Saturday, August 31, 2013

சுய குறிப்புகள்

ஆணா? பெண்ணா?
அர்த்தநாரீஸ்வரன்

Blood Group: O

பிடித்த அழகுசாதனம்: தோளில்
கனத்து விடாது தொங்கும்
இந்த பிரயாணப் பை

பிடித்தமான இடம்:
இந்த நெடுஞ்சாலை

பிடித்தமான காரியம்:
இந்தப் பிரயாணம்

உடற் களைப்பு நீங்க
சற்று ஓய்வு கொள்ளவும்
உணவு கொள்ளவும்
பிடித்த இடம்:
’அன்றன்றைக்குள்ள ஆகாரத்தை
அன்றன்றைக்கே தருகிற’
ஆரோக்கிய விலாஸ்
போர்டிங் அன்ட் லாட்ஜிங்.
(எங்கும் கிளைகள் திறக்கப்பட்டுள்ள
ஒரே நிறுவனம்.)

பிடித்தமான உறவு:
நான் நீ யென்றாதல்

பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்குநோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்கமுடிந்ததா?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தேன்

ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொரு காலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய்க் காய்த்து
இருட்டில் செய்வதறியாது
கத்திக் கொண்டிருந்தது

ஒரு நண்பனைப்போல்
சூர்யன் என்னைத் தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய்ப் பரவ
மெய் சிலிர்த்து நின்றது அந்த மரம்

Friday, August 30, 2013

சட்டை

என்னிடம் கையிருப்பதால்
அதுவும் கை வைத்திருந்தது
என் கழுத்துக்காக அது கழுத்து வைத்திருந்தது
என் உடம்புக்காகவே அது உடம்பு வைத்திருந்தது
(நான் அதற்காக ஏதாவது வைத்திருந்தேனா?)
ஆனாலும்
என்னைத் ’தேவதேவன்’ என்றல்ல,
ஒரு மனித உடல்
என்று மட்டுமே அது எடுத்துக்கொண்டிருந்தது
ஆகவே மனித உடல் எதையுமே
அது ஏற்றுக்கொண்டது
(இதன் பெயர்தான் மனிதாபிமானமா?)

எனக்காக அது பாக்கெட் வைத்திருந்தது
என் பணத்தை அது பாதுகாத்தது
என் உடம்பை அது கவனித்துக்கொண்டது

நான் அதற்காக
ஏதாவது செய்யணுமே எனத் துவங்கி
அதை சோப்புப் போட்டு சுத்தமாக்கினேன்
அதுவும் எனக்காக இருந்ததில் சோர்ந்து போனேன்

தனக்கென ஏதும் கேட்காத சட்டையுடன்
எங்ஙனம் வாழ்வேன்?

அதன் கைகளுக்காகவே என் கைகள்
எனக் கூறிச் சந்தோஷப்பட்டேன்
அதன் கழுத்துக்காகவே நான் என் தலையை
வைத்திருக்கத் துணிந்தேன்
அதன் உடம்புக்காகவே என் உடம்பு
அதைச் சுமந்து செல்லவே என் கால்கள்
இல்லாத அதன் உயிருக்காக
என் உயிர்

Thursday, August 29, 2013

டிராஃபிக் கான்ஸ்டபிள்

பால்யத்தில்
மந்தை அணைத்துக் கூட்டிவரும்
மேய்ப்பனைவிட
ஆயிரக்கணக்கானோர்க்கு
வழிகாட்டுவான் போல்
மேடையேறி முழங்குகிறவனைவிட
இவனே ஆதர்ஸமாய் நின்றதைக்
காலமற்றுப் பார்த்தபடி
வெறித்து நின்ற என்னை உலுக்கி
மெல்லச் சிரித்தது
ஆடோமாடிக் சிக்னல் இயந்திரம்
மஞ்சள் ஒளிகாட்டி, அடுத்து
பச்சை வரப் புறப்பட்டேன்.
இவ்விதமாய்ச் சென்று
இன்று திகைக்கிறேன்
முடிவில்லாப் பாதை ஒன்றில்


II
மக்கள் மக்கள்
மக்களேயாய்க் கசங்குகிற
அவசரமான சாலைகளில்
நொந்துபோய் நின்றுவிடுகிற
நண்பா!

அவர்கள் எத்தனையோ
அத்தனை கூறுகளாய்
உடைந்து துன்புறும் உன் உளளத்தில்
என்று நிகழப் போகிறது
அந்த மாபெரும் ஒருமிப்பு?
பரிச்சயப்பட்டவர்களோடு எல்லாம்
உறவாடிப் பார்த்ததில்
கை குலுக்கி விசாரித்த அக்கறைகளில்
குற்றவுணர்வுகளில்
எதிரொளிக்கும் புன்னகைகளில்
காபி ஹவுஸ்களில் நம்மை இணைக்கிற
டேபிள்களில்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
நம் கதைகளை விண்ணில்
கிறுக்கிப் பறக்கிற ஈக்களில்
ஒரே படுக்கை சமைத்து
உடலையும் வருத்திப் பார்த்த
தாம்பத்யங்களில் – என்று
எப்போதோ கிடைத்த
ஒரு கணச் சந்திப்பை
நீட்டிக்க அவாவுகிற
உன் எல்லாப் பிரயத்தனங்களிலும்
லபிக்காத அம் மாபெரும் சந்திப்புக்காய்
என்ன செய்யப் போகிறாய்?
இனி என்ன செய்யப் போகிறாய்?

நிறுத்து!
நிறுத்து! என்றான்
டிராஃபிக் கான்ஸ்டபிள்
அன்று முதல்
என் எல்லாப் பிரயத்தனங்களும்
ஒழிந்து
குறியற்றது எனது பயணம்

III
சலவைசெய் துணியாய்
முன்னும் பின்னும்
போவோர் வருவோர் என
கசங்கிக் கசங்கி
நீ உன் அழுக்கைக் கக்குகிற
இந் நீள் சாலையில்
ஒவ்வொரு முகமும்
தன் நிழல் வீசி
உன்னைக் கடந்து செல்ல
நீ அவற்றைக் கடந்து செல்ல
என்றைக்கு நீ
இவ்வேதனையைக் கடந்து செல்லப் போகிறாய்?

என்றாலும்
என்ன ஆச்சர்யம்!
உன் வழியே நீ செல்லும்
இவ்வுறுதியை உனக்கு யார் தந்தது?
அவர்களை அவரவர் வழி விட்டுவிட
யார் உனக்குக் கற்றுக் கொடுத்தது?
இதுதான் அம் மாபெரும் சந்திப்புக்கான
ஒருமிப்புக்கான
பாதையாயிருக்குமென
யார் உனக்குக் காட்டித்தந்தது?

தார்ச் சாலையில் உதிர்ந்த பூவை
மிதித்துவிடாமல் விலகியபடியே
அண்ணாந்த விழிகளால்
உயரே மொட்டை மாடியில்
கூந்தலுலர்த்தும் பெண்ணை
(புணர்ச்சியின் பவித்ரத்துக்கான தூய்மை)
காற்றாகித் தழுவியபடியே
முன் நடக்கும் தோள்க் குழந்தையின்
பூஞ்சிரிப்பில் கரைந்தபடி
எங்கேயும் மோதிக்கொண்டுவிடாமல்
அற்புதமாய்
சைக்கிள் விடப் பழகியிருக்கிறேன்.
அடிக்கடி குறுக்கிடும்
டிராஃபிக் கான்ஸ்டபிள்
சமிக்ஞையின் முன்
ஒரே கணத்தில்
அலறாமல் அதிசயிக்காமல்
மரித்து உயிர்த்து
செல்லும் வாகனங்களிலே
என் குருதி ஓட்டத்திலே
ஓர் ஒழுங்கியலைத் தரிசித்திருக்கிறேன்

Wednesday, August 28, 2013

சிறகடித்து பாயும் அம்புகள்

ஏக்கத்தைத் தூண்டும்படி
வானளாவிப்
பறந்து சென்றுகொண்டிருந்த கொக்குகள்
இறங்கி வந்து நின்றன
பச்சையும் ஈரமும் ததும்பிய பூமியில்

சகதிக்குள் கால் மாற்றி மாற்றி நடக்கும்
கச்சிதமான அழகுடைய
வெண்ணிறப் பறவைகள்
துளியும் தன் தூய்மை கெடாதவை

