வேளைகள்
வெயில் பாவுபோடும்
மார்கழியில்
கூதல் காற்றே ஊடாய்ப்
பாய்ந்து பாய்ந்து
நாள்தறி நடக்கும்
இரவுச் சேலையில்
அபாரம்! அபாரம்!
எத்தனை சித்ர வேலைப்பாடு!
விற்பதற்கு முன்
நிலவுப்பெண் முகமெல்லாம்
பொங்கப் பொங்க
உடுத்துப் பார்க்கிறாள்
நேரமிஃதில்
நெய்தவரைக் காணோம்
வாங்குவாரையும் காணோம்
கவிதைத் துவாரம் வழி நோக்கும்
கள்ளப் பயலே!
கதவை அடைத்துக்கொண்டு
அவள்
தன்னழகு பார்க்கும்
தனிமைப் பொழுது இது!
உன் சந்தையிலே காண
முடியாதது