால்பின் மொழியை அல்லது பன்றிகளின் மொழியை மானுடமொழியில் அர்த்தபூர்வமாக மொழி பெயர்க்க முடியாது. உடலே கவிமொழிக்கும் மையம். கவிதை உடலால் வாசிக்கப்படுகிறது. ஏனெனில் மனம் என்பது உடலின் உள்ளேயிருக்கும் உடல் சார்ந்த படிமங்களின் தொகுப்பே. ஆகவே மொழி, மனம், கலாச்சாரம் அரசியல் அனைத்திற்கும் முக்கியமான பகுதிகள் சர்வமானுட இயல்பு உடையவையே. கவிமொழியும் சர்வதேச, சர்வமானுட இயல்பு பெறுவது இவ்வாறுதான்.

கவிதை மொழியின் படிமத்தன்மையை விரிவுபடுத்துகிறது,புதுப்பிக்கிறது என்று எளிமையாகக் கூறலாம். மொழியின் படிமங்கள் புழக்கம் மூலம் தங்கள் சாத்தியங்களை இழக்கின்றன. ‘தூக்கிவாரிப்போடுதல்’ என்பது ஒரு படிமம். ஆனால் இன்று தமிழில் அது ஒரு குறிப்பிட்ட உணர்வுக்குக் குறியீடு. இவ்வாறு மொழி ஒரு பக்கம் தன்னை உறைய வைத்தபடியே உள்ளது. மறுபக்கம் கவிஞர்களினூடாக இலக்கியத்தினூடாக அதில் புதிய படிமங்கள் பிறக்கின்றன. அது நெகிழ்ந்தபடி உள்ளது. இப்படிம ஆக்கம் கவிமனதில் சுத்த சுயம்புவாக நடைபெறுவது இல்லை. பேச்சு மொழியில் ஒரு சூட்சுமவடிவில் அப்படிம ஆக்கம் ஏற்கனவே நடைபெற்றிருக்கும். சமூக ஆழ்மனதில் அப்படிமம் பதிந்து விட்டிருக்கும். கவிஞன் தன் ஆழ்மனதிலிருந்து அதைக் கண்டடைந்து மொழியில் நிறுவுகிறான். கவிதை அதன் வாசகர் அனைவருக்கும் கண்டடைதலின் பரவசத்தைத் தருவது இதனால் தான். பொருளை மனித மொழி (அல்லது மனித உடல்) சந்திக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியை இந்திய மரபு அந்தகரண விருத்தி என்கிறது. அதை அடையாளப்படுத்திக் கொள்வதை (மொழியாலும், உடலாலும்) சப்தாகரண விருத்தி என்கிறது. மேற்கே இதை கெஸ்டால்டேஷன் என்கிறார்கள். மொழியின் உருவாக்கமும் கவிதையின் உருவாக்கமும் நிகழும் கணம் இது. உண்மையில் இரண்டும் வேறு வேறல்ல. இன்று கவிதை மறுபடியும் மறுபடியும் மொழியை உருவாக்குகிறது.

மொழிகளின் துவக்க காலக்கட்டத்தில் உள்ள கவித்துவம் பிற்பாடு இல்லையே என்ற ஐயம் நமக்குப் பலசமயம் ஏற்படும். வேத உபநிடதங்களிலும் பழைய சங்கப் பாடல்களிலும் உள்ள கவித்துவம் பிற்பாடு நிகழவில்லை. ஏன்? அன்று மனிதர்கள் உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்று இதற்குப் பலசமயம் விளக்கம் தரப்படுகிறது. இது உண்மையாக இருக்க முடியாது. வரலாற்றை ஒரு தளர்ச்சி என்று கொள்வது மிகவும் சிரமம் விரிவாக்கம், சிக்கலாக்கம் என்றுதான் கூறமுடியும். மொழிகளின் துவக்க நிலையில் கவித்துவமும் மொழியும் வேறுவேறாக இருக்கவில்லை. பழங்குடி மொழிகளில் பெரும்பகுதி கவித்துவம் நிரம்பியதாகவே வெறும் படிமங்களின் வரிசையாகவே உள்ளது.சமூக இயக்கத்தின் தேவை மொழியின் படிமங்களை உறையவைத்தபடியுள்ளது. வளர்ந்த மொழியில் இவ்வாறு உறைநேர்ந்த பகுதிகள்தான் பெரும் பகுதி. எனவே கவிதை அவற்றில் மறுபடிம ஆக்கம் என்ற தளத்திலேயே நிகழவேண்டியுள்ளது. இன்றுகூட ஒரு புதிய பொருள் மொழியைச் சந்திக்கும்போது ஒரு கவித்துவம் நிகழ்வதைக் காணலாம். உதாரணம் தொலைக்காட்சி, புகைவண்டி, கணினி. கெஸ்டால்டேஷன் அல்லது சப்தாகரணவிருத்தி எப்போதும் கவிதையாக்கம்தான். நவீன மொழியில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே நாம் படிமங்களை உடைத்து மீண்டும் கட்டுகிறோம். பழங்குடிமொழி என்பது காட்டில் மூங்கில் குடிசைகளினாலான முதல் கிராமம் என்பது போல. நமது மொழி நகரம். நாம் இடித்துதான் கட்ட வேண்டும். எனவே தான்

’புகைவண்டி விட்டுச்சென்ற இருப்புப்பாதை
கிடந்தது தனியாக’
(ஆர்.ஸ்ரீனிவாசன்)

என்று நாம் கவிதை எழுதுகிறோம். புகை வண்டியையும் இருப்புப்பாதையையும் உடைத்துப் புதிய படிமங்களாகக் கட்டுகிறோம். இதுவே கவிதைச் செயல்பாடு என்பது. இவ்வாறுதான் மொழிக்குள் ஒரு தனிமொழியைக் கவிதை உருவாக்கிக் கொள்கிறது.

கவிதை தன் தனிமொழியைப் புழக்க மொழியின் இயக்குவிதிகளையும் மீறிச் சென்றுதான் அடையமுடியும். இயங்குவிதிகள் அச்சொற்களின் உறைந்த தளத்தை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டு கட்டப்பட்டவை. கவிதை தன் புதுப்படிம ஆக்கத்தில் தன் விதிகளையும் புதிதாக உருவாக்குகிறது.

