இருப்பும் இன்மையும்
வீதி பார்த்த
கதவை அடைத்து விட்டுத்தான்
சாப்பிட உட்காருகிறேன்
வெளிறி மரித்த பிணக்குவியலென
சோற்றுப் பருக்கைகள்
நான் இன்னும்
வரிக்காத எனது மனைவியும்
பெறாத எனது குழந்தைகளும்
பசித்து
மரித்துப் போன என் சகாக்களோடு
உடற்பிச்சை கேட்டு
கதவுதட்ட
தட்டத் தட்டத் திறவாமல்
விழுங்கி வைக்கிறேன்
தட்டு கழுவிய எச்சித் தண்ணீரை
தென்னை மரம் ஏற்றுக் கிளுகிளுக்கும்
எஞ்சிய பருக்கைகள் புன்னகைக்கும் தூரடியில்
ஒரு பாடலெனப் பறந்துவந்த சிட்டுக் குருவி
அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக்
கொத்தி மறையும்