போர்வை
படுக்கச் சென்றேன்
என்னைப் பார்த்ததும்
எனக்கு நன்றாய் இடம் போட்டு
ஓரமாய் நாணிக் கோணி ஒரு தினுசாய்ப்
புன்னகை ஒன்றையும் காட்டியபடி
என் பத்தினி-
புடவை தேர்ந்தெடுக்கிற
பெண்களுக்கிணையான மோகத்துடன்
நான் வாங்கி வைத்திருக்கும்
எனது ஷோலாப்பூர் போர்வை-
கிடக்கிறாள் ஆர்வமாய்.
படுத்துக்கொண்டேன் பக்கத்தில்.
அவள் மொழி கேட்கவே
ஆவலாயிருந்தேன்
அவளோ பிடிவாதமாய்ப்
பேசாதிருந்தாள்
ம்ஹுஹும்
வாடை விறைக்காப் பொழுதினிலே
வரைவதில்லை நான் அவளை,
பக்கம் என்னை உரசிக்கொண்டு
பார்க்கிறாள் பாவமாய்...
உடனே தான்
இரக்கம் கொண்டு நான் அவளை
ஒரு கையால்
மெல்லத் தழுவிக்கொண்டேன்
சொற்கடந்த
காதல் தொட்ட உறக்கத்தில்
கலந்து மறைந்தோம் அவ்விரவில்