‘நெஞ்சில் கணல் மணக்கும் பூக்கள்’
‘ஆடிவரும் தேனே’
(பாரதி)

‘வீற்றிருந்தாள் உன் நிழல்’
‘உன் வெண் பாதச் சதைகள் மெத்திட்ட புல்தரை…’
(பிரமிள்)

இலக்கணப்படி இவ்வரிகள் அபத்தமானவை. கவிதையின் விசேஷதளத்தில் தான் இவை அர்த்தம் கொள்கின்றன. குழந்தையைக் கொஞ்சும் களிவெறியில் தேன் ஆடி வர முடியும். கவிதை எனும் விசேஷ வடிவின் இலக்கே இதுதான். இதனால்தான் புராதன மொழிகளில் கவிதை ஒருவகையான பிதற்றலாக – சன்னதமாக – கருதப்பட்டது. இந்திய மரபு கவிதையை ‘அருளிச் செய்தலாக’க் கருதுகிறது. மேற்கு அதை உளறலாகக் கருதுகிறது. அது ‘பேச்சு’ அல்ல. கவிதை பேசவும் கூடும். ஆனால் உளறும் போதே அது தன் சிறந்த சாத்தியங்களை அடைகிறது.

படிமங்களை வைத்தே கவிஞர்களை நாம் அளவிடுகிறோம். எல்லாமே படிங்கள்தான் என்றறியாத கவிஞர்கள்தாம் புதியபடிமங்களை ‘உருவாக்க’ உழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு கணத்தில் பிரபஞ்சமே படிமப் பெருந்தொகுப்பாக இருக்கும். பொருள் என்பது ஓர் உருவகம். அவ்வுருவகம் பொருளுடன் நமக்குள்ள – நம் உடலுக்கு உள்ள – உறவின் வெளிப்பாடு. பொருளைக் கவிதை எப்படி அணுகுகிறது? அப்பொருளைச் சுற்றி ஓர் உறைபோல மூடிவிட்ட பொருண்மையெனும் உருவகத்தை உடைத்து அதை வேறு ஒரு வெளியில் கொண்டு சென்று நிறுத்துகிறது. பொருண்மையுருவகம் சிதறாத படிமம் பழக்க மொழியில் நிகழும் ஒரு எளிய விளையாட்டு. உதாரணமாக,

’இந்த நரை
வெற்றிலை போட்ட முதுமை
தீற்றிச் சென்ற சுண்ணாம்பு’
(அப்துல் ரகுமான்)

என்று கூறுவது ஒரு விளையாட்டு. விளையாட்டு எப்போதும் ஏற்கனவே இருக்கும் விதிகளுக்குள்தான் செயல்பட முடியும். பொருட்களின் பொருண்மைகள் மட்டுமே இதில் பரஸ்பரம் ஒப்பிடப்படுகின்றன என்பதே இத்தகைய இயல்புக்குக் காரணம். இதன்மூலம் அவற்றின் வழமையான பொருண்மையே மேலும் உறுதியாகிறது.

’மலைகளுக்குக் கூன்விழ வைக்கும் துயரம்’
(அன்னா அக்மதோவா)

என்ற படிமம் மலைகள் மீது கவிழ்ந்த பொருண்மையின் திரையைக் கிழித்து அவற்றை நம்முன் பூதாகரப்படுத்துகிறது. மலைகள் சார்ந்து நாம் அடைந்த பல்வேறு உணர்வுகள் அப்பௌதிக இருப்பு மீது மளமளவென்று பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. மலைகளின் மௌனம், மலைகளின் நீலம், மலைகளுக்கு வானுடன் உள்ள உறவு, மலைகளின் மாறாத இயல்பு, மலைகளின் வடிவமற்ற பிரம்மாண்டம், மலைகள் மீது மேகம் கவியும் மங்கல், மலை மீது நகரும் மேகநிழல், மலை நடுவே பீறிடும் உதய ஒளி, மலைச் சிகரங்களின் தனிமை என அனைத்துமே பொங்கி விரிந்து மலையும் துயரமும் ஒன்றாகி விடுகின்றன. ஒரு படிமம் நம்மைப் பரவசப்படுத்துகிறது. இன்னொரு படிமம் நம்மை எரிச்சலூட்டுகிறது. ஏன்? பொருட்களின் பொருண்மை மீறப்படுவது ஒரு பெரும் பிரளயம். கணநேரத்தில் அது நம்மில் நிகழ்கிறது. ஒரு மலையை அன்னா திருப்பி வைத்து விடுகிறார். நிலாக்காட்சி முற்றிலும் மாறிவிடுகிறது. இதுவே பரவசம் தருகிறது. படிமமே கவிதையாகுமா? கவிதை ஒரு படிமநிகழ்வின்றி வேறு எதுவுமில்லை.

’அசையும் போது தோணி
அசையாத போதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் இடையே
மின்னற் பொழுதே தூரம்’

என்ற தேவதேவனின் வரிகளை மிகச் சிறந்த உதாரணமாக இங்கு கொள்ளலாம். இங்கு திட்டவட்டமாக ஏதுமில்லை; ஒரு காட்சி கூட. தோணி, தீவு, அசைதல் எதுவுமே நிலைத்த பொருள் உடையவை அல்ல. சகல விதமான நிலைத்த தன்மைகளையும் மீறிய முடிவின்மை மீது மிதக்கிறது அந்தத் தோணி. மின்னற்பொழுது தூரத்திற்கு இப்புறம் தீவு. அப்புறம் தோணி. காலமிடமான அந்த ‘மின்னற்பொழுது’ பிரக்ஞையின் ஒரு தளும்பல் மட்டுமே. கால இடத்திலிருந்து மானுட சோதனை ஒரு கணம் விடுபட்டு தானிருக்கும் பொருண்மை வெளியைத் திகைப்புடன் பார்த்து நிற்கிறது. கவிதை குறிக்கும் இலக்கே இதுதான்; பொருண்மைகளை ஊடுருவிச் செல்லும் படிமமொழி. அதை ஒருமுறை அடைந்த பிறகு தேவதேவன் பிற சபலங்கள் எதிலும் சிக்கவில்லை. அவருக்குத் தன் கவிதையைச் ‘சமூகப் பிரக்ஞை’யுடன் படைக்க வேண்டுமென்றோ, ‘சமகால அழகியல்’ அதில் இருக்க வேண்டுமென்றோ எவ்விதமான திட்டமும் இல்லை. தமிழ்க் கவிஞர்களில் கவிதையை ஒரு தவமாக மேற்கொண்டவர். எனவே ‘கவிஞர்’ என்ற சொல்லுக்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர்.

தேவதேவனின் பரிணாமத்தைக் காட்டும் இந்தத் தெளிவு அவருடைய இரு கவிதைகளினூடாக மேலும் விளக்கப்படலாம்.