ஒற்றைக் காலில் நின்ற கொக்குகளால்
கொத்திச் செல்லப்பட்ட மீன்களுக்குத்
துயர் ஏதும் தெரியுமா
கொக்குகளின் அலகில் அது துடிக்கும்போதும்?
அந்த மீன்களின் ஆனந்தத்தையும் அறியாது மீறிய
அற்புத உணர்ச்சி
பறவைகளின் வயிற்றில் உதித்து இயங்கும் பசி


II

”ரொம்பக் கெட்டுவிட்டது பூமி” என வெறுப்புடன்
என்னைத் தனிமைக்குள் தள்ளிவிட்டு
வேகமாய் ஓடின கொக்குகள்
இன்னொரு கிரகத்தை நோக்கி
”அங்கும் இப்படியானால்”
என்று தன் ஓட்டத்தையும் கசந்தபடி
பறந்து சென்றன கொக்குகள்.
நெடுங்கால்கள் பின் நீள
கூர் அலகு முன் நீட்டிச்
சிறகடித்துப் பாயும் அம்புகள்
காற்றில் புகுந்து
விண்ணில் புகுந்து
என்னில் புகுந்து அவை சென்றன


III

பூமியை விட்டு வெகு உயரே
நான் இல்லாத அந்த அகண்ட வெளியில்
வெறுமே
சதா
சிறகடித்துக் கொண்டிருக்கும் இந்த அம்புகள்
ஒரு மின்னலைப் போல்
சற்று நேரமே தோன்றிமறைவதால்
’அற்புதமான காட்சி!’


IV

எங்கிருந்து அவை எங்கே செல்கின்றன?

ஓராயிரம் சுகதுக்க முரண்கள் குமுறும் கடல் நான்
என்னை அவை கடந்து செல்கின்றன
என்பது மட்டும் தெரியும்

தெரிந்தவை குறித்த சந்தோஷமும்
தெரியாதவை குறித்த துக்கமும் இல்லை
அப்போதைய அனுபவம் என்பதிலுள்ள ஆனந்தத்தில்
ஆதலால் ரொம்ப அறிந்தவன் போல்
நான் இப்போது எழுதியதும் உண்மையில்லை

ஆனந்தமாய் அவை பறந்து சென்றுகொண்டிருந்தன
ஆனந்தமாய் நான் அவற்றைப் பார்க்க முடிந்ததால்


V

அப்போது என்னில் சுகதுக்கம் குமுறும் நான் இல்லை
நான் இல்லாததால் அதில் ஒன்றுமேயில்லை
ஒன்றுமேயில்லாததால் அது ஆனந்தமாயிருந்தது

நான் இல்லாததால் அதில் எல்லாமேயிருந்தது
எல்லாமேயிருந்ததால் அது ஆனந்தமாயிருந்தது

ஒன்றுமேயில்லாததில் எல்லாமேயிருந்தது
எல்லாமேயிருந்ததில் ஒன்றுமேயில்லை

ஒன்றுமேயில்லாததில் காலமுமில்லையாதலால்
எப்போதும் அவை ஆனந்தமாய்ப் பறந்துகொண்டிருக்கின்றன
எப்போதும் அவை ஆனந்தமாய்ப் பறந்து கொண்டிருப்பதால்
எல்லையற்றது வானம்; எல்லையற்றது ஆனந்தம்
எல்லையற்றது இயக்கம்

எல்லையற்றதால் சுதந்திரம்; சுதந்திரம் ஆனந்தம்
ஆனந்தத்தில் ஒன்றுமேயில்லை

ஒன்றுமேயில்லாததில் இடமுமில்லையாதலால்
எங்கிருந்து அவை எங்கு செல்லக்கூடும்?
இன்மையிலிருந்து இன்மைக்கு
அல்லது எல்லாவற்றிலிருந்தும் எல்லாவற்றிற்கும்
அல்லது சுதந்திரத்திலிருந்து சுதந்திரத்திற்கு
அல்லது ஆனந்தத்திலிருந்து ஆனந்தத்திற்கு

Tuesday, August 27, 2013

சின்னஞ் சிறிய சோகம்

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம் முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே

விழித்திருந்தலே
என்னை வெளிப்படுத்துகிறது

இரவின் மயான அமைதி
என் தனிமையைப் போக்கும் புத்தகங்கள்
கடிகாரத்தின் டிக்டிக்கில்
காலக் குழந்தையின் தேம்பல்

ஆனால்
என் முன் வந்து
குறும்புடன்
(என்னை விழித்தவாறே கனவுகாண்பவனாக்கியபடி)
என் விழிப்பையே வேடிக்கை பார்க்கும் மௌனம்

அந்த மௌனத்தோடு
நான் மௌனமாய் இணைகையில்
வெளிப்பதுவது; மௌனம் மற்றும்
அதில் ஒரு பேருயிராய்க் ததும்பும் இறவாமை

படுக்கையில் எனது குழந்தை நெளிந்தது
இறவாமை(அம்ருதா) என்பது அதன் பெயர்
ஒரு கொசு அவள் மேலிருந்து எழுந்து விலகி
அவளைச் சுற்றி வட்டமிடுகிறது
அதன் ரீங்காரத்தில்
வெறிமிகுந்த ஒரு போர் விமானம்.
கையிலுள்ள புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு
அக் கொசுவை அடிக்க முயலுகிறேன்
தோற்றுத் தோற்று அலைகிறேன்
பத்து விரல்களும் கூடிய எனது கைகளால்
அதை அடித்துக் கொல்ல

இதுவே எனது வேலை எனும்படி முழுக்கவனமாக
கடைசிவரை அதை விரட்டிக்கொண்டே இருக்கிறேன்
துயிலும் எனது குடும்பத்தின் நடுவே

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம்முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே

Monday, August 26, 2013

பொந்துகளிலிருந்து…

வீட்டுக் கூரைகளாய் அமைந்த வெளியில்
உலவும் அணிலுக்கு
பெருச்சாளிகளைப்போல் தோன்றினர் மனிதர்கள்

மெய்யான கனிகளையோ
அதன் வேரையோ
காண இயலாத பெருச்சாளிகள்
அணில்களைக்
’குதித்தோடும் பழங்கள்’ என்றே
கவிதையில் எழுதின
கடித்துத் தின்னவும் தின்றன

மரங்களை
’பெயர்க்க இயலாப் பெரும்வேதனை’ என்றும்
’நகர இயலாத நொண்டி’ என்றும் எழுதின

பிசகாய் கக்கூஸ் கோப்பைக்குள் விழுந்துவிட்ட
ஒரு பெருச்சாளிக் குஞ்சு
கரையேற முடியாது வழுக்கி வழுக்கி விழ
முயற்சியைக் கைவிட்டு
மலத்தின் பெருமைகளை எழுதத் தொடங்கிற்று

எப்போதும்
பொந்துகளிலிருந்து பொந்துகளை நோக்கியே
வாகனாதிகளில் விரைந்த பெருச்சாளிகள்
சூர்யனைக் காணப் பயந்தவை

இருளில் சுறுசுறுப்பாயலையும் இப்பெருச்சாளிகள்
பகலில் கருப்புப் போர்வையணிந்து கொண்டே
கதிரொளியில் விளைந்த தீனி பொறுக்கும்
விதியின் கேலியை
நினைத்து நினைத்துச் சிரிக்கும் அணில்

சூர்யவொளியில் நனைந்தபடி
மரக்கிளை மீது
ஆனந்தமாய் குதித்தோடும் அணில்,
சூர்யனைக் காண அஞ்சும்
பெருச்சாளிகளைக் கண்டு அஞ்சுவதே
விந்தைகளிலெல்லாம் பெரிய விந்தை
சோகங்களிலெல்லாம் பெரிய சோகம்

Sunday, August 25, 2013

குப்பைத் தொட்டி

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கவிஞன் அவன்
ஆகவே மிகப்பெரிய கவிதையும் அவனே

மனிதர்களின், உபயோகித்துக் கழிக்கப்பட்ட
பல்வேறு பொருள்களையும், அதன் மூலம்
பல்துறை அறிவுகளையும் அவன் ஏற்கிறான்,
யாதொரு உணர்ச்சியுமற்று
(மனித உணர்ச்சிகளின் அபத்தம் அவனுக்குத் தெரியும்!)

