இரட்டைக் குடம் ஏந்தி வருகிறவள்
இது,
தாகம் எரிகிற
அத்துவான வெயில்
கிளைக்க மறந்து
நெட்டென நின்றுவிட்ட
பனைகள் வழியே
என் தாக விழிகளுக்கு
’அவள்’
தண்ணீர் சுமந்து வருகிற கோலம்
ஒரு குடம் தலையில்
பிடித்தரமில்லாமல் நிராதரவாக;
ஆனால் அதுதான் கவனமாக.
ஒரு குடம்
’ஆசபாசமாய்’ ஒசிந்த இடையில்
வளைக் கரத்தின் அரவணைப்பில்
ரொம்பச் செல்லமாக;
ஆனால் அலட்சியமாக.
என்றாலும்
சமன் காத்து இயங்குகிற
நடை;
அதற்கு
இசைவாய் அசையும்
மற்றுள்ள கை – ஆ! அதுதான்
எத்தனை அனுசரணையோடும் விழிப்போடும்!