இந்திய சென்சஸ் – 1991
தாழ்ப்பாளிட்ட கதவு முன்
அழைப்பு மணியை அழுத்து முன்னே
எகிறிக் குதிக்கும் நாய்க்குரைப்பு
அதிரப் பின்தொடரும்
யாரது என்ற அதட்டல்
நான் -
யாசகனல்ல;
ஆயுதம் காட்டி
உம் பொருளை அபகரித்துப்போக வரும்
கொள்ளைக்காரனுமல்ல;
நான் ஒரு கணக்கெடுப்பாளன்
அரசாங்க ஊழியன்
தயவுசெய்து கதவைத் திறவுங்கள்
கணக்கெடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?
எவ்வளவு மக்கள்
எப்படி வாழ்கிறார்கள்
என்று தெரிந்துகொள்வோம்
தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்
என்றுதான் கேட்கிறேன்
நான் வெறும் கணக்கெடுப்பாளன் மட்டுமே
என்றபடி கவனமாய்
அவர் கேட்டை நான் தாழிட்டுச் சென்றேன்
கணக்கை முடித்துச் செல்லும்போது
2
அம்மா,
நான் உங்கள் நலங்களையெல்லாம்
விசாரிக்க வந்தவனல்ல;
அரசாங்கப் படிவங்களை
பூர்த்தி செய்யமட்டுமே பணிக்கப்பட்ட
ஒரு எண்; கணக்கெடுப்பாளர் என்பது பெயர்
உங்களிடம் காணும் அறியாமையும்
நம்பிக்கையும் நப்பாசையுமல்லவா
என்னை ஒரு ரட்சகனைப் போல்
உங்கள் முன் நிறுத்துகிறது?
உங்கள் சிறுசிறு தேவைகளை நிறைவேற்ற
நான் இந்த வார்டு கவுன்சிலர் கூட இல்லை
நீங்களாய்ச் சுயம்வரித்துக் கொண்டதுதானே
இந்த வாழ்க்கை, இந்த அரசு?
பின் என்ன?
எது இருந்தாலும் இருக்காவிட்டாலும்
உங்களிடம் இருக்க வேண்டியது;
அறியாமை அல்ல; சுயபோதம்.
நம்பிக்கையல்ல; செயல்பாடு.
நப்பாசையல்ல; உறுதி.
இவையே உங்களை ரட்சிக்க
உங்கையே
உங்கள் ரட்சகனாக மாற்றவல்லது
இவ்வளவையும் நான் சொல்வது
உங்களிடமிருந்து நான் தப்பித்துக் கொள்வதற்கல்ல
இப்போது எனக்கு என் முன்னுள்ள நிதர்சனம்:
உங்கள் அறியாமையும் நம்பிக்கையும் நப்பாசையுமே.
நான் தப்ப விரும்பாதவன்.
ரட்சகன் இல்லை எனினும்
ரட்சிப்பின் மின்னலைத் தொட்டுணர்ந்தவன்.
உங்கள் ஒவ்வொருவர் வாசல் விட்டிறங்கும்போதும்
இக்கணக்கெடுப்போடு என் வேலை
முடிவுறாத ஏக்கத்தோடே செல்கிறேன்
3
பொறுப்பின் சுமை முழுவதையும் அயராது ஏற்றபடி
ஒவ்வொரு வாயிலாய் ஏறி இறங்குகிறேன்
நீயா? இங்கேயா? எனத் திடுக்கிடும்படி உன் பிரசன்னம்
நம் காதல்; அது ஒரு காலம்
இன்று பிரிவற்ற நேசத்துள் நான் ததும்பி நிற்கிறேன்
சொல்;
உன் குடும்பத் தலைவரின் பெயர் என்ன?
எவற்றால் கட்டப்பட்டுள்ளது உன் வீடு?
அதன் சுவர், கூரை, தரை – விபரமாக.
வாடகையா? சொந்தமா?
தண்ணீர் வசதி எப்படி?
குழாய் நீரா? கிணறா?
எரிபொருளாய் எதை உபயோகிக்கிறாய்?
எத்தனை அறைகள்?
மொத்தம் எத்தனைபேர் கொண்டது உன் குடும்பம்?
என் பணி முடித்து நான் நகரும் போதெல்லாம்
என்னுள் கனலும் துக்கம்;
கேள்விகளற்று
என் கண்களாலே குறித்துக் கொள்ளமுடியும்
உன் வீட்டின் சுவர், கூரை, தரை இவற்றின்
தரவிபரம் போல்
என் பார்வை கிரகித்த எல்லா விபரங்களுக்கும்
என்னிடம் படிவம் இல்லையே என்று