ஈரமண் பூமியில் எழுதப்பட்டவை
எல்லோர்க்கும்
பொழிந்தது மழை எனினும்
பூரண இன்பம்
பொலிந்தது எதிலே?
நீளநீளமாய் நிலத்தைக் கிண்டிய
ஏர் உழுதலிலா?
தணுப்பு குலவித்
தணலுக்கு வேட்கும்
என் பாலை மணலில் நான்
திரும்பிப் பார்க்கையில்
தடம் நிறுத்தி
ஓர் அபிநயத்தில் என்னை நோக்கும்
என் பாதச் சுவடுகளிலா?
பறவைகள் இறங்கிவந்து
எட்டாத நட்சத்திரங்களை
எனக்குக் காட்ட
பூமியில் பொறித்ததிலா?
என் தனிமையின் பாடல்
இந்த இதமான தரையில்
நலுங்காமல் அமர நினைந்து
என் விரல் வழியாகவும் சற்று
ஒழுகிய கிறுக்கலிலா?
குதியாளம் பதித்த
சின்னஞ்சிறு பாதச் சுவட்டின்
நடுவில் ஊறும் நீர் பருக
பூமிச் சுற்றம்
தாகமாய் எழுந்து உட்குவியும்:
எழுந்த பாதத்திலே
மோதிச் சிதறும்
சிரிப்பென்னும் அச்சிரிப்பினிலா?
குதிங்கால் கட்டை விரல்களைக்
வட்டமானியாய்க் கொண்டு
அச்சிறார்களின் குதூகலம்
சிந்திய வட்டங்களிலா?
...எதிலே
எம் முத்திரையில்?