கப்பல் கட்டுதல்
வாழ்வக் கடலில்
சாவே சுகமெனத் தேர்ந்த
பிணங்கள் நடுவே
தத்தளிக்கும் ஒருவன்...
கைகொள்ளும்
பிணங்களைச் சேர்த்துக்
கட்டுமரத் தெப்பமாக்கி
அவன், முன்பு ஆசுவாசிக்க; போராடக்
கிட்டிய
உடைந்த கப்பலின்
ஒரு துண்டு மரத்தால், சத்தியத்தால்
துடுப்புப் போட்டுப்
பிணங்களையெல்லாம்
கரைகொண்டு சேர்க்கிறான்
சேர்த்துக்கொண்டேயிருக்கிறான்
கரையில்-
தன் கனல் கொண்டு
பிணங்களையும் அணைத்து
உயிர்த்தெழ வைக்கிறான்...
மீண்டும்
இக்கரையில்
கடல் கடக்கும் கடனுக்கு
ஒரு கப்பல் கட்ட
ஊக்கமாய் வேலைகள் நடக்குது
எங்கும்