கடல் நடுவே
இருந்ததது முன்பு
நம் பெருமை
நாம் ஒரே கப்பலில்
வாழ்கிறோம் என்பதிலே
கப்பலின் உச்சிக்
கொடி அசையும்
எப்போதும்
ஒரு துடிப்புடன் தவிப்புடன்
திணறலுடனும்;
எல்லாவற்றுக்கும் மேலாய்த் தெரிகிற
ஒரு வெற்றி எக்களிப்புடன்
நம் அத்தனை பேர் ஆவியும்
அதில் துடிக்க
கப்பலை எப்போதும்
இடைவிடாமல் கவனித்துப்
பந்தோபஸ்தாய் வைத்திருந்தோம்
ஜன்னல் கண்ணாடிகளைத்
துடைத்துத் துடைத்துச்
சுத்தமாய் வைத்திருந்தோம்
காதலே மணக்க
நம்முள் தோன்றிய
’மலங்களை’
அதன் தோற்றமும் மணமுமே
சொல்லிவிட – உடனுக்குடனே
களைந்தெறிந்தோம்; கடல் நடுவே
நாமே உயிர்த்தோம் ஒரு பேரழகாய்
கப்பல்
துண்டு துண்டாகத் தெறித்துச்
சிதறுகையில்
உயிருக்குப் பயந்து
வெறிச்சிட்ட ஒரு கணத்தில்தான்
புரிந்தது;
எல்லாம் பொய்!
நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டுவந்த
பொய்யர்கள் நாம் என்று!
நாம் களைந்தெறியாது
இக்கடலில் பதுக்கியதெல்லாம்
வலிய வலிய மிருகங்களாய்
நாம் கவனிக்காது
சுரணையற்றுக் கொண்டுவந்த
உயிர்த்துளிகளெல்லாம்
பிரம்மாண்டமான பாறையொன்றாய்
முற்றித் திரண்டு
நம் மொத்த அஜாக்கிரதையினால்
நாம் உடைந்து சிதறி...
இப்போது புரிகிறது
எல்லாமே ’கனா’வென்று!
போராடப் பயந்து
சாவே சுகமென்று தேர்ந்து
அலைகளிலே அசையும் பிணங்கள்.
சதா சாவை எதிர்த்துத்
தத்தளிக்கும் நான்
கொஞ்சம் ஆசுவாசிக்க
அகப்பட்டது
ஒரு துண்டு மரம்-
ஆ! நம் உடைந்த கப்பல்...
எல்லாம் கனவல்ல,
சத்தியமே என்னும் பிரமாணம்!