வெளிக்கதவின் மதில்மேல் ஓர் அணில்
அகலத் திறந்திருந்தது வரவேற்பறையின் வாயில்
வீடு பெருக்கியவளின் கைங்கர்யம் அது
மூட்டமாய்ப் பொங்கிய தூசுகளை
வாயிலை நோக்கி அடித்து விரட்டியது
ஜன்னல் வழியாய்ப் பாய்ந்துவந்த காற்று
பளிச்சென்று துலங்கிய வெளிக்கதவின் மதில் மீது
ஒரு குஞ்சு அணில் பிள்ளை
மனிதனைப் போலவே
முன்கால் இரண்டையும் கைகளாக்கி
ஏதோ ஒன்றைக்
கடித்துத் துருவிப்பார்த்துக்கொண்டிருந்தது
திடீரென விவாதம் அணைந்த என் முகம்
சுட்டிய அக்காட்சியைக்
கண்டாள் என் மனைவியும்
”இந்த அணிலை
ஏற்கனவே நான் பார்த்திருக்கிறேன்” என்றாள்
”இருக்கவே இருக்காது”
”அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?”
மீண்டும் கிளம்பிற்று விவாதப் புழுதி
”இதை அந்த அணிலிடமே கேட்போமா?” என்றேன்
அணில் திரும்பிப் பார்த்தது எங்களை
இயங்கும் சலனப்படக் கருவிமுன்
விளம்பும் கவிதை நட்சத்ரம் போல்
”எனது விழிப்பு, துறுதுறுப்பு, துருவும் மனம்
மற்றும் புத்துணர்வுடன் கூடிய
எனது ஆரோக்யத்தின் ரகசியம்
நான் எப்பொழுதும்
என் உயிர் வாழ்வுக்கு அனாவசியமான
அன்றாட வாழ்வின் நிகழ்ச்சிகளைச்
சற்றும் சுமந்து கொண்டிருக்காததுவே”
என்றது அந்த அணில்