வாளித் தண்ணீர் முன்...
வெயில் பொசுக்கின வெளியெல்லாம்
புல் மலர்ந்து விழித்திருந்த
ஒரு மழைக்காலத்தின்
பச்சை வெளிகளில்
தன் தோட்டத்துக்காக யாத்திரை செய்த
ஆதி நாட்களைப்
பட்டை உரித்து உரித்துக்
காத்துவரும் கொய்யா
ஆறாத
அம்மாவின் விடுகதையில்
பூவில்லாது சடை பின்னாத
ராஜகுமாரியாம் முருங்கை
பழுத்து உதிர்ந்து
உலர்ந்த கொப்பும்
கொழுவித் தொங்க
நிற்கும் நெடுமரப் பப்பாளி
’கிராப்பு வெட்டிக்கொண்ட’
உல்லாசத்தில்
ஒளிவீசும் கருவேப்பிலை
நீல வானம்
வான நீலம்
எல்லாம் வந்தாச்சு
அவன் குளிக்க
வாளித் தண்ணியில்;
வந்து கிளுகிளுக்குது
காலைக் காற்றில்;
அவன்
நாற்றங்காலின் பன்னீர்க் கன்றும்
அவன் முகம் பார்க்குது பளபளன்னு
எனினும் ஏன் தாமதிக்கிறான்?
எதை எதிர்நோக்கி நிற்கிறான்
அம்மணக் கோலத்தில்
அண்ணாந்த விழிகளோடு?
அணில் குருவி ஆடுகிற
அந்த லோக
ஆசிக்கா?
அகால வெளி கனிந்து
சொட்டின வண்ணமாய்
வாளி நீரில் வந்து
விழும் முருங்கைப் பூவுக்கா?
ஏன் அப்படிப் பார்க்கிறான் தண்ணீரை?
நினைவுகள் படிந்து அழுகும் நீரைத்
தன் பார்வையாலே காய்ச்சித்
தீர்த்தமாக்கவா...?