’மோகம் ததும்பும் நீர்ப்பரப்பு
தீராவேட்கையில்
துள்ளி எழும் மீன் துடிப்பு
படக்கென்று நிறைவேறியதென்ன
லாவகமாய் கொத்திச்
சென்றது ஒரு பறவை
வானில் நீந்தி’
(குளித்து கரையேறாத கோபியர்கள்)

’நீரில் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது சுடும் பாறை
மீண்டும் துள்ளுகையில் பறவையின் கொடுங்கால்
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை’
(துள்ளல்)

இரு கவிதைகளும் நல்ல கவிதைகளே. முதற்கவிதையில் ‘மோகம் ததும்பும் நீர் பரப்பு’, ‘தீரா வேட்கை’ ஆகிய வரிகள் வெளிப்படையாகவே நீர்ப் பரப்பு, மீன், பறவை, வான் ஆகியவற்றைப் படிமங்களாக்க முயன்று நிற்பதைக் காணலாம். இரண்டாம் கவிதையில் அத்தகைய வகுத்தல்கள் ஏதுமில்லை. மிக சகஜமான ஒரு படிம ஆக்கம் நிகழ்ந்து விட்டிருக்கிறது. சாதாரணமாக கவனிக்கப்படாததும் நுட்பமான வாசகர்களால் மட்டுமே எப்போதும் அடையாளம் காட்டப்படுவதுமான சிறு வித்தியாசம் இது. முதற்கவிதை மோகத்தடாகத்து மீனின் ‘மீட்சி’யைப் (எங்கு மீளுதல்?) பற்றி மட்டும் கூறுவதாகக் குறுகிவிடும்போது இரண்டாம் கவிதை பிரம்மாண்டமான ஒரு வாழ்க்கை நாடகத்தின் மின்னல்வேக சித்தரிப்பு மட்டுமே. அந்த ‘நீரும்’ ‘துள்ளலும்’ ‘பாறையும்’ ‘பறவையும்’ எல்லாம் வாசகனின் கற்பனைக்கு ஏற்ப விரிபவை. ‘மரித்த கணமே பறவை’ என்ற வரியில் இக்கவிதை அசாதாரணமான உச்சநிலையை அடைகிறது. தேவதேவன் தன்னை அடையும் தருணம், பிச்சுமணி கைவல்யம் தேவதேவனாகும் தருணம் இதுதான்.

Read more...

கால் பந்தாட்டம்

1
கண்ணன் ராதையின் காதல்வனத்தை
ஒரு கால் பந்தாட்டப் பாலையாக்கியது எது?
காண்பானென் றெவருமில்லாத
மாபெரும் கலை நிகழ்ச்சியாய்த்
தன்னைத் தானே கொண்டாடிக்கொண்டிருந்த பூமியைக்
குருஷேத்ரமாக்கியது?

ஒவ்வொன்றையும் இரண்டிரண்டாய் அரிந்துவிடும்
உன் ஆயுதம் கொண்டு
இம் மைதானத்தையும் தரித்துவிட்டாய்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
எப்போதும் உன் குழுவினை அனுசரித்தபடி
’எதிர்க்குழு’வினை ஏமாற்றும் ஓராயிரம் தந்திரங்களை
ஒவ்வொரு நிமிஷமும் புதிதுபுதிதாய்க் கண்டடைந்தபடி
’உன் வெற்றி’ நோக்கி முன்னேறுகிறாய்.
கால்பந்து படும் பாடு கடவுள் படும் பாடு
ரணகளம் சித்ரவதை –

வாழ்க்கை ஒரு விளையாட்டு அல்ல சிறுவனே

எனினும் என் நெஞ்சு
சற்றே ஆசுவாசிக்கவோ
அனைத்தையும் விளையாட்டாக்கி
ஆடி மகிழ்கிறது உன் குழந்தைமை?


2
உன்னை உந்தும் சக்தி எதுவென யோசி.
அதைத் துற; தொடர்ந்து துறந்துகொண்டே இரு.
குழுவல்ல; நீயே முக்கியம்.
மொத்த உலகத்தின் பிரதிநிதியான நீ.
குழுவும் அதில் உள்ளடங்கியுள்ள ’ஒரு நீ’யும் அல்ல.
உன்னை உந்தும் சக்தியென ஒன்றிருக்காத அந்நிலையில்தான்
நீயே சக்தி. தோல்வி பலவீனங்களெனும்
சிறுமைகளறியாத சக்தி.
அங்கே
எதிர்நிலைகள்
ஒன்றுபடுதல்
செயல்படுதல்
என்னும்
எண்ணங்களுக்கே இடமில்லை
அங்கே வெற்றி என்பதும் கிடையாது
தீராத காதல் விளையாட்டு மாத்திரம்.


3
அஞ்சாது
தனித்திருந்து
தன்னை அறிந்து
தன்னந் தனியான வாழ்வினையும் அறியும்
மாண்புமிக்கோன்
’தான்-பிறர்’ எனும் பேதக் கொடுவாய்க்குள்
குழு ரகசியமாய் முளைக்கும்
கொடூரப் பல் இல்லாதான்
அவனின் விரிந்த விழித் திரையெங்கும்
வாழ்வின் நடனம்

கதறி அழைக்கும் வாழ்வினுக்குப்
பாறாங்கல் முதுகு காட்டி
குழுவே செயல் குழுவே செயல் எனும்
மந்திர உச்சாடனம் உருவேற்றிய
சாமி முன்னே
கண்மூடி அமர்ந்தார்
அவர் அனுஷ்டானங்களெதையுமே
கலைக்க முடியவில்லை வாழ்வின் நடனத்தால்

Read more...

Wednesday, December 12, 2012

பல் துழாவும் நா

என்ன ஆயிற்று இந்தக் கடவாய்ப் பல்லுக்கு?
காலகாலங்கள் அடுக்கடுக்காய்ப் போர்த்தியிருந்த
ஆடைகளையெல்லாம் களைந்து நிற்கிறதோ அது?

இந்த நா ஏன் இப்படி மறிகிறது,
தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்,
வெட்கங்கெட்டு?
ஊழி பலவாய் மறைந்திருந்த சுவையரும்புகள்
விழித்துக் கொண்டனவோ?

என்ன ஆராய்ச்சிகள் வேண்டிக்கிடக்கின்றன,
முகவிகாரம் காட்டுவதொன்று போதாதா?

Read more...

கள்வன்

கண்முன்னே தம் பொன்னைப் பறிகொடுத்தவர்களால்
ஓடிஓடித் துரத்தப்படும் திருடனோ?
பிடிபட வேண்டுமெனும் அழியா ஆசையோடே
தப்பி ஓடிக்கொண்டிருக்கிறான் அவன்!

தேடி அலைவோரிடமிருந்து அவனைக் காக்கிறார்கள்
அவனைக் கண்டறிந்த சாட்சிகள்,
நேரெதிர்த் திசை சுட்டும் தம் பொய்களால்

தப்பியோடியபடியே பிடிபடாததற்காக அழுகிறான் அவன்

என்றாலும் என்றாவதொரு நாள் தாம் பிடிபடுவோமெனும்
இளைப்பாறலையும் வெறுத்து
ஓடுகிறான் ஓடுகிறான் ஓடுகிறான் அவன்
தானற்ற பேரழிவுப் பெருநிலை நோக்கி முடிவற்று

Read more...

