தேவதைகள்
சூர்யன் மேலெழுந்து
போதிப்பதற்கு நான்
என் பள்ளிக்குப் போவதற்குமுன்னே
கற்றுக் கொள்வதற்கு
என் பெண் குழந்தையை
அவள் பள்ளிக்குக் கொண்டு செல்லத் தொடங்கினேன்
மிதிவண்டியில்
எனது நரம்புவலையினை இழுக்கும்
ஒரு மீனவனின் முஷ்டியாய்
மேலேறிக் கொண்டிருந்தது சூர்யன்
கதிர்வலைகளினுள் சூன்யம் மிஞ்ச
எங்கும்
என்போல் ஒழுகி நடமாடும் மனிதர்கள்
சூன்யவெளியிலிருந்து சிறகுகள் மிதந்துவந்து
மனிதர்களின் விலாக்களில் பொருந்தியதைப் பார்த்தேன்
விவரிக்க விடுங்கள் என்னை
நான் கண்ட அந்த இனிமையை:
குழந்தைமை + கன்னிமை (பெண்மை) = தேவதை...
என்னவென்று சொல்வேன் என் உணர்வுகளை!
விரல் தொடுதலில் கலைந்துவிடக் கூடிய
மிகமிக மென்மையான ஒரு வஸ்து
திரும்பத் திரும்பப் பிறந்து உலகை ஜெயிக்கிறது எனவா?
திரும்பத் திரும்பப் பிறந்து உலகில் தோற்கிறது எனவா?
விஷயம்,
நம் மகிழ்ச்சிக்கும் அழுகைக்கும் அப்பால் உள்ளது