வெண்மணல் தேரி
பின்னால் கொஞ்சம் தள்ளி
கோடை மெல்லிய நதி.
மணலில்
ஊர்த் துணிமணிகளையெல்லாம்
உலர விரித்து
வண்ணான் வண்ணாத்திகள்
துவைத்துக் கொண்டிருப்பர்.
ஒரு வண்ணாத்தி – தன்
கைஜோலியை விட்டுவிட்டு
ஒரு பிரியப்பட்ட ஆணிடம்
பனை மறைவில்
பேசிக்கொண்டு நிற்பாள்.
மனம் வெளுக்கும்
வெண்மணல் தேரியைக்
கறுத்த கூண்டாக்கிய
பனங்காட்டுக்குள்
இருவர்;
ஒருவன் மற்றவனிடம்
விளக்கிக் கொண்டிருக்கிறான்,
மேலே
பனையோலைக் கீதம்
கிளிகளாய்ப் பறந்துகொண்டிருக்க...