Tuesday, December 11, 2012

நித்ய கன்னி

தேங்கி முதிர்ந்து
கழிவாகி நாறும்
இந் நீர் உலகில்
பூப்பை அறிவிக்கும்
இரத்தச் சிவப்பு
எனினும் – கழிவு நான்

நாறும் என்னையும்
ஒற்றியெடுத்துத்
தன்னோடாக்கும் தாய்மைக்கு
ஏங்கும் பெருந்துயர் என் துயர்

கண்ட்டைந்த பெருங்கருணை
ஆரோக்யத் தாய்மை
வனமூர்க்கம் களைந்து
பொலியும்
நித்ய கன்னிமை
புத்தம்புதுப் பிறவி வேண்டித்
திறந்ததொரு வாசற் கருப்பை

Read more...

கடற்கரை

இன்னது, இப்போது என நாம் அறியாதிருக்கையிலும்
உணராதிருக்க இயலவில்லை,
எப்போதுமுள்ள ஒரு நெருக்கடிநிலை அவசரத்தை:
மூச்சிறைக்க வீசும்
கடலின் இடையறாத இத் திரைகள்
ஓர் அதி அவசரச் சமிக்ஞையேதான்

தூரத்திலிருக்கையில்
மாபெரும் கனவுகளை விதைக்கும்
புன்முறுவற் சலனங்களைத் தொனித்தது இக்கடல்

கொந்தளித்துக் கொந்தளித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது
கண்ணெதிரே
இன்று அண்மித்த இவ்வேளை

Read more...

மெரீனா

எத்துணை அழகியது இந்த பூமி
எனச் சிந்திக்க நேரமில்லை
கட்ட்டங்களுக்கிடையே
உடைந்த தேங்காய்ச் சில்லாய் வானம்

பரந்த உள்ளமொன்றின்
கருணைக் கொடையாய்
இடையறாது புன்னகைக்கிறது
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை அழகு

கருணாகரத்தின் சூர்யோதயத்தின் முன்
காலைக்கடன் முடித்த
திவ்ய மவுனம் கலையாது எழுகின்றனர்
கரையோர மக்கள்

மாநகர் நெரிசலிலும்
கண்மூடித்தனமான விரைவிலும்
சிதையாத பக்தி, முகஞ்சுளிக்காத
பார்வையின் ஆழத்தில் ஊற்றெடுக்கிறது

வெறுப்பும் விரக்தியும் உடைந்து
கரைமணலாய் விரிகிறது
காதலர் கால்களைக் கொஞ்சுகிறது
கடலம்மையின் மடி

Read more...

Monday, December 10, 2012

சிலை உடைப்பு

ஒழுங்கு அழகுக் கலைஞர்கள் வந்தார்கள்
ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தர் வந்து
சுவர்களின் வண்ணங்களையும் பொருள்களையும்
வேறு வேறு விதங்களில் அடுக்கிச் சென்றார்கள்
அதுவரை பீடு பிரகாசித்த அவர் முகங்கள்
ஒளி குன்றித் தலை கவிழ்ந்தன
கவிஞன் உள் நுழைகையில்
அவன் முகம் சந்திக்கக் கூசி

ஒரே நேரத்தில் பல்வேறு ஒழுங்கு அழகுக் கலைஞர்களைக்
கற்ற பண்டிதர்களால் குழம்பியது அறை.
குழப்பங்களிடையே தம் கைப்பொருளை ஒளித்துவைத்து
கண்டுபிடிக்கிறோம் எனத் தோள்தட்டிய ஆய்வாளர்கள்,
பிணங்களை அரிந்துசொல்லும் மருத்துவர்கள்,
அங்கே உயிரோடு தன்னை அரிந்து அறிவித்துக்கொண்டிருந்த
கவிஞனைக் கண்டு அதிர்ந்தார்கள்

ஆயகலைகள் அறுபத்து நான்குடனும் திருவிழாவாய்
ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது மாபெரும் கலைநிகழ்ச்சி
கலைஞர்களெல்லாம் திகைத்து நிற்க,
அம் மவுனம் தன்னை வரவேற்க,
கவிஞன் நுழைந்தான் அந்த மண்டபத்துள்
வெகு நீண்ட மவுன விரிப்பில் நடந்து
மண்டபத்தின் பிரதான இடத்திற்கு வந்தான்.
யாவரும் காணத்
திரைச்சீலையின் ஒரு நுனி பிடித்துச் சுண்டி இழுத்தான்.
அசாத்திய வலிமையுடன் அமர்ந்திருந்தது அங்கே
சகல கலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட
கடவுளின் சிற்பம்

ஓங்கி மின்னிற்று உறையிலிருந்தெழுந்த வாள்.
கண் பறிக்கும் ஒளி, ஓசையுடன்
புகையாகிக் கலைந்தது சிலை.
அண்டமே அதிரும்படியான
கவிஞனின் சிரிப்பில்
அதுவரையான தன் விளையாட்டுப் பொம்மையையே
அர்த்தமின்றி உடைத்த
குழந்தையின் குதூகலம்

Read more...

ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை

அது தன் நாட்களை
ஒருபோதும் சோம்பலில் கழித்ததில்லை
ஒரு நாளைக்கூட பொழுதுபோக்கு போன்ற
புலன் துய்த்தல்களில் செலவிட்டதில்லை
பொருள் புகழ் அதிகாரங்களை நோக்கிய
வேட்கை உந்தல்களை அது அறியாது
எப்போதாவது தன் துணையுடன்
அன்றி எப்போதும் தன் தன்மையையே
அது பாதுகாத்தபடி அலைந்த்து
அதன் உயிர்ப்பும் சிறகடிப்பும்
இயற்கையின் மர்மங்கனைத்தையும் உணர்ந்த வியப்பும்
அதை விளக்க இயலாத படபடப்புமேயாம்

ஒரு நாள் என் தோட்டத்தின் ஈரத்தரையில்
உதிர்ந்த ஒரு மலர்போல் அது கிடந்தது
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ
சமூகமோ தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை –
இவைதானோ அதன் மொத்த வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம்?
இன்று அது நிறைவேறியதையோ
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்துச் செல்ல முயல்வதையோ
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ
ஒரு பெருக்குமாறு அதை குப்பைகளோடு குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கிவிடுவதையோ
எதைப்பற்றிய கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
மரித்துக் கிடந்தது அது

Read more...

Sunday, December 9, 2012

செவிமடுத்தல்

நான் ஓடோடியும் வந்துன்னைச் சந்தித்தேன்
(உண்மையிலேயே நீ என்னைச்
சந்திக்க விழைந்தாயோ அல்லது
அவ்வாறு பிறர்முன் பாவனை செய்தாயோ?)

