கடல் தூங்குகிறது
மூச்சலைகள் மார்பில் நெளிய
மல்லாந்து படுத்தபடி
கடல் தூங்குகிறது...
கரையோரப் படகுகளாய்
ஜனங்களும் அசைந்து கொள்ளப்
புரண்டு புரண்டு படுத்துக்
கடல் தூங்குகிறது...
கரை கொணர்ந்து இரைத்த
மீன் சவங்களைச் சுற்றி
வெற்றிலைக் குதப்பலாய்
வாக்குவாதங்களைத் துப்பிவிட்டு
கைலிகளைத் திரைத்துக் கட்டிக்கொண்டு
ஓடி வந்து சூழ்ந்துகொண்டனர்,
ஆகாயம் நோக்கித் திறந்த
ஒரு கூண்டு போல
புன்முறுவல் காட்டி
குன்றாத உயிர்ப்போடு
கடல் கம்பீரமாய்த்தான் தூங்குகிறது...
சாவை மெய்க்கக் குனிந்த
ஈக்களும் காக்கைகளும் விரட்டிக்
காத்திருக்கும் பலகாரக் கடைக்காரிகள்
மணலில் புதையத் தள்ளி வந்த
டீக்கடை கண்ணாடி கிளாசுகள்
கொடுக்கல் வாங்கல் சப்தங்கள்
ஏலம் விடுபவனின் ஒற்றைக் குரல்
லோடு எடுத்துப் போகும் சைக்கிள்காரனை
துரிசப்படுத்தும் கங்காணி வேகங்கள்...
எல்லா ஒலிகளும்
சோ சோ என முரலும்
கடலின் குறட்டைக்கு
வெகு எச்சரிக்கையாய்க்
கீழாகவே ஒலிக்கிறது
குறுகுறுக்கும் நெஞ்சங்கள்
கடலின்
குறட்டை ஒலியிலேயே
பயந்து திருந்த
கடல் இங்கே இன்று வரை
நிச்சிந்தையாய்த்
தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது...