கருப்புப் பறவைகளும் வெண்முட்டைகளும்
சென்றமுறை இந்தக் குல்மோஹர் மரம்
பாதுகாப்பான அடர்த்தியற்றிருந்ததால்
கட்டிய கூட்டைப் பாதியிலேயே விட்டுவிட்டுச்
சென்றுவிட்டன அந்தக் காகங்கள்
அது எங்களின் துக்கமாக இருந்தது
இப்போது வந்து கூடுகட்டியுள்ளது
அதே கறுப்புப் பறவைகள்தாம்!
அவை வந்து வந்து தங்கிப்போவது
தந்த ஆனந்தத்தோடு, அது இடப்போகிற
முட்டைகளை, குஞ்சுகளைக் காணப்போகிற
ஆனந்தத்தோடு, உயர்ந்து அடர்ந்த கிளையில்
செம்மையாய் அமர்ந்திருந்த அதன் கூடுநோக்கி
என் சின்ன மகளும் நானும் அண்ணாந்தோம்
கூட்டுச் சுள்ளிகளின் இடைவெளியூடே
காட்சி தந்தது முட்டை!
”இல்லை, அது ஒட்டை” என்றாள் என் மகள்;
புதிதாக அணிந்திருந்த என் கண்ணாடிக் கண்களைப் பார்த்து
”அடக் குருட்டு அப்பாவே” என்றாள்
கூர்ந்து நோக்கியவாறு நிற்கவே
சபிக்கப்பட்டவனாயிற்றே நான்!
அது ஒரு ஒளி போலல்லவா தெரிகிறது?
இல்லை,
கூட்டை ஊடுருவித் தெரியும் வெறும் வெளிதானோ?
”முட்டை, ஓட்டை, ஒளி, வெளி
யாவற்றையும் இடும், இட்டு
அடைகாக்கவும் செய்யும்.
கவிஞர் வீட்டுக் காகங்களில்லையா” என்றபடி
ஈரக்கைகளைத் துடைத்துக் கொண்டே வந்த
என் மனைவியும் எங்களோடு நின்று அண்ணாந்தார்
அது, எங்களது துக்கத்தின்
விடிவெள்ளியாக ஒளிர்ந்தது அப்போது
’பூக்கள் கண்காட்சி’ என்றொரு ஓவியம்
வெற்றுத்திரைச் சீலைமீது பொழிந்தது
வீறுகொண்ட காமம்.
முடிவற்ற வண்ணங்களில் எண்ணற்ற பூக்கள்
அவை மலர்ந்தவைபோல் தோன்றினாலும் –
என்ன சாபமோ அது –
மலர்தலறியாத விபரீத மொக்குகள் அவை.
மலர்தலற்று உள் அழுகி நாறும் மொக்குகள் –
வியர்வை நாற்றம், இரத்தவாடை, பிணவாடை,
புழுங்கல் வாடை, மல நாற்றம், மருந்து வாடைகள்
போதை நெடிகள் இன்னபிற, இன்னபிற
ஆனால் அந்த வண்டுகள்!
நறுமணத்தால் ஈர்க்கப்படும் வண்டுகள்
துர்நாற்றத்தால் விரட்டியடிக்கப்படாததென்ன!
மிக ஆழமானதுதான்
மலர்களுக்கும் வண்டுகளுக்கும் இடையேயுள்ள பிணைப்பு!
கூம்பி உள் அழுகி நாறும் மொக்குகளைச் சுற்றிச் சுற்றித்
தாளாத வேதனையுடன் அரற்றும் ஒரு கருவண்டு.
என் சின்னஞ்சிறு கேன்வாஸில்
அது எழுந்து தன் சிறகு விரித்துப் பறப்பதற்கும்
இருக்கிறதே வானம் என்று அதிசயித்து நின்றேன்
அவ்வேளை
மலர்ந்தது
ஒளிவெள்ளம் போலொரு வெள்ளைப்பூ
வானமும் பூமியும் சந்திக்குமொரு
கற்பனைக் கோட்டிலிருந்து எழுந்தது அது
சாபவிமோசனமுற்றன மலர்கள்!