விண் வரையும் தூரிகைகள்
பறவைகள்
தேர்ந்துகொண்ட நிலம் தேடிப்
பாய்ந்து வந்தமையோ
ஞானம் என்பது?
சுற்றுச் சூழல் பற்றிய
அக்கறை குறைந்த
அழுக்குக் கிராமம்தான்
இந்தக் கூந்தகுளம் எனினும்
பறவைகளைத் தாங்கும் மரம்போலும்
கருணை கொண்டிருப்பது போதாதோ?
துய்க்காதிருப்பார்களோ, மனிதர்கள்
கொட்டு முழக்கங்களும்
ஒலி பெருக்கிகளும் ஒலிக்காத
பறவைகள் மீதான தங்கள் அக்கறைக்குப்
பரிசுபோல்
இயற்கை தங்கள் ஊருக்கு அளித்துள்ள
தெய்வீக அமைதியினை?
ஆயிரம் ஆயிரம் குஞ்சுப் பறவைகளின்
குவாக் குரல் கேட்கவோ
ஒலிகள் அடங்க மனம் கொண்டது ஊரும்?
செவியுற்று வியந்து
இது தங்கள் இடம் தங்கள் இடம் என்றோ
ஓடிவந்து முகாமிட்டனர் ஓவியர்கள்,
குஞ்சு பொரித்து வளர்ந்து
கூட்டிச் செல்லும் பறவைகள் போலும்?
இங்கே பறவைகள்
தங்கள் முட்டைகள்
குஞ்சுகளுக்கு அருகாய்
மரங்களின் மேல் –
தங்களுக்கு எதிரே
கடந்து செல்லும்
பொருளற்ற காட்சிகளைப் பார்த்தபடி,
தன் நிழலும் இப்பூமியைத்
துன்புறுத்தாது வருடிச் செல்ல;
தன்னை விடுத்து
விண் வரையத் தொடங்கியதோ
இப் பூமி தாங்காதென
மேலெழுந்து
விண்ணெலாம் விரிந்த
பெருந் துயரில்
நீந்திக்கொண்டிருந்த பறவை?