உறவு
எந்த ஒரு உறவு சொல்லியும்
அழைக்கப்பட விரும்பவில்லை நீ
உன் வாகனம் என் வாசலிலும்
நீ என் வீட்டுள்ளும்
நிரந்தரம் தங்கிவிட்டது எப்படி?
காலத்தின் இரத்தக்கறை படிந்த
உன் சிவப்பு வாகனத்தில் ஏறி
நீ இங்கிருந்தும் நீங்கிச் செல்வதை
நான் பாரத்துக்கொண்டிருக்கையிலேயே
நீ மீண்டும் அவ்வாகனத்தை
என் வாசலில் நிறுத்திக்கொண்டிருக்கிறாய்
”எவ்வளவ கால காலங்களாய்த்
தொடர்கிறது நம் உறவு”
என்னும் ஆச்சரியத்தை எழுப்பியது
காலமற்ற வெற்றுக் கணங்களுள்
நிகழும் சந்திப்புக்களே
என்னும் ஆச்சரியத்தைத்
தரும் ஆச்சரியமேதான் நீயோ?
நீ எங்கள் சொத்து என நான் எண்ணினால்
என்னை ஓட்டாண்டியாக்கச் சிரிப்பவன் நீ
என்பதை நான் அறிவேன்.
சிகரத்தில் ஏறிநின்று
சமவெளியையும்
சமவெளியில் நின்றுகொண்டு சிகரத்தையும்
பார்த்துக்கொண்டு நிற்பவர்கள்தாமே நாம்
நீ எனது கவிதை எனவும் மாட்டேன்
ஏனெனில் நம் உறவில்
நீ எனக்கு எஜமானனாவதை
நான் விரும்புவதில்லை
நீ ஏதாவதொரு உறவு சொல்லி அழைக்கப்பட
விரும்பாததைப் போலவே
நானும் உனக்கு ஒரு பெயர் சூட்டப்போவதில்லை
(வெளியிலுள்ளவர்களை விளிப்பதற்கல்லவா பெயர்)