பந்தல்காரர்கள் விளக்குக்காரர்கள் பூக்காரர்கள்
வெற்றுக் காகிதமும் திறந்த பேனாவுமாய்
ஜன்னலருகே நான் இருந்தேன்
வாட்டசாட்டமான மனிதர் சிலர் வந்தார்கள்
மூலைக்கு மூலை குழி தோண்டி
நட்டார்கள் கம்பங்களை
கையெட்டுந் தூரத்தில் விதானத்தை அமைத்துவிட்டு
கம்பத்தில் ஏறிநின்று உயர்த்தினார்கள் விதானத்தை
இன்னும் சிலர் வந்தார்கள்
சுற்றி வயரிங் செய்து விளக்குகளைப் பொருத்திவிட்டு
பிரதான மின்சாரத்துடன் சுவிட்சுகளை இணைத்துச்
சரிபார்த்து திருப்தியுடன் சென்றுவிட்டார்கள் அவர்களும்
பூக்காரர்கள் வாந்தார்கள்
பூச்சரங்களைத் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்
இன்னும் சிலர் வந்தார்கள்
விளக்குகளைப் போட்டார்கள்; தூண்டினார்கள் இசைத் தட்டை
இரும்பு நாற்காலிகளில் அமர்ந்தார்கள்
ரொம்பப் பெரிய எதிர்பார்ப்பு அவர்கள் முகத்தில்
ஒலிபெருக்கியில் ஓர் உயர்தரக் கலைஞனின் பாடல்
அந்த இடத்திற்கு வந்து அவன் பாடவே மாட்டான் என்று
இசைத்தட்டில் அவனைச் சிறைப்பிடித்திருந்தார்கள்
படோடபமான ஆடைகளுடனும் மலர்மாலைகளுடனும்
மணமக்கள் வந்தார்கள்
சந்தோஷமோ சந்தோஷம் அவர்கள் முகத்தில்
அவர்களைச் சுற்றி உற்றார் உறவினர்கள்
அவர்களும் அவ்வாறே
பரபரப்படைந்து எழுந்தனர் இரும்பு நாற்காலிக்காரர்களும்
ஒருவரை ஒருவர் பார்த்து முகம் மலர்ந்தனர்
மணமகன் மணமகளுக்குத் தன் நண்பர்களை
அறிமுகம் செய்தான்; மணமகளும் அப்படியே
அதெல்லாம் வியர்த்தம், வியர்த்தம்.
மகிழ்ச்சியையும் நன்றியறிதலையும் தவிர
வேறு எந்த உணர்ச்சியுமே நடமாடவில்லை அங்கு
”மறக்காமல் எல்லோரும் சாப்பிட்டுவிட்டே செல்ல வேண்டும்”
என்றார்கள், துக்கமும் அதிருப்தியும் நிலவாத
அவ்விடம் தங்களுக்கானதில்லை என்பதுபோல்
அங்கில்லாதிருந்தார்கள்
பந்தல்காரர்கள் விளக்குக்காரர்கள் பூக்காரர்கள்
நான் எனது கவிதையை எழுதி முடிக்கும்போது
எல்லோரும் கலைந்துவிட்டிருந்தார்கள்
வாட்டசாட்டமான அந்த மனிதர்கள் வந்தார்கள்
பந்தலைப் பிரித்துக்கொண்டு சென்றார்கள்
விளக்குக்காரர்கள் வந்தார்கள்
பிரித்துக்கொண்டு போனார்கள்,
பூக்காரர்கள்தான் வரவில்லை யெனினும்
பூச்சரங்களும் கழட்டி எறியப்பட்டுவிட்டன
கம்பங்கள், விளங்குகள், பூக்களற்று
ஒளிர்ந்தது அவ்விடம் ஒரு பேரொளி