விலகிச் செல்லும் நண்பன்
யாருனக்குச் சொன்னதோ
என்னைப்பற்றி அவ்வாறெல்லாம்!
நன்றாய்த்தானே பழகிக்கொண்டிருந்தாய்
இதுவரை?
அடைய முடியாததற்கான
மன நெகிழ்வைப் போல் உன்னிதழில்
கசிந்த ஒரு புன்னகை;
சமயங்களில் ஏளனம்.
சோகம் ஒரு கோழிக் கூடையாய்
என் மீது கவுத்தியிருக்க
எனது விடுதலையற்ற
இப்பொழுதையும் நீ
ஏகாந்தம் என்றெண்ணியவன் போல்
விலகிச் செல்வதேன்?
நானே போராடி
என் விடுதலையைப்
பெற்றுக்கொள்ளட்டும் என்றா?
நான் உனக்காகத்தான்
காத்திருக்கிறேன் இவ்வாறென்க
என்ன ஏது என்று ஏன்
பதறிப் போகிறாய்
சாமர்த்தியமான பேச்சென்று
சிரித்துச் சுவைத்து
விட்டு விடுகிறாய், ஏன்?
ஒரு நண்பனுக்காக
நான் காத்திருக்கலாம்
இங்கு என்று
நீ நினைக்கக்கூட முடியாமல்
போனதென்ன?