பாலத்தின் கீழ் ஓடும் நதி
ஆடிஆடி வரும்
அலைக் குழந்தைகளுடன்
காலமாம் நதி போகும்
குறுக்கே
வாழ்வென்னும்
ஓர் அகண்ட பாலம்
விடுவிடெனப் போகும் அம்மை
விரலிலிருந்து நழுவிக்
குனிந்து
பாலத்தின் மர இடுக்கினூடே
என்ன ஏது என்று
நோக்கும்
ஆர்வக் குழந்தையை
சிடுசிடுத்து இழுத்துப் போவாள்
வான் பார்த்து ஆடும் அலைகள்
பாலத்து நிழலில்
சற்றுப் பயமும் கலந்த
புதுமையில் ஆனந்தித்தபடி
அம்மா அம்மா மேலே என்ன?
என்ன;
அலட்சியம்,
அசுவாரஸ்யம்,
ராங்கித்தனம்-
எல்லாம் புடை சூழ
இழுத்துப் போவாள்
நதியம்மாவும்.
அவளுக்கு இவள் மீதும்
இவளுக்கு அவள் மீதும்
ஆர்வமே இல்லையெனினும்
ஒரே இடத்தில்
அவளுக்கும் வழிவிட்டு
இவளுக்கும் ஒரு வழி அமைந்த
ஆச்சர்யத்தைக்
குழந்தைகள் காணத் துடிப்பார்