’என்னை நீ புரிந்திருந்தால்
உன் வாழ்வு இத்தகைய
கந்தல்களாய் ஆகியிருக்காது’ எனத் தோன்றும்
ஓர் எண்ணத்தினைத்
தவிர்க்க இயலாது
அவதானிக்கிறேன்

யாரோ நான்?

எத்தனை முறை கையும்களவுமாய்ப் பிடித்துன்னிடம்
கேள்விகள் கேட்டிருக்கிறேன் நான்?

கேள்விகளுக்குச் செவிமடுத்தல் என்பதே
சந்திப்பு ஆகும்.
நீ ஒரு கேள்வி ஆனபோதே
நான் உன்னைச் சந்தித்தேன்.
என்னை ஒரு கேள்வியாகக் கொண்டிலை நீ

உன் பதிலுக்காக
நான் எவ்வளவு காலம்
கேள்விகள் கேள்விகளாய்க்
காத்துக்கொண்டிருப்பேன்?

இது ஒரு மனிதனின் கேள்வி அல்ல;
காலமற்றுப் பரந்து விரிந்தெங்கும்
சதா ஒளிர்ந்தபடி நிற்கும்
பரிவின் கேள்வி. ஆகவே
நிரந்தரமான வெறுமையின் பரிவு

Read more...

தாய்

அம்புஜம் அம்புஜம் என்று
ஓர் அழகான தாய் இருந்தாள்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள்
அவளுக்கு ஓர் அழகான ஆண் குழந்தை.
அவளுக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம்
உலகத்துச் செல்வங்களையெல்லாம் குவித்தாலும்
அவை அவனுக்கு ஈடாகாது

அவள் அவனைப் பள்ளிக்கு அனுப்பினாள்
அவன் மகாபுத்திசாலி
படிப்பில் அவன் மனம் வைக்காததினால்தான்
மக்குப் பையன் என்று பெயர் வாங்குகிறான்

அவள் அவனை இசை கற்க அனுப்பினாள்.
தெய்வ வரம் போல் அபூர்வமானவர்களுக்கே கிட்டும்
சாரீரமும் பிறவிச் சங்கீத ஞானம் போன்ற கிரகிப்பும்...
என்று ஆரம்பத்தில் ஆசிரியை வழங்கிய நற்சான்றுச் சொற்களை
அவள் சொல்லி மகிழா ஆட்களில்லை.
அவன் மனம் வைக்காததினால்தான்
அவன் இசை கற்கப் போவதையே நிறுத்திவிட்டான்

ஒரு நேரம் வீட்டில் சும்மா இருக்க மாட்டான்.
ஊரையெல்லாம் சுற்றிவருவான். மகா சுறுசுறுப்பு.
தெருவிலுள்ள பிள்ளைகளின் பெற்றோரெல்லாம்
அவளிடம் கோபமும் வருத்தமுமாய் வந்து புகார் சொன்னார்கள்.
அவர்களுக்கு ஒன்றுமட்டும் புரிவதில்லை
அவள் மகன் யார் மீதும் எளிதில் அன்பு கொள்ளமாட்டான்
கொண்டால் அவர்களுக்காக உயிரையும் கொடுக்கத் தயங்காத
மகாபுருஷன் என்பது

Read more...

Saturday, December 8, 2012

அந்தச் சிரிப்பு

நிலா காட்டியபடி அம்மா சோறூட்டிக் கொண்டிருந்தாள்

ஒவ்வொரு மனிதனும் யாரோ ஒருவர்க்கு
ஓர் அன்பான தாயோ தந்தையோ பிள்ளையோ
உடன் பிறப்போ நண்பனோ சகாவோதானே?
இவ்விதமாய் உலகம் முழுக்க
நிறைந்துள்ளது அன்பு இல்லையா?

தன் முகத்தை முகத்தைக் காட்டி
அவன் முகத்தை மலரவைக்க முயன்றாள் அவள்

வாழ்க்கை பொய்த்ததுவா?

வாய் பார்த்து ஊட்டினாள்
இடுப்பு வழுக்காதபடி அமர்த்திக்கொண்டாள்

அநீதி போர் வறுமை இன்ன துயர்கள்
எங்கிருந்து தோன்றி இவ்வுலகை வதைத்து
அதிரவைக்கின்றன?

எதற்காக?

குட்டித் தம்பி சாப்பிட்டாச்சு என்று
அவனைச் சிரிக்கவைக்க தட்டை அசைத்தபடி
மகிழ்ச்சிப் பிரகடனம் செய்தாள்

வியப்பிலாழ்த்துகிறது அதன் நோக்கம்

துக்கிப்பதற்கு ஒன்றுமில்லை

கொஞ்சம் இப்படி உட்கார்ந்துகொள்
அம்மா தட்டைக் கழுவிவிட்டு வந்துவிடுகிறேன்

ஒரு கையால் இலட்சியச் செயல்பாடுகள்
மறு கையால் அதை அறவே அழிக்கும்
வாழ்க்கைப் பாணியை விடாத குரங்குப்பிடி
எத்தனை துரதிருஷ்டமானது இந்த வாழ்க்கை

கழுவித் துடைக்கப்பட்ட அவன் முகம்மீது
அம்மாவின் முத்தம் பதிந்தது

இருந்துமிங்கே அவ்வப்போது
நாம் அதை அனுபவிக்கிறோம் என்றால்
அது – அந்தக் கருணை –
நமக்கிடும் பிச்சையன்றி வேறேது?

அவன் முகம் அம்மாவை இமைகொட்டாமல் நோக்கியது
ஏதோ ஒன்று அவளை ஆழமாய்க் கிளர்த்தி
மிக அழுத்தமான முத்தமொன்றை அவன் கன்னத்தில் பதித்தது
அவனுக்கு அந்தச் சிரிப்பு வந்துவிட்டது

Read more...

கூட்டத்தில்...

கூட்டத்தில் தனித்தும்
தனிமையில் கூட்டத்திலுமாகி விட்டதுதானோ
அவன் அவலம்?

அவ்வாறில்லாத போதுதான்
எத்துணை அழகியதோர் கவிதை அவன்!

கூட்டத்து நடுவிலும்
அவ்வப்போது அவனைத்
தூய்மையான குதூகலத்திலாழ்த்தி விடுகிற
வாழ்வின் கருணையைத்
தவறாது படித்தபடியே
பிடித்துப் பிடித்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கவும்
துடிக்கும் ஒரு பொறியியல் வல்லுநனாய்ச்
சற்று கனம் கொள்கிறான்

கூட்டத்தின் நடுவே
மாலையிட்டு அமர்த்தினால்
கால்மேல் கால்போட்டு ’நான்’ என்கிறான்
அப்புறம் நாக்கைக் கடித்துவிட்டு
மனிதனின் தன்மையையும்
அவன் துயரையும் பேசுகிறான்

கூட்டத்தின் கோமாளித்தனங்கள் கண்டு
சிரிக்கிறான்

அழாமலிருக்கவும் முடியவில்லை

Read more...