நவீன உலகைப்பற்றிய
ஒரு புத்தம் புதிய கொலாஜ் கவிதையை
அவன் ’தன்னியல்பா’கவே சமைக்கிறான்
(மூக்கைத் துளைக்கவில்லையா அதன் வாசனை?)
அவன் செய்ததெல்லாம் என்ன?
மனிதப் பிரயத்தனத்தின் அபத்தத்தை அறிந்து
ஒரு குப்பைத் தொட்டியாக மாறி நின்றது ஒன்றுதான்

ஆனால் அந்த நிகழ்வின் அசாதாரணம்
அவனை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கவியாக்குகிறது

’என்னைப் பயன்படுத்திக்கொள்’ என்று
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
ஒரு பெருங் கருங்குழியாக்கிக் கொண்டு
திறந்து நின்ற அந்த முதல் நாளை
அதன்பிறகு ஒரு நாளும் அதற்குத் தெரியாது.

அது தான் உட்கொண்ட பொருளை
ஜீரணிப்பதுமில்லை; வாந்தியெடுப்பதுமில்லை.
(இரண்டுமே ஆரோக்யம் சம்பந்தப்பட்டவையல்லவா?)
மனிதார்த்தத்தை மீறிய
மனிதனைப் பற்றிய, உன்னத கவிதை அது

தரித்திரத்தோடு, இவ்வுலகப் பொருள்கள் மீதே
வெறிமிகுந்த பஞ்சைகளும் பரதேசிகளும்
அக் குப்பைத் தொட்டியில் பாய்ந்து
முக்குளித்து எழுகிறார்கள்.
குப்பைத் தொட்டியின் மூர்த்திகரத்தைப் புரிந்துகொண்ட
பாக்யவான் விமர்சகர்கள் அவர்கள்

Saturday, August 24, 2013

பச்சைப் பாம்பு

பாம்பு தன் நிறத்தை மாற்றிக்கொண்டு
மரத்துடன் அது செய்துகொண்ட இணக்கம் என்ன?
ஒன்றுமேயில்லாத அன்பு

அதன் கூரிய நாக்கு
உன் கண்களைப் பார்த்தே கொத்திவிடும்;
காலத்தின் கருவளையமிட்ட உன் கண்களை
உன் கண்களைப் பாதுகாத்தபடியே
இடுக்கிவிட முடியுமா நீ அதன் தலையை?

இடுக்கியபடியே இன்னொரு கையால் காமத்துடன்
அதன் உடலைத் தழுவி உருவுகிறாய்
அந்த உடலின் உக்கிரநெளிவில்
காண்கிறாய்;
ஒரு நீண்ட நதி மற்றும்
ஒரு சவுக்கு

துயரங்கள் பற்றி

இந்த மரத்தையும் என்னையும்
ஒன்றாய்ப் பிணைப்பது எது?
வேறு வேறாய்ப் பிரிப்பது எது?

லோடு லாரிகள் போகும்போதெல்லாம்
வலித்து இழுத்து இம்சித்துவிட்டுப் போகின்றன
இம்சைப்படுவது எது?

தறிக்கப்பட்டுத் தரையில் கிடந்த கிளை –
அலைக்கழியும் எனது உடலா?
இல்லை
துயருறும் எனது ஆன்மாவா?
இல்லை;

துயர்

அரிவாளுடன் நான் மரத்தைவிட்டு இறங்கும்போது
”இறங்காதே” என்றது,

இந்த மரத்தையும் என்னையும்
ஒன்றாய்ப் பிணைத்ததும்
என் கேள்விகளுக்குப் பதிலாகி
என் கேள்விகளை விழுங்கியதுமாகிய

ஏதோ ஒன்று

Friday, August 23, 2013

உச்சிவெயிலின் போது

இந்த வீதியைப் பார்க்கும் போதெல்லாம்
ஏதோ ஓர் உணர்வு
என்னை அறுக்கிறது

உச்சிவெயிலில் ஒருவன் நடக்கிறான்
அவனைப்பற்றி நீ ஏதும் சொல்வதில்லை.
அவன் நிழலை நோக்கி நடந்துகொண்டிருக்கிறான்
என்று நீ அறிவாய்.
உச்சிவெயிலின் போது எல்லோருமே
தங்கள் பொந்துகளிலும் நிழல்களிலும்
ஒதுங்கிக்கொள்கிறார்கள்
படுகொலைகள் நடக்கின்றன வீதியில்
அகால மரணமடைகின்றன இளநீர்க்காய்கள்

உச்சிவெயிலில் ஒருவன் நிற்கிறான்
நீ வியக்கிறாய்
அவனைக் கிறுக்கன் என்கிறாய்
(மரங்கள் கிறுக்குப் பிடித்தவையே)

உச்சிவெயிலில் அவன் அயராமல் நிற்கிறான்
ஒரு பனித்தூண் போல

சற்று நேரத்தில் அவனைக் காணோம்
அவன் ஓர் அடி எடுத்து நகரவும் இல்லையே


ஆனால் அப்போது இருந்தது அந்த இடத்தில்
கழிவிரக்கம் மற்றும் எவ்வகைத் துக்கமும் அற்ற
எனது கண்ணீரின் ஈரம்

Thursday, August 22, 2013

காதலிக்கு

விவாஹம் கொள்ளாமல் விவாகரத்தும் செய்துள்ளோம்
உன் அலுவலகம் நோக்கி நீ
என் அலுவலகம் நோக்கி நான்
செல்லும் வழியில் நாம் புன்னகைத்துக் கொள்கிறோம்

’குட்மானிங்’ – நாம் பரிமாறிக்கொள்ளும் ஒரே ஒரு வார்த்தை
ஒரு சிலநாள் ஒருவரை ஒருவர் காணவில்லையெனில்
ஊகித்துக்கொள்கிறோம். என்றாவது ஒரு நாள்தான்
அதன் சுக-துக்கம் குறித்து
சிக்கனமான சில வார்த்தைகளில் பேசிக்கொள்கிறோம்

ஒவ்வொரு நாளும் உன்னைக் காணுகிற உற்சாகத்தில்தான்
காலைப் பொழுதில் மலரும் என் புத்துணர்வு
தளர்வுறாமல் தொடர்கிறது

இன்று ஆபீஸுக்கு லீவு போட்டு விட்டேன்
படுக்கையிலிருக்கிறேன்
நீ வீதியில் வராத சில நாட்களில்
எனக்கு நிகழ்வது போலவே
உனக்கும் ஒரு வெறுமை தோன்றும் இன்று
மீண்டும் நாம் சந்தித்தபடி ஒருவரையொருவர்
சிரமமின்றிக் கடந்து செல்வோம்
ஆனால் வாரம் ஒன்றாகிவிட்டது
உடல் தேறவில்லை
மருத்துவ விடுப்பும் கொடுத்துவிட்டேன்
இப்போது உடல் … மிக மோசமாகத்தான் ஆகிவிட்டது
தொடர்ந்து என்னைக் காணாதது கண்டு
நீ கலவரமாட்டாய்

இன்று என் ஸ்வவ்வை நானே பற்ற வைப்பது
இயலாது போகிறது
உன் கைகள் கிடைத்தால் தேவலாம் போலிருக்கிறது
என் முனகல் கேட்டு வந்தன அக்கம்பக்கத்துக் கைகள்
நான் மரிக்கும்போது
இந்தக் கைகளுக்குள்ள முகங்கள் துக்கிக்கும்;
நீ அழவும்
மரித்த பொருள், என்று உனக்குச் சொந்தமென்று இருந்தது?
என்றாலும், கவனி:
நான் உன் பாதையை அலங்கரித்திருக்கிறேன் –
உன் தலையிலிருக்கும் ஒரு ரோஜாவைப் போல

இந்தப் பத்து வருடங்களில்
தொலைந்துபோன ரேஷன் கார்டுக்காக;
பொருள்கள் களவு போன ஒரு நாள்
அதைப் போலீஸில் எழுதி வைக்க வேண்டி; என்று
இரண்டே இரண்டு முறைதான்
நான் உனக்குத் தேவைப்பட்டிருக்கிறேன்

நான், கொத்தமல்லித் துவையலுக்கும்
பித்தான் அறுந்து குண்டூசி மாட்டியிருக்கும்
என் சட்டைக்குமாக
உன்னை அணுக முடியுமா?

