கிணற்றாங்கரை
சங்கிலியிட்ட வாளி
தாலியாய்க் கழுத்தில் தொங்க
கிடைத்த ஓய்வில்
வானம் பார்த்து நிற்கும் துலாக் கம்பு.
சிமெண்டுத் தளமிட்ட
கிணற்றுச் சுற்றெல்லாம்
காயும் நெஞ்சாய்
உலர்ந்துகொண்டிருக்கும்.
உதிர்ந்த இலைகளைக் கட்டி
அழுதுகொண்டிருக்கும் ஓர் ஒரம் சகதியாய்.
கிணற்று நீரின் நிச்சலன மவுனத்தில்
அவனை உற்றுப் பார்க்கும்
அவன் முகம்.
யாருக்குமே தெரியாமல்
காலம் நழுவும்.
இடையே ஒரு வேதனை
குழிழியாய்த் தோன்றி மறைய
ஏன்? என்று கேள்விக்குறியாய்
புருவம் நெரிக்கும்.
சொல்கிறேன் என
ஒரு பழுத்த இலை நீர்மேல் விழுந்து
சலனமற்ற நீர் அதிர்ந்து
வலிக்கும் நெஞ்சு