என்னுடைய தட்டு
நான் சாப்பிட்ட தட்டை
நானேதான் கழுவணும்
ஏனோதானோவென்று
ஒப்பேற்றிவைக்க முடியாது
அப்புறம் நான்தானே அதிலே
மறுபடியும் சாப்பிடப் போவது?
எவர்சில்வர் தட்டு சார்
வட்டத் தட்டு
கைக்கு அகப்படாமல்
கண்ணாடி ஒளிந்துகொள்ளும் நாளில்
முகம் பார்த்துத் தலைசீவ உதவும்.
வெளிச்சத்தைக் கண்டாக்
கொண்டாட்டம் இதுக்கு.
காதலிக்கும் கைகள்
கைவிட்டால்
நெஞ்சு பொறுக்காது கூட்டலிடும்...
எப்போதும்
உதட்டில் ஒரு புன்னகை
உள்ளமெல்லாம் புன்னகையாய்
உடலெல்லாம் புன்னகை.
மடியில் தூங்கிவிட்ட குழந்தையை-
சிணுங்காமல் எடுத்துத்
தொட்டிலில் கிடத்துவது போல்
மெதுவாய் வைப்பேன் தரையில்.
யோசிச்சுப் பார்த்தால்தான்
எனக்கே தெரியுது
இந்தத் தட்டின்மீது எனக்கு
எவ்வளவு பிரியம் என்று!
தொந்தரவு தரும் பிள்ளையை
பதனமாய்ப் பேசி
சேக்காளிகள் விளையாடும்
இடம் காட்டி
தந்திரமாய் அனுப்பி வைப்பதுபோல்
பசையாய்ப் படிந்து நிற்கும்
சாப்பிட்ட எச்சத்தை
நீருக்குள் உள்ளும்
புறமும் தீண்டியபடி
சுழற்றிச் சுழற்றிச் சுழற்றிக்
காலங்கள் உருண்டோடக்
கண்ணுங் கருத்துமாய் கழுவிக்கொண்டிருக்கையில்
மாறி மாறி விரல்களை நெருடிய பிசுக்கை
உற்றுக் கவனித்தேன்:
எவர்சில்வர் தட்டின் நெற்றியில்
பொறித்திருந்தது என் பெயர்தான்