கட்டித்தழுவல்
பிரிவதற்கு முன்
ஆரத் தழுவிக்கொண்டனர் இருவரும்
இரண்டாய் ஒலித்துக்கொண்டிருக்கும்
இவ்விதயத் துடிப்புக்கள் ஒன்றாய் ஒலிக்கும் வரை
இப்படியே இருக்க முடியும்?
அவனுக்கு எதிர்த்திசையில் அவளுடையதும்
அவளுக்கு எதிர்த்திசையில் அவனுடையதுமான விழிகள்
நீளக் கடந்து தொடுவான்வரை சென்று
கண்ட பலன் ஏதுமில்லையென
உள்நோக்கித் திரும்பியிருக்கின்றன.
நன்று.
அவளுக்கு எதிரே காத்திருக்கிறது அவள் பாதை
அவனுக்கு எதிரே காத்திருக்கிறது அவன் பாதை
நீளக் கடந்து தொடுவான்வரை சென்று
கண்ட பலன் ஏதுமில்லையென்று எண்ணாமல்
இடையறாது தொடர்ந்தால்
ஒருநாளல்ல – அடிக்கடியும் –
அந்த மேலான சந்திப்பை அடைவார்கள் அல்லவா?
அப்போது
ஆரத் தழுவிக்கொள்ளும்
இரு இதயத் துடிப்புக்களும் ஒன்றாய் ஒலிக்கும்
எனினும்
அப்போதும்
இப்படியே இருக்க முடியுமா?
ஏனோ நினைவுக்கு வந்தது
யூதாஸ் காரியத் இயேசுவைத்
தழுவி முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தது
அப்போது கேட்டது
அந்தக் கட்டித்தழுவலுக்குள்ளிருந்து யாரோ-
ஒரு மூன்று தலைகளுடைய ஒருவன்-
சிரித்த குரல்:
பரஸ்பர உடைமை வெறியின் சாத்தான்.
பரஸ்பர ஆறுதலை வழங்கும் கருணாமூர்த்தி,
தான் ஆளுதற்கு வேண்டியே
ஓர் பாவ உலகைப் படைத்த கடவுள்