என் பிரியமான செம்மறியாடே!
உள்ளங்கால்களை நிமிண்டி
அழைக்கவில்லையா பாதை?
நட்சத்திரம்
உன் முகத்தருகே சிமிட்டிவிட்டு
தூர நின்று சிரிக்கிறது பார்!
உன் நெஞ்சிலாடக்
கழுத்தில் கட்டியிருக்கும் மணியின்
நாதம் சுவைக்க,
மவுனம் சுவைக்க,
நடக்கணும் நீ.
தெரிந்ததா?
அற்புதம் அற்புதம் என்று
நீ திகைத்துத் திகைத்துப்போய் நின்றாலும்
நின்றுவிட முடியாது;
நடந்தே யாகணும்
நடை நிறுத்தித்
திகைத்தே போனால்,
உன் நெஞ்சிலாடக்
கழுத்தில் கட்டியிருக்கும்
மணி ஒலிக்காது திகைத்தே போனால்,
அடியே!
அந்த அற்புதம் அற்புதமல்ல
சவம்!
புரிந்ததா?
எங்கே, நட பார்க்கலாம்!
மணியின்
நாதம் சுவைத்து
மௌனம் சுவைத்து
நாதம் சுவைக்கையிலேயே மௌனம் சுவைத்து...