ஒரு விடுமுறை நாளில் நீ சமைக்கையில்
அல்லது
உன் சீதா மரத்தில் கனிகள் பறிக்கையில்
என் ஞாபகம் உனக்கு வந்திருக்கும்
அதற்காக, மறுநாள் பார்க்கையில்
அந்தக் கனிகளுடன் என்னை நீ நெருங்கவில்லை
என் மிகச்சிறிய தோட்டத்து ரோஜாப்புதரில்
அபூர்வச் சிரிப்புடன் என்னை வியக்க வைக்கும்
ரோஜாவைப் பார்க்கையில் எனக்கு உன் ஞாபகம் வரும்
அவரவர் ரோஜாவை அவரவர்தான்
பறித்துக் கொள்ள வேண்டுமென்ற நியதி
அன்று அதைப் பறித்துக்கொண்டு உன்னை அணுகும்
அற்பச் செயலில் என்னை ஈடுபடுத்தாது தடுக்கும்.
இந்த அனுபவத்திலிருந்துதான்
நானும் உன்னைப் புரிந்து கொள்கிறேன்
உன் படுக்கையில் நீ என் துணையை வேட்கிற
ஒரு இரவை நீ கண்டிருக்கலாம் எனினும்
காலையில் அந்த நோக்கத்துடன் நீ
என்னிடம் என்றும் புன்னகைப்பதில்லை
நான் அறிவேன் ஜானகி, உன் புன்னகை
நூற்றுக்கு நூறு அஸெக்சுவலானது;
உயிரின் ஆனந்தத்தைப் பிரதிபலிப்பது;
தெருப் பொறுக்கிகளால் இனம் காண முடியாதது;
மலினப்படுத்த முடியாதது

Wednesday, August 21, 2013

திரை

1.
அவரை பீர்க்கு புடலை பிடிக்க
வேட்டைச் சிலந்தி வலையாய்ப் பந்தல்
அதில் நிலா விழுந்து சிரிக்குது
கொடிவீசத் தொடங்கியுள்ள புடலை
மஞ்சத்து ராணியைப் போல் தலை தூக்கி
ஒய்யாரமாய்ப் பார்க்குது

மதில் கதவின் தாழ்ப்பாள் நீங்குகிற ஒலியில்
திடுக்கிட்டு எழுந்தாள் ஜானகி
தன் கணவரை வரவேற்க; அப்பொழுதே
வலைவிட்டுக் குதித்து உயரத் தனித்தது நிலா
வயிறுகொண்டு ஊரும் ஜந்துவாயிற்று புடலை
திரையாகக் கணவன் முன் போய் நின்றாள் அவள்

2.
குளித்து அழுக்கு நீங்கி நிற்கின்றன தாவரங்கள்
மேகம் நீங்கி ஓடிவந்து
கண்ணாடி ஜன்னலைத் தழுவிய குளிரைக்
கொஞ்சுகிறது வெயில்
உள்ளே ஜானகி
அவள் கணவன் இன்னும் வரவில்லை
கண்ணாடி ஜன்னல் காட்டுகிறது;
சிட் சிட்டென்று
வெளியை முத்தமிடுகின்றன குருவிகள்

அழைப்பு

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னைச் சூழ…
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது

சருகுகள்

விலங்கு அடித்துப் போட்டிருந்தது
அவனை.
ஜீவனற்ற விரல்களிலிருந்து
விலகி ஓடிற்று பேனா
சருகுகள் உதிர்ந்துக் கிடக்கிற காட்டைக்
காடு உற்றுப்பார்க்கிறது
விலங்கின் காலடிகளை
சப்தித்துக் காட்டுகின்றன சருகுகள்

Tuesday, August 20, 2013

ஓர் அந்திப்பொழுதில்

இளமைக்கும் செழுமைக்கும்
மெருகு ஏற்றிக் கொண்டிருந்தது
மஞ்சள் வெயில்.
புல்தரையின் ஒரு பூம்பாத்தியில்
வாடி உதிர்ந்துள்ள மலரிதழ்கள்
குருவி ஒன்று அவன் விழியைக்
கொத்தித் தின்னுவதைப்
பார்த்துக்கொண்டிருந்தது
விழியற்ற வானம்
குருட்டு உடல் வண்ணத்துப் பூச்சி தவித்து
ரோஜாவின் முள் குத்திக் கிழிந்தது
இரண்டு பிரம்பு நாற்காலிகளின் கீழ்
காலியான இரண்டு தேநீர்க் கோப்பைகள்
நிரம்பி வழிந்தன ஏதுமற்று

காற்றடிக் காலம்

1.
தும்பிழுத்துக் கதறும் கன்றாய்
பறக்கத் துடித்தன மரங்கள்
பறக்கத் துடிக்கும் கூண்டுப் பறவையாய்
சுவர் ஜன்னலும் படபடக்கிறது
பறக்க இயலாத சோகத்தில்
முறிந்து விழுந்து அழுதது முருங்கைமரம்
விளையாடப் போன தம்பி
வெகுநேரமாய்த் திரும்பாததில் பயந்து
தேடிக்கொண்டு வந்து
நையப் புடைத்தாள் அம்மா
தானும் பறக்கத் தவிக்கும் கூரையைக்
கஷ்டமாய் பார்க்கிறான் குடிசைக்காரன்

2.
ரூபமற்ற சாரமற்ற இங்கிதமற்ற காற்று
எதிரே வருபவர்களையெல்லாம் வீதியில் வைத்து
வெறிகொண்டு தழுவுகிறது
முகஞ்சுளித்துப் பழித்துப்போனாள்
வயசுப்பெண் ஒருத்தி
வெகு உயரத்தில் திரிந்த பறவைகள்
இறக்கைகள் களைத்து, மரக்கிளை
புல்வெளிகளில் இளைப்பாறி நிற்கின்றன.
காற்றில் சுழித்து
மரக்கிளையில் குத்திக்கொண்ட பட்டம்,
நூலில் இழுபட்டுக் கிழிய
கைவிட்டு ஓடிப்போன குழந்தைகள்
நவ்வா மரத்தடியில் பழம் பொறுக்குகின்றன
ஓலை கிழித்துச் செய்த காற்றாடி வட்டங்களில்
காற்று திணறியது
காலம் மறந்தது; வேதனை மறந்தது;
மகிழ்ச்சி விளைந்தது பிள்ளை முகங்களில்
சுழலாது பிணக்கும் காற்றாடி இறக்கையைத் திருகி
’மந்திரம்’ சொல்லிச் சுழல வைப்பான்
அண்ணக்காரச் சிறுவன் தன் தம்பிக்கு

3.
வேரூன்றவே தவிக்கும் விழுதாக
மரக்கிளையில் நாண்டு தொங்கிய
அனாதை ஒருவன்.
ஊன்றி வலுத்த மரத்தடியில்
காற்றடிக்க அடிக்கச்
சுற்றிச் சுற்றிவந்து
கனிகள் பொறுக்கும் குழந்தைகள்

Monday, August 19, 2013

கடலின் பெருங்குரல்

கடலின் பெருங்குரல் இடையறாது
நிலத்தை நோக்கிச் சொல்வதென்ன?
புரியவில்லை. மண்புயல்
பூமியைப் புரட்டிப் புரட்டித் தேடியது.
திடீரென மலையின் ஊற்றுத் திறந்து
ஓடிவந்தது கடலை நோக்கி
வழியெல்லாம் மண்புயல் அடங்கியது
பூமியின் புதையல்கள் மேலெழும்பி மலர்ந்தன
கடல் ஆரவாரித்து ஊக்குவித்தது பூமியை

தண்டவாளத்து ஆட்டுக்குட்டி

இணையாத தண்டவாளங்களின் நடுவே
நின்று அழுதது
தனித்ததொரு நிலவு.
இரு கண்ணீர்க் கோடுகளென
தண்டவாளங்கள் மேல் விழுந்த
அழுகை
நிலவு நோக்கி மீண்டு திரும்பி
இணைந்தது. உடன்
உட்கிரகித்து ஓடிவந்தது
நிலவைத் தன் தலையில் சூடியிருந்த
ரயில்.
பயந்து எழுந்து விலகி ஓடிற்று
தண்டவாளத்து நடுவே நின்ற
ஒரு ஆட்டுக்குட்டி. ரயில்
கையசைத்துச் சென்றது தன்போக்கில்.
உயிர் பிழைத்து வாழ்வை இழந்த
ஏக்கத்துடன் பார்த்து நின்றது
ஆட்டுக்குட்டி.
சங்கல்பத்துடன் மீண்டும்
தண்டவாளத்தில் போய் அமர்ந்தது.
இணையாத தண்டவாளம் கண்டு
அழுதது தனித்த அதன் நிலவு

Sunday, August 18, 2013

இருண்ட கானகத்தினூடே

1.
ஒருவன் செல்லுமிடமெல்லாம்
கருணை கொண்டு வழிகாட்டியவாறு
ஒரு ஒளியும் செல்வதெங்ஙனம்?
ஒளிரும் விளக்கொன்று
அவன் கையோடு இருக்கிறது

2.
முன்செல்வோனின் பாதம்பட்டு
முட்களற்று பூத்த பூமியே!
வியந்து பின்தொடர்ந்து
பின் தொடர்வோரின்
சுக பாதையான பூமியே!
நீ, பின்தொடர்வோனை வெறுத்தென்ன
தன்னை உணராமல்!

