காற்றிலசையும் ஒரு வெண்மலர்
அண்டைநிலத்து பூச்சிமருந்தைத் தின்று விட்டு
நீர்த்தொட்டியோரம் மடிந்துகிடந்த மீன்கொத்திச்
சோகம் பரந்த பண்ணைவெளியில்
ஒரு கணமும் சோராத உயர் முயற்சியாய்
பறவைகள் தம் ஊர் அமைக்க –
நீர் புகுந்த தன் குளக்கரைவயலின் ஒரு பகுதியை
தன் பங்குக்கான ஒரு செயல்பாடாகவோ
நீருக்கே கொடுத்துவிட்டான் அவன்?
நீர்க்கரையோரத்து அவன் வீடு
தன்னையும் அவர்களில் ஒருவனாய்
இணைத்துக் கொள்ள வேண்டிப்
பறவைகளிடம் இறைஞ்சிக் கொண்டிருக்கும் கோலமோ?
யாவும் கண்டுணர்ந்து கொண்டிருக்கும் தவமோ?
கவனிப்பாரற்றுக்
கனன்று அலறும் பசி வாய்களோ
மரத்துக்கு மரம்
பறவைகளின் அலகு தீண்டி
தம் இதயம் திறந்து நிற்கும் கனிகள்?
பூமியின் மார்பு திறந்து
தென்னைமரங்களூடே விரைந்துவரும்
வாய்க்கால் நீர் –
தீண்டும் கால்கள் யாவுமே
கடவுளுடையனவாமோ?
”ஓ...வ்!” நீளமான ஒரு பறவைக் குரல் வீசி
”போதும்! வாங்க இங்கே” என்றாள்
சாவா மருந்தருந்திய காதலன்போல்
விக்கித்து நின்றிருந்த தன் துணைவனை
நோக்கி, ஏஞ்சலா. அவளைப்
புரிந்து கொண்டவன்போன்ற அவன் புன்னகையிலும்
”நீயும்தான் சமயங்களில்...” என வெளிப்பட்ட
அதன் தொடர் ஒளியிலும்
”சரி சரி. சாப்பாட்டுக்கு நேரமாச்சு” என்று
அவனோடு அவளுமடைகிற அமைதியிலும்
தவழ்ந்து நின்ற காதல் வாழ்வைக்
கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தது,
யாரோ?
மண்ணில் மகிழ்ந்துறுதி கொண்டு
நிமிர்ந்து, எட்டி, குனிந்து, வளைந்து
சரிந்து, ஏறி, சாய்ந்து,
பற்றி, படர்ந்து, இளைப்பாறி
தங்களோடு விளையாடிக் கொண்டிருந்த
மாமரத்திலிருந்திறங்கி
தாத்தா பாட்டியிடம் ஓடி வந்துகொண்டிருந்தனர்
சூர்யாவும் அதீதியும்.
”தாத்தா பாட்டியையே மறந்துட்டீங்களா
என் மாமரத்து அணிற் குஞ்சுகளா?”
அவ்வளவு பெரிய வானம்
அவள் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
கழிப்பறை வாளிநீர் மீன்குஞ்சை
ஒரு பாத்திரத்து நீரில் தாங்கியபடி
வற்றாத பாசி பச்சைகளுடனிருக்கும்
கிணற்றை நோக்கி – யாரோ தன்னைப்
பின் தொடர்ந்து கொண்டிருப்பதையறியாதே –
நடந்து கொண்டிருந்தாள் அதீதி.
கட்டக் கடைசியாய்க்
கண்ட்டைந்து விட்ட கோலமோ
காற்றிலசையுமொரு வெண்மலர்போல்
மரங்கள் சூழ
பறவைகள் ஊரமைத்துக் கொண்ட
இந் நீர்நிலை?