கவிதைக்குள்ளிருந்து ஒரு கை
தேவதைக் கதை ஒன்றில் மந்திர வாளை ஏந்தியபடி
ஏரிக்குள்ளிருந்து நீண்ட ஒரு கை போல
கவிதைக்குள்ளிருந்து நீள்கிறது ஒரு கை.
பளாரென்று தன் கன்னத்திலறைந்தவனைத்
திருப்பி அறைகிறது.
வருந்த நேரமில்லை.
நேரமில்லை என்பதைவிட நேரம் என்பதே
அதற்குத் தெரியாது என்பதே சரியானது
உயிருக்குத் தவிப்பவன்ஆதரவுக்கு நீட்டிய
கை அல்ல அது; உயிரின் கை.
தனது உன்னத நோக்கைச் சுட்டிக் காட்ட
மேலெழுந்ததாக அது இருக்கிறது;
ஆனால் அந்த உன்னத நோக்கு இன்னதுதான் என்று
ஒருபோதும் நம்மால் சொல்லமுடிந்ததில்லை
மனிதனை நோக்கி நீண்ட
நேசக்கரமாக அது இருக்கிறது
ஆனால் அதை நான் பார்த்த பொழுதுகளில் எப்போதும்
அநாதியாகவே நிற்கிறது அது
நீருக்குள் சலிப்புற்றவன் சும்மா
வெளியே நோக்கி நீட்டிய
வெற்றுக்கரமாக இருக்கிறது
ஆனால் கோவர்த்தன கிரியைத் தன் விரல்களால்
தாங்கிய கிருஷ்ணனைப் போல
பூமியின் சாரத்தில் முளைத்தெழுந்து
இப்பிரபஞ்சத்தையே தாங்கி நிற்கிறது அது
இத்துணை அற்புத அழகில்
ஜ்வலிக்கிறது எப்படி, அந்தக் கை?
தீர்மானமற்ற அனிச்சைச் செயல்களாய் உமிழும்
அதன் நாடி நரம்புகள், ஏதோ ஓர்
இயற்கை ஒழுங்கோடு பிணக்கப்பட்டுள்ளதேதான்!