தன்னை உணர்ந்த பூமி
அந்த அம்மணப் பாதங்களை ஒற்றி ஒற்றி
அவனுடன் நகரும்
வெறும் பாதையாய் மீள்கிறது

கவிதை விவகாரம்

மல்லாந்து விரிந்த உன் மாம்சமுலைகள்
மணல் தேரிகள்
வேட்கையால் விடைத்த இமை மயிர்கள்
கரும் பனைகள்.
உன் காமாக்னி முகம்
செஞ்சூர்ய வானம்.
கொந்தளிக்கும் காமம்
சிறகடித்தெழும் வைகறைப் பறவைகள்.
மேனித் தழலில் உருகி உருகி மென்காற்றாகி
என்னை வருடுகிறது உன் மேலாடைக் காற்று.
என்னையே நோக்கும் உன் ஓடைவிழிப் பார்வைகள்
உன்னையே நோக்கும் என் நிழல்தான்.
விடைத்து நிற்கும் என் குறி
உன் ரகஸ்யங்களை உற்று நோக்கும் என் புத்தி.
அடியே!
பீரிடும் எனது இந்திரியமடி இந்தக் கவிதை!

Saturday, August 17, 2013

இவ்விடம்

சூரியனை விழுங்கக் குவிந்த
தாமரை இதழ்களுக்குள்
வண்டுதான் அகப்படுகிறது.
இங்கே
நகமும் வேண்டியிருக்கிறது,
நக வெட்டியும் வேண்டியிருக்கிறது.
அட, உதறுவதால் உருவாகும்
துணி மடிப்பின் நிழலை
உதறி உதறிப் போக்க முடியுமா?
என்ன சொல்கிறாய் நீ?

”வான் நோக்கி வளர்ந்து அடர்ந்து
நிழல் தரும் மரங்கள் ஏதும் கேட்கவில்லை.
பூமி நோக்கித் தொங்கி அடரும்
கொடியோ பந்தல் கேட்கிறது.
ஏழை நான் என் செய்வேன்?”

புலம்பாதே,
கொடியைத் தூக்கி மரத்திலிடு.
கடைத்தெருவில்
எவ்வளவு இருந்தால் என்ன?
எல்லாப் பொருளையும் விலை விசாரித்துக்கொண்டு
எதையும் வாங்காமலேயே போய்விடலாம்

விருட்சம்

கைகளை ஏற்றி
மார்பில் கட்டிக்கொண்டு
கண்கள் மாத்ரம் சுழன்றன

பார்வைக்குள் புகுந்த கனல்
கைகளை அவிழ்த்தது

கட்டு பிரிந்து விழுந்த
கைகள் இரண்டும்
மண்ணைத் தொட்டுத் துளைக்கும்
உயிர்ப்பு மிகுந்த விழுதுகளாயின

கால்களோ உயரே எவ்வி
வெளியை எட்டி உதைத்தன.
எட்டாது விலகி ஓடிற்று வெளி

கால் விரல்கள் கிளைத்து இலைத்து
விலகி ஓடும் வெளியை
இடையறாது விரட்டிற்று

பூமியிலிருந்து பூமியை
உதறி எழுந்த மேகங்கள்
இடையறாது வெளியை விரட்டும்
இலைகளைப் போஷிக்க
எழுந்து எழுந்து பொழிந்தன

Friday, August 16, 2013

ஓவியம்

அவள் அழகாயிருந்தாள்
அதன் காரணமாய்த்தான்
அவளை என் ஸ்டுடியோவுக்கு
அழைத்துச் சென்றேன்
பயந்து
சுற்றி முளைத்துள்ள
புலன் கதவுகள் வழியாய்
ஓட நினைத்தாள் அவள்
கதவுகளைச் சாத்தினேன்

அவளை உள்ளே போக்கி
மூடிய அறை
ஒரு தூரிகையாயிற்று
பயத்தில் இருண்டு
விகாரமாயிற்று அவள் அழகு

உள் விளக்கைப் போட்டு
ஒளியை அவள் மேல் பாய்ச்சி
அவள் அழகை மீட்டேன்

குவிந்து நின்ற
தூரிகையின் கதவுகள் திறந்து
திரைவெளியில் குதித்து
என்னை விட்டோடினாள் அவள்
தன் வழியைப் பார்த்துக்கொண்டு

உதிர்தல்

தயக்கமின்றி நேராய்த்
தரைக்கு வந்துசேரும் பழம்

தரையெங்கும் உதிர்ந்த இலைகளிலும்
(உருண்டு புலம்பாது
சாந்தி மேற்கொண்டவை மட்டும்)
கனியின் நிறம்

Thursday, August 15, 2013

கண்டவை

எனது அறையின் கீழே
ஒரு பலசரக்கு மளிகை.
ஆதலால் எலி நடமாட்டம்
தாராளம் உண்டு

நான் ஒழிந்த வேளைகளில்
என் அறைக்குள்ளே நிகழும்
அந்தப் பேரானந்தப் பெருங்கூத்து
எனக்குத் தெரியும்; ஆனால்
கதவு திறந்து நான் தோன்றுகையில்
அலங்கோலமாய்த்தான் கிடக்குது
என் அறை
O

வாசற்படியில் அமர்ந்து
தலை வாரும் ஒரு பெண்

வெளிப் பார்வையிழந்த விழிகள்,
சீப்பு பற்றிய விரல்களில்
சக்தியின் துடிப்பு, சிரசின்
கூந்தல் சிடுக்குகள் இளகி இளகி
விழுந்த மடியில் விழித்த ஒரு சிசு-
மடிவிட்டுத் தவழ்ந்து
முற்றத்து மையத்தில்
கண்டுவிட்டது தனது இடத்தை!
வியப்பில் எழுந்து நின்று
கைகொட்டிச் சிரித்தது
O

உரத்த காற்றில்
கொடியிலாடும் ஆடைகள்
உடல்கள் வேண்டி
ஆர்ப்பரிக்கும் விகாரங்களா?
அல்ல,
உடல்கள் துறந்த பரவசங்கள்!

ஆடை கழற்றி
வேறுவேறு ஆடை அணிந்துகொள்ளும்
மனிதனை நோக்கி
நிர்வாணம் கூறும் ஞானக்குரல்கள்!

அம்மணமான சிலரும்
தம் தோலையே தடித்து மரக்கவிட்டு
ஆடையாக்கிக் கொண்டது கண்டு
வீசும் எதிர்ப்புக் குரல்கள்!
O

மலர் மேய்தல் விட்டு
இணை துரத்தியது
ஒரு வண்ணத்துப் பூச்சி.
மலர் மொய்க்கச் சென்ற
இணைமேல் ஏறித்
தரையில் உருண்டன இரண்டும்

உருண்ட வேகத்தில்
மலர் அதிர்ந்தது
தரையில் சிந்திற்று ஒரு துளித் தேன்
உடன் எழுந்து பறந்தன இரண்டும்
அதனதன் மலர் தேடி

மண்ணில் சிந்திய தேன் நினைவு உறுத்தும்
ஒரு வண்ணத்துப் பூச்சிக்கு மாத்ரம்
மலரெல்லாம் நாறிற்று
தேனெல்லாம் புளித்தது
O

ஜுவாலை வி்ட்டு எரிந்தது செங்கொடி…
சாலை தடை ஆகி
பழுது பார்க்கப்பட்டது

பாடுபடும் பாட்டாளிகள் பாடு முடிந்தது…
எங்கே போச்சு செங்கொடி?
குருதியில் கலந்து போச்சு!
O

கூட்டிக் குவித்த சருகுகள்
எதிரே-
ஒரு குவிலென்ஸ்

பார்வை தரும் வெளிச்சம்
எனினும்
வீரியமற்றுப் பரந்திருந்த
சூர்யக் கதிர்கள் அவை-
குவியவும்
தோன்றுகிறது அந்த நெருப்பு
O

