வர்க்கபோதம்
திறந்தேன்
ஓங்கி உயர்ந்த விதானம் நோக்கி
அடுக்கி அடுக்கியிருந்த மூட்டைகள்
கை கால் தலையற்ற முண்டங்களாய்
என்னைச் சிதைத்தன
நெஞ்சைப் பிராண்டும் கரப்பான் பூச்சிகள்
நுழைந்ததும் வௌவால்கள்
முகத்திலறையும் கோவில் பாழாக
பிடரி பிடித்துத் தள்ளியது வெளியே
அங்கே
பிணங் கொத்தும் கழுகு காக்கைகள்
தான்யச் சிந்தல் வியர்வைத் துளிகளைக்
கொத்த வரும் ஈ குருவிகளாய்
காணச் சகிக்காமல்
சிமிட்டியைப் போத்துக்கொண்டு
நகரும் குருதிச் சாக்கடை
கடைத்திண்ணை நடைபாதைகளில்
பாரவண்டிகள் மற்றும் அங்கங்கே
ஒதுக்கமெல்லாம் முழித்துக் கிடந்தன
வலுமிகுந்த கைகால்கள்
மேலெல்லாம் இரத்தம் வழிய
சிங்காரத் தலைகளெல்லாம்
சொகுசாய் மிதந்தன
கடைகளுக்குள்ளே கல்லாமுன்னே
இளித்துக்கொண்டும் சிமிட்டிக்கொண்டும்
கடைவாய்ப் பற்களில் இரத்தம் ஒழுக
பின்னொரு நாள்:
பெரிய பெரிய பூட்டுகள் கண்டு
ஜெயில் ஜெயிலென்றும்
பெரிய பெரிய கதவுகள் விதானம் கண்டு
கோயில் கோயிலென்றும் மனம் அலற
கோடவுண் கதவைத் திறந்தேன்
கண்டேன் அதனை