Friday, December 7, 2012

அசல் சுவை

பல்லினதும் நாவினதும்
வேகங்களைப் பொறுத்தும்
பழத்தின் ருசி மாறுபடுகிறது.
(பல் பட்டதும்
’அது’ பயந்து ஓடியிருக்கவும் கூடும்)

மிக்ஸி பிளேடால் பழம் கூழாக்கப்படுகையில்
புதிதான சேர்மானம் ஒன்று சேர்ந்துவிடுகிறது.
(இருக்கும் ஏதாவதொன்று போய்விட்டிருக்கவும் கூடும்.
’அது’ மட்டும் போகாமலிருந்தால் போதும்)

அப் பழத்தினைக் கைக்கொண்டவரது
உயிர்ச் சூட்டினாலும்
அவர் மனத்தினாலும் கூடி
அப்பழத்தின் அவ்வேளைச் சுவை சமைகிறது
அப்பழச் சாற்றைப் பருகுபவராலும்
அதில் ஒரு வேதியியல் செயல்பாடு நடக்கிறது.
கொடுப்பவர் பெறுபவர் இருவர்க்குமிடையுள்ள உறவாலும்
உட்செயல் புரியும் உயர் அதிநுண்பொருள் அது

பழத்தின் அசல் சுவையை
வெகுசிலரே அறிகின்றனர்
அதனை அருந்தியவர்கள்
ஒருநாளும் மரிப்பதில்லை

Read more...

ஒளிவேளை

எப்போதும் என் கதவோரம்
அது காத்துக்கொண்டிருக்கிறது.
ஜன்னல் வழியாய்
இமையாத பார்வை.
அறைச் சுவர்களில் ஒளிந்திருக்கிறது
என்னை அழைத்துச் செல்ல விரும்பும்
அதன் வாகனம்.
எழுந்துகொள்ள ஒரு தடையும் சொல்லாத
பிரியமும் அருளுமாய்
எனது அறை இருக்கைகள்

பறவையின் குரல்கள் வெளியே அழைக்கின்றன

ஆ! இனி என்னால் ஒரு வரியும் எழுத இயலாது
”இந்த ஒளிவேளையில்
உலகமெல்லாம் புன்னகை புரிகிறது”
என்பதைத் தவிர

Read more...

Thursday, December 6, 2012

வழிமறிச்சான் கோயில்கள்

எங்கே போகிறது இந்தச் சாலை
என நீள நோக்குகையில்
தொடுவானைக் காட்டி நின்றது அது.
வழியில் ஒரு கோயில்
போக்குவரத்தை இடைஞ்சலித்தபடி.
எந்த ஆளுநரும் கைவைக்க அஞ்சும்
அக்கோயில் கண்டு சாலையும்
அஞ்சி விலகி வளைந்து சென்றது

வாகனங்களை நிறுத்தி
வணங்கிச் சென்றவர்,
காலணிகளைக் கழற்றிப்
பணிந்து சென்றவர்,
தேங்காய்கள் உடைத்துப்
பலி தந்து சென்றவர்,
சும்மா சென்றவர்
யாவரும் அஞ்சும்படி
ஆரோகணித்திருக்கும் அக்கோயிலை
அங்கு போய்க் கட்டியவர் யார்? ஏன்?

Read more...

கடவுளே…

…தீவினைகளால் மனம் கலங்கியிருக்கும்
இம் மனிதனைக் காப்பாற்று!
என்று அந்த மலை முகட்டில் நின்று உரக்கக் கதறினேன்

அந்த எதிரொலியைக் கேட்டபின்பு
இனி நான் எவ்வாறு அழுதுகொண்டிருக்க முடியும்?
இனி நான் யாரிடம் போய் பிரார்த்திக்க முடியும்?
இனி நான் எப்படி
வழிபாடுகளில் என் வாணாள் கழிக்க முடியும்?

Read more...

மந்திர வாள்!

பூத்துக்கொண்டேயிருப்பதில்
மரம் சோர்ந்து போய்விட்டதா?

அன்பு தரும் பேரின்பச் சுவையை
மனிதர்கள் மறந்து விட்டனரா?

உலகைச் சதா புதுப்பித்துக்கொண்டேயிருக்கும்
தாய் வயிறுகள்தாம் மூடிக்கொண்டுவிட்டனவா?

கவிஞர்கள்தாம் சோர்வடைந்து விட்டார்களா?

மேலும்
இது வேடிக்கையல்லாமல் வேறென்ன,
எத்தனை பேரளவான மடமைகளையும்
ஒரே வீச்சில் வீழ்த்திவிடக்கூடிய
மந்திர வாளொன்று தன் கையிலிருந்தும்
மனிதன்துயரில் அழிந்து செத்துக்கொண்டேயிருப்பது?

Read more...

Wednesday, December 5, 2012

தோலுரித்தல்

போர்வைகள் பட்டுப் பீதாம்பரங்கள்
மற்றும் கவசங்கள்
அட்டுப் பிடித்து இறுகி உறைந்து
உன் தோலாகித் தடித்து நிற்கின்றன.
இதோ இந்தச் சின்னஞ்சிறிய செடியின்
மலரைப் பார்!
உன் உயிர்க் குருத்தின் ஒளியை
நீயே நீ பார்த்துக் கொள்வதற்கு இயலாதபடி
உயிர்க் கருணையற்ற உன் தோல்களிலிருந்து
ஆயுதங்களையும் சட்டங்களையும்
உருவாக்கி உருவாக்கி
நீ செய்யும் கொடூரங்கள்தாம் எத்தனை?
உன்னால் இழிவாக்கப்பட்ட
உன் சகோதரர்களின் எழுச்சியை அடக்க
இன்று உன் தந்திரங்களையும் கூடத்
தைரியமாய்க் கைவிட்டு வேஷங் கலைந்து
பட்டவர்த்தனமாய் வந்து
அவர்களைக் களத்திலேயே அடித்துக் கொல்கிறாய்
அதே வெறியோடு
உன்னைத் தரையில் போட்டு மிதித்து
உயிரோடு உன்னைத் தோலுரித்து
உன் உயிரின் ஒளியை உனக்குக் காட்டுவதே
இன்றைய உயிர்வாழ்வின் இலட்சியமாய்
ஒருக்காலும் அணையாத ஜீவக்கனல்
இவ்வெளியெங்கும் சுடர்வதைக்
காணவில்லையா?