பாய்

பாய் விரித்தேன்
படுக்குமிடம் குறுகிப் போச்சு

என்னை மீட்க வேண்டி
அகண்ட வெளி
காலத்தை அனுப்பி
அபகரிக்க முயன்றது
என் பாயை

விட மறுத்தேன்
பிய்ந்து போச்சு

புதுப்புது பாய்கள் விரித்தேன்
வாழுமிடம் குறுகியதால்
வதைக்கும் சிறையாச்சு

ஒரு கண விழிப்பு
வெளியின் அழைப்பு
பாயைத் தூர எறிந்தேன்

Wednesday, August 14, 2013

வீடும் மரத்தடியும்

ஒரு பாலையில் போய் குடியிருக்கிறேன்.
காலையில் மேற்கில் விழும் வீட்டின் நிழலில்
தங்கிக்கொள்கிறேன்; மாலையில் கிழக்கில்.
வீட்டிற்குள் எனது கற்புடைய மனைவி.
வெப்பம் தாளாத உச்சி வேளை
வீட்டுள் போய் புணர்ந்து பெற்ற குழந்தைகள்
வெளியே நிழல்தேடி அலைகின்றன

விதைகள் சேகரித்து வந்தன, குழந்தைகள்
பாலையெல்லாம் சோலையாக்கத்
துடிதுடிக்கும் விதைகள்

இன்று
வீட்டின் முன்னே ஊமையாய் வளர்கிற மரத்துக்குக்
காற்று, பேசக் கற்றுக்கொடுத்துவிட்டது
பேசக் கற்றுவிட்ட மரம்
அனைவரையும் தன்னகத்தே அழைக்கிறது
மனைவியும் மரத்தடிக்கு வந்துவிட்டாள்
வெயிலில் நடக்கும் வழிப்போக்கர்களையெல்லாம்
மரம் அழைக்கிறது
மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்
தோழர்களாகிறார்கள்

Tuesday, August 13, 2013

புகுதல்

நிறை ஜாடியருகே
ஒரு வெற்றுக் குவளை

ஜாடிக்குள் புகுந்துவிட்டது
ஜாடி சரித்து
குவளையை நிரப்பிய
வெற்றுக்குவளையின் தாகமும் வெறுமையும்

சோப்புக்குமிழிகள்

மலைப் பிரசங்கமோ
அண்டத்தில் ஆயிரம் கோள்களைச்
சுழல விடும் வித்தையோ
ஜீவதாதுவினின்று உயிர்கள்
ஜனித்து உலவும் காட்சியோ
கூரை மேலமர்ந்து கொண்டு இச்சிறுவன்
விடும் சோப்புக் குமிழிகள்?

எல்லோரும் காணும்படிக்கு
தனது நீண்ட தொண்டைக் குழாயில்
காலம் கட்டி நின்ற அறிவுக்கரைசலை
உந்தியது
மெசாயா ஒருவரது
சுவாச கோசத்திலிருந்து மேலெழுந்த காற்று
அச்சு – வளையாய்க் குவிந்த
அவரது உதடுகள் வழியாய்
குமிழ் குமிழாய் வெளியேறிற்று
அவரின் அறிவுக் கரைசல்
அவரின் அச்சு – வளை உதடுகள்
குற்றமற்ற சூன்யவளையமாய் இருந்ததனால்
ஒளியின் ஏழு வண்ணங்களையும்
சற்றுநேரம் தாங்கியபடி
அழகழகாய் வானில் அலைந்தன
அவரது சொற்கள்!
சீக்கிரமே ஒளி தன் வெப்பத்தால் அவைகளை
உடைத்து உடைத்து முழுங்கிற்று
ஆ! அந்த ஒளிதான் என்றும்
பார்வைக்குக் கிட்டி
சொல்லில் அகப்படாதேயல்லவா இருக்கிறது!

Monday, August 12, 2013

மழைத் துளிகள்

இலைகளிற் தொங்கியபடி
யோசித்துக்கொண்டிருக்கும் மழைத்துளிகளே!

யோசனைகளாற் பயனென்ன?

கனம் கொண்டீரேல்
மண்ணின் தாகம் தீர்க்கிறீர்
இல்லையெனில்
கதிரவன் கொய்து உண்ணும்
கனிகளாகிறீர்

சாலையும் மரங்களும் செருப்பும்

வெயில் தாளாது ஓடிச்சென்ற சாலை
பெருமூச்செறிந்து நின்றது ஒரு மரநிழலில்
வரிசை மரங்கினூடே அச்சாலை
மெதுவாய் நகர்ந்துகொண்டிந்தது
நானோ,
மெதுவாய் நடத்தலையும், போகுமிடத்தையும் மறந்து
திகைத்து நின்றுவிட்டேன்.
மனிதர்களுக்கு இடைஞ்சலிக்காது
சாலையோரங்களில் மரங்களின் ஊர்வலம்
கானகத்தில் மரங்களின் மாநாடு
மரங்களின் ஒரே கோஷம்:
”மழை வேண்டும்!”
மழை வேண்டி வேண்டி
வானத்தைப் பிராண்டின கிளைகள்
நீர் வேண்டி வேண்டி
பூமியைப் பிராண்டின வேர்கள்
வெள்ளமாய்ப் பெய்த மழையில்
மரங்களும் சாலையும் நானும்
நனைந்தோம்
முளைவிடும் விதைமீது கிழிந்தது அதன் மேல்தோல்
நனைந்து பிய்ந்து போயிற்று எனது கால் செருப்பு

Sunday, August 11, 2013

அபூர்வ கனி

நீர்க்கரை மரக்கிளையில் முழுநிலா
அபூர்வமான ஒரு கனி
நீரில் குதித்து அள்ளி அள்ளிப் பருகினேன்
உனக்கென நான் அதை
அள்ளிவரத்தான் முடியவில்லை!

பூந்தொட்டியும் காற்றும்

ஒரே ஒரு பூமி – அதில்
ஒரே ஒரு விருட்சம்
நானோ அந்த பூமிக்கு வெளியே
ஆகவே, அந்த பூமியின்
அந்த விருட்சத்தின்
கடவுள் நான்

தாய் பூமியின் ஈர்ப்பு மடியில்
இந்த பூமி அமர்ந்திருக்கிறது
அங்கிருந்து இதற்கு
உணவும் நீரும் எடுத்துக் கொடுப்பது நான்தான்.
கடவுளல்லவா?

இவ்வளவும் எதுக்கு?
விருட்சம் தரும் ஒரே ஒரு பூவுக்கு

ஒரே ஒரு விருட்சத்தின்
வேர் முழுக்கத் தாங்கிய
ஒரே ஒரு பூமியின்
ஒரே ஒரு பரிசு இந்தப் பூ!

பூவின் சுகந்தமோ
பேரண்டமெங்குமிருக்கும்
எல்லாக் கோள்களையும்
கிளுகிளுக்கச் செய்கிறது

மாலையில் பூ மடிகிறது
கடவுளும் மடிந்து விடுகிறான்
இன்னொரு பூ மலரும்போது
கடவுள் உயிர்த்தெழுகிறான்
பூவின் சுகந்தமோ மடிகிறதேயில்லை
அவன் அடிக்கடி இதை மறந்து விடுகிறான்
அப்போதெல்லாம் மரிக்கிறான்

ஏதோ ஒரு ஆனந்தத்தின் சிலிர்ப்பில்
சலனத்துக்காளான வெளியின் வஸ்துகள்…
ஹே! இந்த சுகந்தத்தைக் கூடியும் கூட
அதைப் பொருட்படுத்தாது போவதெங்கே?

ஓடிப்போய்ப் பார்த்தேன்:

வாயிலும் ஜன்னல்களும் வரவேற்றன
நுழைந்தது காற்று. நுழைந்த கணமே
விரட்டுகின்றன வாயிலும் ஜன்னல்களும்

என் வீடு விரும்புவதென்ன?

உறைந்து நிற்கும் அம்மாவின்
புகைப்படத்தையும் மேஜை மீதிருக்கும்
காதலியின் புகைப்படத்தையும்
ஒரே கோட்டில் இணைத்தவாறு
தொட்டு விசாரமின்றிச் செல்கிற காற்றில்
இருவரும் புன்னகைத்து நிற்கின்றனர்!

