தேவாலயம்
பச்சை மலைகளும் பள்ளத்தாக்குகளும்
நீரும் மலர்களும் பறவைகளுமுடைய
ஒரு கிராமத்தில்
ஒரு தேவாலயத்தைப் பார்த்தேன்
ஒரு பறவையின் எச்சம்
கட்டிடக் கலையாய் எழுந்து
குழந்தைகளின் தேவதைக் கதைகளில் வரும்
சூன்யக்காரியாய் நின்றது
டிராகன் விடும் விஷமூச்சாய்
ஆலயத்தின் கோபுரத்திலிருந்து சீறிவரும்
வெண்கல மணியோசை கேட்டு
ஒவ்வொரு முறையும் அஞ்சி நடுங்குகின்றன –
சூன்யக்காரியின் மந்திரவலையில்
சிக்குண்ட மனிதர்களைத் தவிர –
நீரும் பூக்களும் பறவைகளும்
மற்றுமுள்ள எல்லா ஜீவராசிகளோடு
மலைகளும் விடிவெள்ளியும் கூட
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஒலித்த
அந்த வெண்கல மணியோசையின் அதிர்வலைகளால்
அக்கட்டிடத்தில் கீறல்
அதனுள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பறவையின் எச்சத்தில்
பாதுகாக்கப்பட்டு வந்த விதை ஒன்று
வெடித்து முளைத்தது
அன்று இரவு அந்த ஊரின் நிலா ஒளியில்
ஒரு பாம்பைக் கண்டேன்
அது தன்னைத்தானே விழுங்க யத்தனித்துத்
தன் வாலைத் தன் வாயால் கவ்வியபடி
வெறியுடன் சுழன்றுகொண்டிருந்தது