அவரைப் பந்தல்
சாந்துச் சட்டிகள்
தலையில் தாங்கி
ஓட்டைக் குடிசை வாழ்
சித்தாளுப் பெண்கள்
கொம்பில் ஏறும்
அவரைக் கொடியாய்
மூங்கில் சாரம்
வனைந்த படிகளில்
ஏறினர் ஏறினர்,
’இன்று முதல் ஸ்டிரைக்’
என்றனர்
இறங்க மறுத்தனர்
சாவுக்கென்ன
யாருக்கும் பணியமாட்டோம் எனச்
சூளுரைத்தனர்
இங்கிருந்தபடியே
சமைத்து உண்டு பெற்று
வைராக்யத்தோடே
பழைய வாழ்வை நடத்தினர்
வீட்டுக்காரனோ தந்திரசாலி
பிடுங்கின வரைக்கும் லாபமென்று
காய்களை வளைத்துப்
பறித்துச் சாப்பிட்டான்
மீண்டும் புரட்சி
மரத்துப் போச்சி!