காற்று சதா கடந்து செல்கிறது

தனது நிச்சலன முற்பிறப்பைத் தேடியா அது போகிறது?
அல்ல அல்ல
தன்னை உயிர்ப்பித்த ஆனந்தத்தின் சிலிர்ப்பை
எங்கும் உண்டாக்கியபடி
ஆனந்தமாய்ச் சென்றுகொண்டிருக்கிறது

Saturday, August 10, 2013

புயல் குருவிகள்

1.
வீதியைத் தாண்டித்தான் வெளியே வரவேண்டியுள்ளது
உள்ளே புக வேண்டுமானாலும் வீதியைத் தாண்டித்தான்

வெளிக்காற்றுக்காய் ஜன்னலைத் திறந்தால்
வேலையின்றிக் கறுத்த அவன் முகம்

காற்றைக் கோபப்படுத்துகிறது
ஜன்னல் மூடிய அறையுள் விசிறி

வெளியிலிருந்து வரும் காற்று
எவ்வாறு உலவுகிறது
வீதியில்?

காபி ப்ரேக்கில் வீதிக்கு வந்தவன்
கண்டான், காபி சாப்பிட அழைத்தான்

வேலை கிடைத்தவன் – வேலை கிடைக்காதவன்
இருவர் காபியிலும்
பருகி முடியும் வரை
ஒரே ருசி ஒரே சூடு

2.
தோழ,
தன் போக்கில் பூப்பெய்தியுள்ளவை நமது சுவாசகோசங்கள்.
தோழமைப் புணர்ச்சியில் புயல் கருக்கொள்கிறது.
ஆபிஸ் கட்டடம், மரக்கிளை எங்கும்
புயலை அடைகாக்கிறது குருவி. ஆனால்
புயல் கருக்களிலிருந்து பிறப்பதோ –
தோழ, நீ எதிர்நோக்கும் புயல் அல்ல;
புயல் குருவிகள் காண்!

Friday, August 9, 2013

ஒரு புதிய கருவி

ஆப்பின் தலையில் விழுந்தது சம்மட்டி அடி
ஆப்பின் நுனி மரத்தைப் பிளந்தது
சம்மட்டியையும் ஆப்பையும் தூர வைத்துவிட்டு
கோடரியை எடுத்துப் பிளந்தேன் மரத்தை
கோடரி: சம்மட்டியும் ஆப்பும் இணைந்த
ஒரு புதிய கருவி
சில கணங்கள்
கோடரியையும் தூர வைத்துவிட்டு
பார்த்து நின்றேன் அம்மரத்தை
என்னுள்ளே அம்மரம் சப்தமின்றிப் பிளந்து விழுந்தது

ஒரு காதல் கவிதை

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்;
ஒரு காபி சாப்பிடலாம், வா

அடையாளங்கள்

முகம் காணத்
தோளைத் தொடும் ஒரு மச்சம்
முறுவலிக்கும் இதழருகே
நெருங்க முடியாது உறைந்துவிட்ட
ஒரு மச்சம்
சிரிக்கும்போது
கன்னத்தில் தோன்றும் ஒரு ‘Black hole’

Thursday, August 8, 2013

தேரோட்டம்

உண்மையிலேயே மகாகொடூரமான நாள்தான் இது
வீதியெல்லாம் அலைந்த
இவளின் கைக்குழந்தைக்குக் கிட்டாத
கவளம் சோறாய்க்
கொல்லும் வெயில்; அதனைத்
தீர்க்கிறேன் பேச்சாய், முழக்கமாய்
ஐஸ் விற்கிற மணி ஒலி
பலூன்களுக்காய் முரண்டும் குழந்தைகள்
சாமி பார்க்க எக்கும் விழிகள்
வாணமாய் உயர்ந்து (நட்சத்ரப்) பூ விரிக்கும் விண்ணில்
என் வாழ்வோ
சூறைவிட்ட நோட்டிஸ்களாய்
வெறுமைமீது
மோதிச் சிதறி
கீழே விழுந்து
வியர்வையாய் சதையாய்
மயக்கும் முலைகளாய்
கூந்தலிலிருந்து உதிரும் மலர்களாய்
கால்களே கால்களை மிதித்துத் துன்புறும் கால்களாய்
அலைமோதி
நெரிபட்ட குழந்தையொன்றில் அழத் தொடங்கும்;
சறுக்கு, தடி, சம்மட்டிகளுடன் உழைப்பாளி வர்க்கமொன்றாய்த்
தேரை உருட்டும்;
நேர்ந்துகொண்ட கடன் நெஞ்சோடு
வடம் பிடித்து இழுக்க;
சற்றே நெகிழ்ந்து கொடுக்கும் மனதாய்
அசைந்து கொண்டு
நடக்கத் தொடங்கும்;
துயர்க் கடல் வீதியாய்
கருப்பு அலைவீசுகிற தலைகளுக்கு உயரே
தேர் தேர் தேர் என்று
அண்ணாந்த முகங்களுடன்
நெருக்கியடித்துக் கொள்ளும்
கூட்டம்

Wednesday, August 7, 2013

எனது கிராமம்

பேருந்துகளாய் முழக்கும் பட்டணத்து வீட்டுக்கு
கால் நடையாய் லோல்படுகிறது கிராமம்,
தன் பிள்ளை முகம் எப்போதும்
வாடிவிடக் கூடாரே என்று;
”கட்டிக் கொடுத்த பிறகும்
எங் கஷ்டம் தீரலியே ஐயா” என்று

தினந்தோறும் சீதனமாய் புல்லுக்கட்டுத் தலைச் சுமைகள்,
அவள் ’அண்ணன்மார்’ இழுத்துவரும்
வைக்கோல் வண்டிகள் காய்கறிகள் பிறவும்

வீட்டுக்கு
வெளியில்
நடைபாதைகளில் நிறுத்திவைத்துப்
பேரம் பேசும் அவமானங்கள்;
”எல்லாம் பொறுத்துத்தானே ஆவணும்
பொண்ணைப் பெத்தவ!”

மடிகரந்து கன்றை விளிக்கும் கொட்டில் பசுக்களுக்கு
எப்போதும் தாய்வீட்டு நினைவுதான்;
புல்மேயப் பரந்த வெளிகள்
விரிந்த விரிந்த வானப் பரப்பில்
எதை மேயும் வெண்மேகங்கள்?
சொல்லும் சுகம் மேவும் காற்று
நினைவு அறுந்து
தூரே………….
சூலுற்ற மௌனத்தின் ஒரு விளைவாய்
பட்டணத்து வருகையாய்
ஊர்ந்து வரும் பஸ்ஸைப் பார்த்தபடி
உயிர்க்கும் வாழ்க்கை

Tuesday, August 6, 2013

கைதவறியே தொலைகிற கைக்குட்டைகள்

உலகியல் அவசரமும் ஒரு கனல்தர
நீ நிறுத்தம் இல்லாத இடத்தில்
பஸ்ஸை நிறுத்தி பஸ்ஸில் ஏறியதை
பிடித்துக் கொள்ளாது விட்டுவிட்டாயே-
அதுதான்!
நீ கைதவறவிட்ட கைக்குட்டையை
எடுத்துக் கொடுக்கிற உறவில்தான்
நான் இதை எழுதுகிறேன்

பஸ்ஸில் ஏறிக்கொண்டதும்
உன்னைத் தொற்றிக்கொண்ட சமாதானம்,
சக பயணிகள் மீது பொழிய
உன்னில் முகிழ்க்கும் தோழமை, பயமின்மை…

ஓட்டுநரும் நடத்துநரும் ஏற்றுக்கொண்ட
உன் பயணத்தின் உத்தரவாதத்தின் மீது
கவலைகள் துறந்து பின்னோட
பஸ் ஜன்னல்கள் தரும் அற்புதங்கள் காண
குழந்தையாகும் உன் மனசு…

உனக்கு அந்த பஸ்ஸை விட்டும்
இறங்க மனவு வராது போனதை
மறந்தே போய்விட்டாய் இல்லையா?


விருந்தினரை வாங்கிக்கொள்ள முடியாத
வீட்டுக் குறுகலில் புழுங்கும் நண்பனைக் காண
விடியட்டும் என்று
கடைசிவேளை உணவை
உணவகத்தில் முடித்துக்கொண்டு
விடுதி அறையில் தங்கியபோது
உணவகமும் விடுதியறையும் தந்த
நிம்மதி வெளிச்சத்தில்
அந்த இரவு
எதையுமே படிக்காமலா தூங்கிப்போனாய்?

