மந்திரக்கயிறு
எத்தனை வெட்டுக்கள் குத்துக்கள் பட்டும்
உடைந்து போகாதிருந்தது பம்பரம்
குழந்தையின் உள்ளங்கையில் பம்பரம் சுழலும்போது
தழும்புகள் எல்லாம் மறைந்துவிடுகின்றன
’பார்’ எனத் தனது மூஞ்சிக்கு எதிரே நீண்ட
குழந்தையின் உள்ளங்கையில் பம்பரம் சுழலும்போது
காலம் வெட்கித் தற்கொலைத்து மறைந்து விடுகிறது
எதிர்த்திசையில் பூமி சுழன்று சுழன்றோடிவிடுகிறது
கடவுளும் சாத்தானும் வீசியெறியப்படுகின்றனர் ஒன்றாய்
சிதறிக்கிடந்த நட்சத்ரங்களின் தனிமை கலைக்கப்பட்டு
எல்லாம் ஏகாந்தத்தின் இதயத்தில் முகம் அலம்பி
நின்கின்றன மீண்டும்.
சக்கரங்கள் கழன்று திக்குகளில் ஓடிவிட
’பொம்’மென்று அமர்ந்த வாகனம்போல்
தன் இருப்பை உணர்த்துகிறது காலாதீதம்
இதயத்தின் பாற்கடலைக் கடைகிறது அதன் கூர்முனை
அதனை இடையறாது இயக்கிக்கொண்டிருக்கிறது
குழந்தையின் கையிலுள்ள மந்திரக் கயிறு
குழந்தையின் உள்ளங்கைகளில் பம்பரம் சுழலும்போது
சூரியன் இன்னும் வேகமாய்ச் சுழலுகிறது
கற்கள் உருகி நதியோடத் தொடங்குகிறது
கடல் நோக்கி ஓடுகின்றன விருட்சத்தின் இலைப்படகுகள்
கடல் நோக்கி ஓடுகின்றன வெள்ளம் தீண்டிய தண்டவாளங்கள்
வசந்தப் புல்வெளியில் மான் துள்ளி ஓடிவிட
வசந்தப் புல்வெளியின் வண்ணங்கள்...
எல்லாமே தழும்புகளாய் மறைந்துவிட...
ஓடாது மறையாது
நிலைத்து நிற்கும் இவை என்ன?
கண்காணாத ஒரு சுழற்சியும்
குழந்தையின் வெற்றுப்பார்வையும்
பீரிடும் ஆனந்தத்தின் ஊற்றும்