வாழ்வும் கலையும் (எனது கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு)
ஈயை ஈயை நோகாதே
புண்களைக் கவனி – உன்
புண்களைக் கவனி
வியர்வை நாறும் என் மேனியை
விடாயைத் தணிக்குமிக் குளிர்நீரை
இட்லிப் பார்சலை ஈரத் தரையை
பேதா பேதமற்று என் அசுத்தங்களை
எல்லாவற்றையுமே தான்
அமர்ந்து அமர்ந்து காட்டி
புண புண் என்றே எகத்தாளம் பேச
பொறுக்காத கைகள் பொங்கியெழுந்து
உடனே உடனே விரட்டும்
என் அதிருப்திக் கனலிலே அமர முடியாமல்
எழுந்த அதிர்ச்சியில்
எல்லாம் மறந்து – உடன்
புத்தம் புதுசாய் ஒரு கலை பிறக்கும்
(மேற்படி புண் பற்றி அன்றி வேறு?)
புண்ணை விட்டெழுந்த வெளியில் நின்று
நாற் பரிமாணங்களிலும் திரிந்து திரிந்து
கோலம் போடும்
என் நாற்காலி மரச்சட்டத்தில் அமர்ந்து
சற்று தியானிக்கும்
(முன்னதிலும்
புத்தம் புதுசாய் ஒரு கோலம் போட)
ஆகவே சும்மா
ஈயை ஈயை நோகாதே
உன் புண்களைத்தான்
கவனி! ஆற்று!