சரி
இங்கே, இந்நகரத்தில்தான் இருக்கிற
நீ சேர வேண்டித் தேடுகிற இடத்துக்கு
எதிர்ப்படும் முகமெல்லாம் ’தான்’ ஆக
வழி கேட்டு தடக்கையில்
பரிவுடனே வழி சொல்லி அனுப்புகிறவன் முன்பு
குழப்பத்தில் மனசிலாகாது போயினும்
வழியெல்லாம் கேட்டுக்கேட்டே
வந்து சேர்ந்துவிடவில்லையா நீ?

Monday, August 5, 2013

அதர பானம்

எச்சிலென விழுந்தபின்
நக்குவதல்ல
முத்தம்

சொல்லூறும் வாய்
ஒரு கிணறு
கேட்கும் காது
வாய்விரித்த ஒரு வெற்றுவாளி
கிணற்றின் நீர்
வாளியின் வெற்றுவெளியைத் தீண்ட
வாளியின் வெறுமை
கிணற்றின் ஊற்றுநீரைத் தீண்ட
கேட்டல் – ஒரு பரிவர்த்தனை

கேட்டல்
குழாய் நீர் ஒழுக்கல்ல;
ஆனதனால்
நீர் எடுப்பதற்கு
கயிறும் வாளியும் மட்டும் போதாது
தசை நார் வலு வேண்டும்

Sunday, August 4, 2013

உறவுகள்

புரிந்தவை சொந்தங்கள்
புரியாதவை அந்நியங்கள்
இரண்டுக்கும் நாயகனான
அனுபவமோ
பகைகளற்ற ஏகாங்கி

நடத்தல்

எங்கிருந்து தொடங்குவதா?
நிற்குமிடம் அறி
அங்கிருந்தன்றி வேறெங்கிருந்து முடியும் தொடங்க?

காலடியில் உறைந்துபோன நதி
கக்கத்தில் செருகியிருந்த நடை
நடக்கத் தொலையாது விரிந்திருந்த பூமி
எட்டாது போய் நின்ற வானம்

நடையை எடுத்துக் கால்களில் அணிந்துகொண்டேன்

பாதம் ஊன்றிய புள்ளிக்கு
பாய்ந்து வந்தது
பூமியின் எல்லாச் சாரமும்

சுட்டுப் பொசுக்க
கால் தரிக்க மாட்டாது தவிக்கிறேன்
இட்ட அடி மண்தொட எடுத்த அடி விண்தொடும்
நிறுத்தலற்றுப் பாய்ந்தோடும் வாழ்வில்
நட
நடத்தலே வாழ்வு, விதி, போர்!
ஆனால்
நடையின் திவ்யம் கண்டு
என் ஆறு உருகி ஓடத் தொடங்கவும்
நடையைக் கழற்றிக்
கக்கத்தில் இடுக்கிக் கொண்டனவே கால்கள்

Saturday, August 3, 2013

சிலுவைப் பிரயாணம்

பாதத்திலொரு முள் தைத்து
முள் இல்லாப் பாதையெல்லாம்
முள்ளாய்க் குத்தும்
வழியை வலி தடுக்கும்
பெருமூச்சு விட்டு நிற்க – விடாது
உன் அகங்கரிக்கப்பட்ட முற்பகல்களெல்லாம்
உன்னைச் சாட்டையிட்டு நடத்தும்
எதிர்ப்படும் முகமெல்லாம்
வலிக்கு ஒத்தடமிடும் ஆனாலும்
நின்றுவிட முடியாது


மின்னற் பொழுதே தூரம் (1981) கவிதைத் தொகுப்பிலிருந்து.

தையல்

நேற்று இன்று நாளை எனக்
கிழிந்து போயிற்று என்
சட்டைத்துணி
இன்று என்பது
நேற்றும் நாளையும்
தையல்கோர்த்துச் சூழ்ந்த ஒரு தீவு
இடைவெளி சூன்யம்
ஜீவன் ஆடிக் களிக்கும் மேடை
நேற்றையும் நாளையையும்
துறக்கமுடியாத என் ஜீவிதத்தில்
நானோ ஆடைகொண்டு
அம்மணம் மூடி
ஆடும் அற்பன்

இங்கே கவனி என்று அழைத்துச் சொன்னது
அம்மாவின் கைத்தையல் – அது முதல்
நான் என் ஊசித் துவாரத்தில்
நூல் மாட்டிக்கொண்டேன்
நேற்றையும் நாளையையும் இணைக்கும் நான்
நூல் நுழைந்த ஒரு
தையலூசி

Friday, August 2, 2013

துடிப்பு

வியந்து வியந்து கண்டதெல்லாம்
ஒரே வெளியாய்
விரிந்து நின்றது கண்ணெதிரே
ஒரு மைதானத்தில்

சலிப்புற்று, காதல் குறும்பாய்
ஜனித்தன விளையாடல்கள்

விளையாட்டே வினையாயிற்று
மனவெழுச்சி மிருகமாக
விதிமுறைகள் குதிரையேற
விளையாட்டே வினையாயிற்று

நான் நீ என்று கட்சிகள் ஒரே வெளியில்
எத்தனை பிளவ, தாக்குதல், தட்டல்களையும்
அயராமல் ஏற்று அங்கிங்கெங்குமலையும்
முன்னர் வியந்து கண்ட பரம்பொருள்
தன் முழுமை உடையாத பந்து

அதில் அவரவர் வாழ்வுக்காய்
நாம் தெறிக்கும் தாக்குதல்கள்தான்
நம் ஒவ்வோர் இதயத்திலும்
நான் நான் என்று துடிக்குது

செடி

அறியாது
ஒரு சிறு செடியை மண்ணிலிருந்து பிடுங்கிவிட்டேன்
திசைகள் அதிரும் தனது பெருங்குரலால்
அது மரமாகிவிட்டது என் கையில்
அந்தரவெளியில் துடிதுடித்து
ஆதரவுக்குத் துழாவின அதன் வேர்கள்
பாய்ந்து போய் அதனை அணைத்துக் கொண்டது பூமி
கொலைக் கரத்தின் பிடிதகர்த்து
மேல்நோக்கிப் பாய்ந்தது புது ரத்தம்
கழுத்தில்பட்ட தழும்புடனே
பாடின தலைகள்

Thursday, August 1, 2013

கிழியாத வானிற்கப்பால்

நிற்கிறது மழைக்கூட்டம்
கிழித்தெரியும் கரங்களும் நகங்களும்
மலைகளும் மரங்களும்
நின்றுபோயின கிட்டாத தூரத்தில் அழுதபடி

அழுத்தம் தாளாது பறவைகளும் மடங்கித் திரும்பின
தாகத்தால் வெடித்த பூமிக்கு
கண்ணீர்த்துளிகள் போதவில்லை
தானாக வானைக் கிழித்துப் பெய்யும் வழக்கமுமில்லை
மழைக் கூட்டத்திற்கு
மழை வேண்டுமெனில் இருப்பது ஒரே வழிதான்
பூமியின் ஆகர்ஷ்ணப் பெண்மைக்குள் சிக்காது
உன்னை நீயே பூட்டி அம்பாகப் பாய்ந்து கிழி வானை
ஒரு பொட்டு கிழித்துவிடு போதும்

பாதை

உயிரின் தீண்டல்பட்டு
மரணத்தை உதறி உதறி ஓடிற்று பாதை
பாதங்களின் மந்தத்தனத்தை எள்ளிற்று
வானக வீச்சில் உயிர்கொண்ட
கணநேரப் புழுதி
முள்பயம் மட்டுமே அறிந்த பாதங்கள்
சின்னச் சின்ன பள்ளங்களை மறந்தன
பெருக்கெடுத்தோடும் வாகனங்களால்
சாலையின் லட்சணம் புலனாயிற்று
மேட்டை இடித்தன
பள்ளத்துள் வீழ்ந்த சக்கரங்கள்
சாலையெங்கும் அகலிகைக் கற்கள்
போவார் வருவார் கால்களை இடற
மனிதன் அலறுகிறான் ராமனைத் தேடி – ராமன்
கல்லுக்குள் அகலிகையாய்க் கனன்று கொண்டிருக்கிறான்
களைத்து தன்மேல் அமரப்போனவனை
இளைப்பாற விடாது எழுந்து நடந்தது அந்தக் கல்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP