வேண்டாம்
இதயங்கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும் அழகையும் கொண்டு
நான் யாதொரு பிரும்மாண்டமான சிலையையும்
வடிக்க வேண்டாம்
வெளிப்படும் தூசு மாசு உண்டாக்க வேண்டாம்
வெளிப்படும் சிதறல்கள் பூமியைப் போர்த்தி
அதன் மூச்சை நெரிக்கவும் வேண்டாம்
அந்தச் சிலையின் கண்களிலிருந்து
நீர் வடிய வேண்டாம்
தற்கொலைக்கு வேண்டிய தனிமையற்று
அந்தச் சிலை தவிக்கவும் வேண்டாம்
அந்தச் சிலையை நான் எவ்வாறு அழிப்பது
எனத் திணறவும் வேண்டாம்
கொண்டாட்டத்தின் பறைமுழக்கத்தில்
விழியிருண்ட செவியிருண்ட
பக்திப்பரவசனை நினைத்து
நான் அழவும் வேண்டாம்
”இனி அந்தச் சிலையை உடைக்கவும் முடியாது.
உடைத்தாலும், அதைச் செதுக்கிய போதேற்பட்ட
மாசுக்கேட்டிற்குக் கொஞ்சமும் குறையாத
மாசுக்கேட்டைத்தானே அது உண்டாக்கும்” என
நான் வேதனைப்படவும் வேண்டாம்
இதயம் கொள்ளாது
என்னுள் பெருக்கெடுக்கும்
இந்த அன்பையும் அழகையும் கொண்டு
இப்பேரண்டத்தை நேசிக்கப் போகிறேன்
ஒரு சிறு களிமண்ணையும் உருட்டாது