Read more...

கடப்பாறைப் பாம்பு

சடாரென்று – பதுங்க –
செம்பருத்திப் புதருக்குள் நுழையப் போவதுபோல் –
பார்வையை அறைந்தது
கடப்பாரையா? பாம்பா?

தன் அருகில் கிடந்ததை எடுத்து
பாம்பை அடித்தவன்
அந்தக் கருவியைக் கும்பிட்டுக் கொண்டாடியே
தன் வாணாள் கழிப்பானோ?

கடப்பாரைதான் பாம்பாய் மாறிப்
புதருக்குள் ஒளிந்து கொள்ள விரைகிறதோ,
புதருக்குள்ளிருந்து வெளிப்பட்ட பாம்புதான்
கடப்பாரையாய் மாறித் தப்பிக்கிறதோ, கள்ளச்சிரிப்புடன்?

Read more...

Tuesday, December 4, 2012

தோலுரித்தல்

அம்மா, உன் கைத்துப்பாக்கி
என் நெஞ்சைக் குறி வைத்ததும்
கைகளை உயர்த்தினேன்

அழுக்கேறிக் கனத்த டி ஷர்ட்டையும்
கால் சராயையும் – தோலை உரிப்பதுபோல்
தலைவழியாகவும் கால்வழியாகவும் பிய்த்தெடுக்கிறாய்

ஓடும் நீரிலும் உணர்ச்சியற்ற கல்லிலுமாய்
மாறி மாறி முக்கியும் அடித்தும் துவைத்தும்
கசக்கியும் பிழிந்தும் – துப்பாக்கி வெடிப்பதுபோல்
ஓசைபட அவற்றை உதறிக் காயப்போடுகையிலும் –
துயரம் என் நெஞ்சை அடைக்கிறது. ஏனம்மா
உன் முகத்தில் இத்தனை வெஞ்சினம்? கருணைக் கொடூரம்?

பற்கள் கிடுகிடுக்க நடுங்கும் என் வெற்றுடம்பைக்
கைகளால் அணைத்தபடியே – இந்த ஆற்றுவெளியைப்
பார்த்துக்கொண்டிருக்கும் என்னை அதட்டியபடி
என்னைக் கொன்றுவிடுபவள்போல்
தண்ணீரில் தள்ளி அமுக்குகிறாய்
பிறகு கை பிய்ந்துவிடுவதுபோல் கரைக்கு இழுக்கிறாய்

ஏனம்மா, இத்தனை வெறியுடன் என் தலையைத் துவற்றி –
அடித்து விரட்டுவதுபோல் தள்ளுகிறாய்?
உன் விரல்களிலிருந்த மென்மைகளை
ஏன் தொலைத்தாய்? எங்கு தொலைத்துவிட்டாயம்மா?

ஆற்றிலிருந்து வீட்டுக்கு – தூய்மையுடனும் ஈரத்துடனும் –
சுமைகளோடுதான் சென்றுகொண்டிருக்கிறோம்.
வழியில் ஆறுதலாக ஒரு வார்த்தை பேசக்கூடாதா, அம்மா?

என்ன விசேஷம் அம்மா, இப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி
இன்றென்னை சிறப்பாக அலங்கரிக்க நினைக்கிறாய்?

பக்கத்து வீட்டிலிருந்து வாங்கி வந்த இஸ்திரி பெட்டியால்
நெருப்புக் கனல, உடலெல்லாம் வியர்க்க
நீ என் சட்டையை
அழுத்தித் தேய்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்கையில்
உன்னை நெருங்கவே அச்சமாக இருக்கிறதம்மா

Read more...

தோலுரித்தல்

வலியோ வலுவோ
கொலைவெறியோ குணவெறியோ காமமோ
இன்னதென அறியாததொரு கொந்தளிப்புடன்
அந்த மரநிழலில் அமர்ந்திருந்தேன்

கல் மரத்தைத்
தாக்கித் தாக்கிப் பிளக்கும் கோடரியின்
தணியாத வேகமோ-
உயிர்க் குருத்தைத் தேடும்
சிறுத்தைத் தசை நாரோ-
என் சுவாசத்தை என் சுவாசமே
தன் மோப்பத்தால் ஆராய்ந்துகொண்டிருக்க
வழிவிட்டு அமர்ந்திருந்தேன்

பாளை அரிவாள் முன் நிற்கும் வாழை மரம் போலவோ
கத்திமுன் உருண்டுகிடக்கும் பலாக்கனி போலவோ
இன்றில்லை வாழ்க்கை

பகற்கனவோ மனக்கோளாறோ என
விரியும் சில படிமங்களில்
திணறினேனோ இளைப்பாறினேனோ
நான் அறியேன்

வீழ்த்தி தரையில் போட்டு ஏறி மிதித்தபடி
அட்டுப் பிடித்துப் பிடித்துக்
கெட்டித்ததில் வளர்ந்த சிராய்களையெல்லாம்
இழைப்புக் கோடரியால்
எரியும் நெருப்பை நோக்கிச்
செதுக்கித் தள்ளுகிறேன்

வயிற்றைக் கீறி பின் தைத்து
சிசுவையும் தாயையும் பத்திரமாய்க் காப்பாற்றிக்
கைகழுவிக் கொண்டிருக்கும் மருத்துவன் போல்-
வாடாமல் ஓங்கி நின்றிருந்த பனைஉச்சி ஓலைகளின் அசைவில்
கைகழுவும் நீரொலியைக் கேட்டபடி அமர்ந்திருந்தேன்

Read more...

Monday, December 3, 2012

மலம் தின்ன வைத்தல்

அதிர்ச்சியில்
அவர்கள் தாங்கள் செய்வதென்னவென்றே
அறியாமல் செய்து விடுகையில்
அதுவரை திட்டமிட்டு மறைக்கப்பட்டிருந்த உண்மை
அருவருக்கத்தக்க வெட்கக்கேடு
வெளிப்படையாகி விடுகிறதல்லவா?

Read more...

மலம் தின்ன வைத்தல்

கட்டு மீறத் துணிந்தவனை
இழுத்துவந்து உதைத்து, துடிக்கத் துடிக்கப்
பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு போட்டு
அவன் அலறலை
மீசையில் கைபோட்டு ரசித்தபடி
மீண்டும் அவனைக் குனியவைத்து
பிடரியில் மிதித்து அழுத்தி
மலம் தின்னச் செய்து
ஊரெல்லாம் பார்த்திருக்க
வெறிகொண்டாடி மகிழ்ந்தது
வேறு யாருமல்ல...
நான்தான்...

