இரத்தம் சிந்தல்
அது ஓர் அரூப உலகம்;
ஆகவே
உருவுடன் அங்கே நுழைய எவருக்கும் அனுமதியில்லை
மரணத்தின் நாவினைப் போல்
அந்த அரூப உலகின் இரும்புகேட் அருகே
நிற்கிறான் ஆயுதமேந்திய அந்தக் காவலாளி
மரணத்தின் நாவுகள் மாமிசம் எண்ணியே
எப்போதும் சப்புக்கொட்டியபடி நிற்கின்றன
உண்மையின் ஈவு இரக்கமற்ற கடுமையுடன்
பூட்ஸ் கால்கள் மற்றும் புஸுபுஸுவென்று மயிரடர்ந்த
முரட்டுக் கைகளில்
அயராத தயார் நிலையில் நிற்கிறது
வேட்டைத் துப்பாக்கி
தப்புதல் என்பதே கிடையாது
உருளும் சிறு சிறு கற்கள்
மிதிபட்டு அலறும் புற்கள்
நொறுங்கிக் கதறும் சருகுகள்
மரங்களெங்கும் பதறும் இலைகள்
யாவும் அமைதிகொள்ளும் அவ்வினாடி
சொற்கள் பெருமூச்செறியும்
குறிபிசகாத் துல்லியத்தில் குவியும் கவனம்
விரியும் மௌனம்
வராதே! வராதே! ஐயோ வராதே!
உன் தாகம் எத்துணை புனிதம் எனினும்
உன் உடல் எத்துணை அழகியதாயினும்
என் மானே!
அவ்வுடலோடு ஒடிவராதே இங்கே
உன் தாகம் தணிக்க நிற்கும் இந்த நீர்நிலை
உருவமற்ற வெறுமை ஒன்றின் பார்வை
உன் குருதியால் இதனைக் கலங்க அடித்துவிடாதே