கைவல்ய நவநீதம்
1.
பாலைமணல் மழைத்துளியை ஈர்ப்பதுபோல்
அவன் தன் நண்பனைக் கண்டதும் மலர்ந்தான்
பேசிக்கொண்டேயிருந்தான்
தன்னைப் பற்றிப் பேசினால் போதும்
அதுவே அவனைப் பற்றியும் அறியும் வழியாகும் என்பதுபோல்
விடைகொடுத்த பிறகும் பிரிய மனமின்றி
தன் வாசல்வரை வந்தவன்
அவன் வாசல்வரை சென்றுவிட்டான் என்பதைக் காண்க.
தன்னந்தனியாய்த் தன் இருப்பிடம் திரும்பி வரும்போது
தனிமையே இல்லை அவனுக்கு
எங்கும் விரிந்திருந்தது பசுமைமிக்க ஏகாந்தம்
2.
நதி வறண்டு மணல் ஆவதும்
ஏகாந்தம் தேய்ந்து தனிமை ஆவதும்
நாம் அறிந்தவை
மணல் பொங்கி நதியாவதும்
தனிமை மலர்ந்து ஏகாந்தமாவதும்
நம்மால் அறியமுடியாதவை
நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன?
அந்த அறியமுடியாதவற்றின் கொடையை ஏற்க
எப்போதும் நம்மைத் திறந்தே வைத்திருப்பதைத் தவிர
3.
திறந்த வாயிலில் நுழைந்த ஒளியாய்
விரிந்த பாயில் படுத்தேன்
நுழைந்த காற்றில் உலர்ந்த வியர்வையாய்
என் கண்ணீரைக் களைந்தேன்
4.
டீ தாகமுமல்ல, அமைதியின்மையுமல்ல;
ஒரு சந்திப்பைக் கண்ட
அந்த நிமிஷத்தின் கொண்டாட்டம் அது
ஒரு டீ சாப்பிட்டு வருவோமா என்றபடி நாங்கள்
நடந்தது டீக்கடை நோக்கிதான் என்றாலும்
டீக்கடை மற்றும் எது நோக்கியுமல்ல என்றே
நிச்சயமான ஒரு பேரொளி சூழ்ந்திருந்தது வழியெங்கும்
என்றாலும் டீக்கடைக்கே வந்து சேர்ந்தோம்
டீ குடித்தோம்; அவர் புகைக்கத் தொடங்கினார்
எதிரே தொங்கிக்கொண்டிருந்தது ஒரு பழக்குலை
பழம் சாப்பிடுகிறீர்களா என்று அவர் கேட்டது
கேள்வியா? விசாரணையா?
நன்றாய்க் கனிந்திருந்தது
அநத நேரம், அந்தக் குலை மற்றும் யாவுமே
ஆகவே சாப்பிட்டோம்.
பசியினாலல்ல; பதற்றத்தினாலுமல்ல
5.
சதா குறுக்கிடும் இந்நதியின் குரலைக் கேளாமல்
சதா அதனைத் தாண்டிச் செல்லவே நாம் முயல்வதால்
விளைந்தது என்ன?
இக்கரை, அக்கரை, பரிசில், பயணம் என
ஒன்றுக்கும் உதவாத கச்சடாக்கள்