இவ்வேளை, வருந்தி வருந்தி
இக்கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் நான்,
ஒரு தலித் அல்ல;
ஒரு கவிஞன். இன்றைய பிரபஞ்சத்தின்
அதி சுரணை மிக்க ஒரே மனிதன். சமயங்களில்
தன்னைக் கடவுளெனச் சொல்லிக்கொள்ளும்
விசித்திரப் பிராணி

உச்சபட்ச வன்முறை பீரிடும் இந்த வெளிப்பாடு,
பெருந்துக்கமும் சுயமதிப்பும்
நீதியின்பாற் தீராத வேட்கையுமாய்த் தகித்தபடி
உலகின் ஒளியாய்ச் சுடர்பவர்களுக்காக அல்ல;
விடுதலைச் சிறுத்தைகளுக்காக அல்ல;
பகுத்தறிவச் சிம்மங்களுக்காகவும் அல்ல;
தங்கள் வாழ்க்கைப் பாணியால்
சாதி-மத-சாமி-மல அக்னிக்குத்
தவறாது நெய் வார்த்துக் கொண்டிருப்பவர்களுக்காக.
மலம் தின்று கொண்டிருக்கும் பார்ப்பனீயம்
தம் முகத்தைத் தாம் பார்த்துக் கொள்வதற்காக.
இரத்தம் செத்த சோனிகளும்
தோல் தடித்து மரத்துப்போன பேமானிகளும்
மானம் மரியாதை வெட்கம் சூடு மற்றும்
சுரணை பெறுவதற்காக!

Read more...

Sunday, December 2, 2012

இந்த வியாதிகளும் நாற்றமுமே நம் விதியா?

ஊறும் தென்னீரின் வெள்ளமெங்கே?
காதற் படகுகளும் மலர்களும் தென்றலும்
பறவைகளும் வெள்ளிமீன்களும் உலாவும்
அந்த நீர்நிலைகள் எங்கே?

நம் ஊற்றுக்கண்களைப் பொத்தி
அடைத்துக்கொண்டுள்ளது-
ஊறும் தென்னீரால்
அழிக்க இயலாத அளவுக்குத்
தேங்கிய நீர் விகாரக்கிடையின் பாரம்!

ஒட்ட இறைத்து
ஊறும் நீர் காண்பதற்கும்
காப்பதற்கும்
யார் சொல்லித் தரவேண்டும்?

Read more...

வீதி

விடிந்தும் விடியாப் பொழுதொன்றில்
தெரியாமல் ஓர் அக்ரஹாரத் தெரு வழியாய்
நுழைந்து நடந்துவிட்டேன்

வெறுப்பும் அருவருப்பும் பகைக்கோபமுமாய்
துயரமும் பதற்றமும் பாசாங்குகளுமாய்க்
கொதித்த முகங்கள் கண்டு துணுக்குற்றேன்
என் தவறுக்கு நொந்து உறுதியெடுத்தேன்

ஆனால் அதில் பயனில்லை
இன்று தவிர்க்க முடியாததாகிவிட்டது அவ்வீதி
மேலும் எல்லா வீதிகளிலும்
அதற்கிணையானதும் அது தொடர்பானதுமான
கொந்தளிப்பை உணர்ந்தேன்

தோணித் துடுப்போ?
பெரு மழையோ?
கம்பீர நீள நெடுங்கழிப் பெருக்குமாறோ?
குனிந்து கூர்ந்து கறைகள் துடைக்கும்
துடைப்பானோ?
தூரிகையோ?
வாளோ?
என்றெலாம்
சித்தரிக்கச் சித்தரிக்கத்
தீராத உன்னைக்
காதல் மிகு உறுதியுடன் கைப்பிடித்தேன்

Read more...

Saturday, December 1, 2012

தொனி

இன்றாவது அந்த மனிதனைப் பற்றிச்
சிந்திக்கத் தொடங்கினோமே
அதற்காக நம்மைப் பாராட்டிக் கொள்வோம்

நலம் விசாரிக்கையில்
’இருக்கம்-யா’ என்றொலித்த
அவன் குரலை வாசிக்க மதியற்றுப் போயிருந்த நாம்
கவிதைகளின் ’தொனி’ குறித்து
விரிவாக ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருந்தோம்

நாற்காலியில் அமர்ந்தபடியோ
வாகனத்தை ஒரு நிமிடம் நிறுத்தி
ஒரு கால் ஊன்றி நின்றபடியோ
அல்லது அவனது குழந்தையின் குரலிலோ
நாளையைப் பற்றிய நம்பிக்கை
பேசப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம்
’பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்’ என்றான் அவன்

அய்யா... என்ற இறைஞ்சல் பாதாளத்திலிருந்து
தோழர் என்ற பாதாளக் கரண்டியைப் பற்றியபடி
ஹலோ என்றவாறு அவனைச் சமீபிக்கையில்
மலர்முகமும் நீட்டிய கையும்
அறஅதிர்ச்சிக்குள்ளாகிப் பொசுங்கும்படி
அசிங்கமான ஓர் உஷார் நிலைக்கு வந்த அந்த மேலாள்
குரூரமாக அவனைக் கைவிடுகையில்
அவன் என்ன ஆனான்?
அவன் உயிராசை வேகமன்றோ பக்கச் சுவரில்
உடல் சிராய்க்கத் தொற்றிக்கொண்டு தவிக்கிறது இன்று

ஜாதியம் நாறும் ஒரு மதத்தின் மூலமா
’எல்லோரும் அமரர் நிலை எய்தும் நன் முறையை’
இந்தியா உலகுக்களிக்கப் போகிறது?

எந்தத் தத்துவத்திலிருந்து பெற்றது,
இன்றைய அவனது வலிமையும்
இதய விரிவும் இந்தப் போராட்டமும் அறிவும்;
அச்சத்தால் பீடிக்கப்பட்டு அருவருப்பான
அந்த மேலாளுக்கும் சேர்த்தே
விடுதலை வேண்டி உழைக்கும் அவன் பேராளுமை?
கருணையற்ற மனித உலகிற்குக்
கருணையின் பாதையைக் காட்டும் பேரருள்?

Read more...

இறுதி விண்ணப்பம்

அந்தக் காலங்களில்
குட்டி எஜமானர்களை விளித்த
ஏழைப் பண்ணையாட்களின் அந்தக் குரல்களில்
நானும் என் குரல் ஒலிக்கக் கேட்டேன்

அய்யா... அய்யா.. என்று
நெஞ்சுருக ஒலித்த அந்தக் குரல்!
பாசமோ
காணக் கிடைக்காத நேசமோ
தெய்வ தரிசன உருக்கமோ அல்ல

அது ஓர் இறைஞ்சல்

தன் மதிப்பின்மையும்
உழைப்பின் பாரமுமாய்த்
திக்கற்றுத் தோற்றுப்போன பலியாள்
தானே அறியாது
இறுதியாய் வைத்த விண்ணப்பம்

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP