இலட்சியவாதிகளுக்கு
ஒரு மானஸ சட்டத்தில்
கைகளை விரித்து
தன்னைத் தானே அறைந்துகொண்ட
சிலுவைமரமாக்கிக் கொண்டு
சிறுவன் ஒருவன்
பாறைமேல் நிற்கிறான்.
அவன் காலடி உயிர்ப்பில்
உலகம் இரண்டாய்ப் பிளந்து
அவனுக்கு இருபுறமும் ஆகிறது
அவனை எகிறி வீழ்த்த
உறுமுகின்றன
பிளவுபட்ட பாறை முரடுகள்
அவனோ
சாவைத் தின்று
ஜனித்த பிறப்பின்
அண்டத்தை உலுக்குகிற பலம் திரட்டி
-பின்னர் அதெல்லாம் வியர்த்தமாவதறியாமல் –
அறிந்து
தன் மூர்க்கம் விட்டுக் கசிந்துபோன
பாறைப் பிளவின் ஈரத்தில்
தன் மூர்க்க குணம் விடாது
வேரூன்றி வளர்ந்து
சாதுவான பாறையைப்
பிளந்து தீர்த்து
விருட்சமாகிறான்.
ஓ…விருட்ச! அங்கே
வெகு ஆழத்தில் சென்று நீ கண்டதென்ன?
அதைச் சொல்!
இன்று
உன் வேர் நூல்களால்
நீயே ஏற்படுத்திய பாறைப் பிளவுகளைத்
தைத்து இணைத்துக்கொண்டு
கந்தல் கோலத்துடன்
கல்பகோடி வாய்களுடன்
என்னைத் தடுத்து நிறுத்தியபடி
நீ சொல்வதுதான் என்ன?