படுகொலை மாநகர்
உயிரின் வெதுவெதுப்பை அணைத்துக்
குளிரச் செய்து விடுகிறது புறவெளி
அரிவாள் வெட்டு விழுந்த உடம்பாய்
குருதி வீசிச் சிலிர்க்கின்றன அனுபவங்கள்
கொலைப்பட்டுக் கிடந்த கோரத்தை வந்து
சுவாரஸ்யத்துடன் மொய்க்கும் ஈக்கள்தாமோ
நம் மக்கள்?
வெறும் ஈ விரட்டிகள்தாமோ இந்தக் காவல் துறையினர்
கால்கள் மட்டுமே உள்ளவன்போல்
நகரமெங்கும் அலைந்துகொண்டிருந்தான் ரங்கன்
கைகள் மட்டுமே உள்ளவன் போல்
அடிக்கடி கைவிலங்கோடு
வந்து போய்க்கொண்டிருந்தான் ஆண்டி
தலை மட்டுமே உள்ளவன் போல் விழி உருட்டி
ஆண்டிகளையும் ரங்கன்களையும் கொண்டு
ஆட்களை ஒழித்துக் கொண்டிருந்தான் அரசியல்வாதி
நாற்சந்தியில் பட்டப்பகலில்
கைவேறு கால்வேறு தலைவேறாய்க்
கொலைப்பட்டுக் கிடக்கும் மனிதனைக் கண்டு
அதிர்ச்சியடைவதே இல்லை இந்நகர மக்கள்
ஒவ்வொரு கொலையும் ஒரு வெட்டுக்காயம்
எந்த வெட்டுக் காயமும்
’படக்’கென ஆறிவிடும் சில மணி நேரத்திற்குள்
எத்தனை வெட்டுக்களாலும்
கொல்லவே முடியாத உயிர் இந்த நகர்
பாவத்திலும் மன்னிப்பிலும் காலமில்லை
பாவங்கள் உணர்ச்சிவேகத்தாலும்
மன்னிப்பு ஆழ்ந்த உணர்ச்சி அமைதியாலும்
நிகழ்கின்றன
பாவத்திற்கும் மன்னிப்பிற்கும் இடையே
காலமேயில்லையே,
பின் எப்படி, எங்கிருந்து வந்தது
பிணியும் அவலமுமிக்க இந்தக் காலம்?
ஓங்கி உயர்ந்து தழைத்து ஒலிக்கிறது
பாவமன்னிப்பு நல்க நிற்கும் கோவில் மணி,
ஆண்டிகளையும் ரங்கன்களையும்
சாணக்யர்களையும் ரட்சிக்க.
ஆண்டிகளும் ரங்கன்களும்
அரசியல் சாணக்யர்களும் இருக்கிறார்கள் அப்படியே,
பாவமன்னிப்பு வழங்கும்
அந்தக் கோவில்களை ரட்சிக்க