மௌனங்கள்
”துரத்தும் ஓநாய்கள்
எப்போது, எவ்விடம் வைத்து, எவ்வாறு
தேவதைகளாய் உருமாறி
என்னை வாழ்த்தி மறைகின்றன...
எப்பொழுது எவ்விடத்தில் எவ்வாறு
மீண்டும் ஓநாய்கள்
என்னைத் துரத்தத் தொடங்குகின்றன...”
இச்சிந்தனைகளே சமயங்களில்
துக்கமற்ற மகிழ்ச்சியற்ற
எனது மௌனங்களாகின்றன
எனது மனைவி குழந்தைகளிடம் நான் காட்டும்
குழந்தைத்தனமான வேடிக்கை விளையாட்டுக்கும்
அந்நியர்களிடம் நான் காட்டும்
சீரியஸான அன்பிற்கும் நாகரிகத்திற்கும்
இடையேயுள்ள தூரம், அத்தூரத்திற்கேற்ற அளவிளான
துக்ககரமான எனது மௌனங்களாயிருக்கின்றன
உச்சிவானில் முழுநிலா எரிந்துகொண்டிருக்க,
விழா மேடை போல் ஒரு பாறை தோன்ற,
’உயிர் ராசிகளின் வாழ்வே ஒரு கொண்டாட்டம்’
என்று எனது இரத்தம் நிலவு நோக்கிக் குதிக்கையில்
எனது துக்கங்களின் காரணத்தை நான் அறிந்தேன்
நம் தனித்தனிக் கொண்டாட்டங்களின் போதெல்லாம்
திடுக்கிடும் நான் அடைந்த துக்கங்களே
என் மௌனங்களாகியிருந்திருக்கின்றன
கொண்டாட்டத்துள் கொண்டாட்டம் என்பது
ஒரு மாபெரும் அறியாமை;
அகங்காரம், பகட்டு. பாவமும் கூட
கொண்டாட்டத்துள் கொண்டாட்டம் என்பது
கவிதை அல்ல; விதை அல்ல;
சகிக்க முடியாத ’போன்சாய்’ மரம்
”யாவரும், எல்லாமும் ஒன்று கூடினாலல்லவா
திருவிழா, வேடிக்கை, ஆனந்தம்!
எங்கே அந்த விழா, பெருவிழா
நான் பாடமுடியும் விழா?” என்னும்
வேட்கையும் ஏமாற்றமும் பின்னிய
எனது தனி நடமாட்டமும்
எனது மௌனங்களாக இருந்திருக்கின்றன