அரிச்சுவடி
அழுவோம், சிரிப்போம், ஆச்சரியப்படுவோம்;
உணர்ச்சியற்று மரத்துப்போதல் மட்டும் வேண்டாம் நமக்கு!
மோசமான நிர்வாகம்
கவனிப்பாரற்ற குடும்பச் சூழல்
காசுக்காய் காலங்கழிக்கும் ஆசிரியர்கள் என்று
ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கூடம்
இந்த உலகம்; சரிதானா?
வாங்குகிற சம்பளத்திற்கு உழைக்காத
குற்றவுணர்ச்சியால் துவண்டுகொண்டிருக்கிறது
நமது காலம்; சரிதானா?
சரியில்லையென்றால் மன்னியுங்கள் என்னை
அத்தகையோர் சற்று விலகிக் கொள்ளுங்கள்
இடம் மாறி நான் உங்களோடு சேர முடியுமா?
முடியாது, கூடாது
பாருங்கள் இங்கே 1 லிருந்து 8 வரை
எந்தப் படியில் நிற்பவர் ஆனாலும்
அவர்களுக்குத் தேவைப்படுகிறது அரிச்சுவடி
பல்துறை அறிவின்
வண்ணங்களும் விஸ்தீரணமுமான
உபயோகமற்ற எனது நீண்ட மேலங்கியைத்
தூர எறிந்ததுதான் தாமதம்
ஒடிவந்தன குழந்தைகள் என்னோடு உறவாட
அப்போது பார்த்திருக்கிறீர்களா
அவர்கள் முகத்தில் வீசும் ஒளியை?
அந்த ஒளியைப் பிடித்து எடுத்துச் செல்லுங்கள்
ஆசிரியர்களே, உங்கள் ஆய்வுக்கூடத்திற்கு
பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதிலும்
படிவங்களை நிரப்பி ஒழுங்காக வைத்திருப்பதிலும்
இப்போது இவன் ரொம்ப மோசம்.
என்றாலும் அந்தக் குற்ற உணர்ச்சியை
யாரோ என்னிலிருந்து தூக்கி எறிந்து விட்டார்கள்
நான் இப்போது செய்வதெல்லாம் என்ன?
சொல்லத் தெரியவில்லை ஆதலால்
’அன்பு’ எனும் சொல்லால் குறிக்கிறேன் அதை இப்போதைக்கு
அதற்குப் பெறுகிறேன் சம்பளமாய் இவ்வுலகனைத்தையும்!
என்னிலிருந்து யாரோ அதைக் கற்பிக்கிறார்கள்
என் மாணவர்களுக்குள்ளிருக்கும்
ஒவ்வொரு ’யாரோ’க்களுக்கும்!
உலகின் எந்தப் படியில் நீவிர் நிற்பவர் ஆயினும் சரி
உங்களுக்குத் தேவைப்படுவதும்
இந்த அரிச்சுவடிதான் இல்லையா?