குளியலறைக்குள்
உள் நுழைந்து
கதவுகளை மூடிக்கொண்டு
குளிக்கும்போது
சுகத்தில் சொக்கும் – திணறும் –
என் உயிர்.
நிலாப் பூத்த அந்திகளில்
நம் கிராமத்துக் கிணற்றில்
முங்கி முங்கித் திளைக்கும் தலைகள்
அல்லிப் பூக்களாய் சிரிக்குமே
தம் தோல்வியை ஒப்புக்கொண்டு!
ஷவரை நிறுத்தியதும்
ஒரு பூரண மௌனம் – சாந்தி
சாந்தியற்ற உலகம்
கதவைத் தட்டிக்
கலைக்கும் அழைக்கும்
கெஞ்சும்
உறுமும்
சேற்றை வீசும்
எல்லாவற்றுக்குப் பிறகும்
சிரிக்கும்
உலகம் உலகம்!