பாரவண்டி
அரைடிராயர் பையன் ஒருவன்,
கைவண்டி நிறைய விறகு
இழுத்துச் செல்கிறான்
குண்டும் குழியுமான ரோட்டில்
அதுபோகும் ’நறநறக்’கிடையே
வண்டியிலிருந்து நழுவி விழலாம்
விறகுத் துண்டொன்று என்று
அவ்வொலியே கவனமாக
நெஞ்சிலும் கனக்கக் கனக்க...
யாரோ கண்டு
முன்னிற்கும் வானமாய் ஓடிப்
பின்வந்து உதவி கொடுக்க
லகுவாகப் போச்சு வண்டி – தம்பி
வியந்து போய்த் திரும்பிப் பார்த்தான்:
வானந்தான், யாருமில்லை.
மீண்டும் அவன் இழுத்துச் சென்றான்
நழுவுவிறகுக் கவலையெல்லாம் விட்டொழித்து