குளியலறைக் கூரை
நெருக்கும் நான்கு சுவர்கள்தான்
எனினும்
வாயில் உண்டு; கதவு உண்டு;
எனினும்
கூரையில்லாதிருந்தது எங்கள் குளியலறை.
எனினும் – அப்படியிருக்கையில் தான் –
அந்தப் பாட்டு எழும்புகிறது,
வானத்தின் அம்மணப் பார்வையும்
குளியலறையின் அம்மணப் பார்வையும் இணைந்து
இன்று, மாடியறையின்
கீழ்நோக்கிய பார்வையின்
ஆபாசம் தவிர்க்க என
ரெண்டு தென்னந்தட்டியை எடுத்து
வெடுக்கென அணிந்துகொண்டது குளியலறை
அதுவே, பாட்டு எழும்பத் தவிக்கும் ஓர் ஊமை வாத்யம்
அதுவே, காலத்தால் கெட்டு பொத்தலாகி
தொட்டித் தண்ணியை அழுக்காக்கிக்கொண்டிருக்கிறது
கர்ப்பிணி மனைவி
மாடிமீதமைந்த ஸ்டோர் ரூம் ஏறி
மாற்றுக்கூரை எடுத்து வரவும் மாற்றவும் இயலாதவள்
”கூரையை மாற்றுக மாற்றுக” என என்னிடம்
ஒரு கோடி முறை உரைத்து விட்டாளாம்!
”இன்று ஞாயிறு.
நானும் உதவுகிறேன் உங்களுக்கு
கண்டிப்பாய் மாற்றுக” என்ற அவள் குரலுக்கு
இனியும்செவி சாயாது நின்றால்
என்ன மனிதன் நான்?