ஒற்றைப் பனை
சாசுவதத் திமிர்கொண்டு
அட்டகாசமாய்ச் சிரித்தது
ஒற்றைப் பனை
அறியாப் பருவத்தில் ஒரு நாள்
ஒரு புள்ளும் சப்திக்காத
ஒரு கிளையும் சலனிக்காத
வெட்ட வெளி வெம்பரப்பின்
பாழ் நடுவே
’நான் யாரு...? என எழுந்த
வினாவொன்றிற்கு
விடையொன்றாய்
ஒன்றே
வினாவும் விடையுமாய்
இன்று இப்பனை
எவ்வாறு தோன்றியது
இந்தப் பாழ் நிலத்தில்...?
சிந்தைச் சலசலப்பை ஒதுக்கிச்
சிரமலரில் அந்த
அமுதிறக்கப் பார்க்கையில்
வசமாய்க்
கொடுத்தது பாம்பு ஒன்று
உச்சியிருந்தமானிக்கே கீழே
பழுத்த பழம் போலிறங்கும்
சாவின் கருப்புத் தூணாய்
உடலை உதிர்த்தான்
கருப்பண்ணன்
என்றார் ஓர் அண்ணன்
என்னை நெருங்கி.
பனை-
சாசுவதத் திமிர்கொண்டு
அட்டகாசமாய்ச் சிரிக்கிறது!