அறைக்குள் ஒருவன்
முதல் மழைக்குப் பூமிசெய்த எதிர்வினையை
நான் முகர்ந்துள்ளேன் ஆகவே
சொல்லத் தெரியாதவன் எனினும்
அனைத்தையும் அறிந்தவன்
குளிர்ந்த காற்றுடன் மழை வீசிக்கொண்டிருந்தது அன்று
ஜன்னல்கள் அடைக்கப்பட்டு மின்விளக்குகள் தூண்டப்பட்ட
பாதுகாப்பான அறைக்குள் நான்
ஸ்வெட்டர், மஃப்ளர், இத்யாதிகளுடன்.
எல்லாப் பாதுகாப்புகளையும் மீறி
எதிலும் நுழைந்துவிடுகிறது மழை
பாதுகாப்புத் தடைகளையெல்லாம் மீறி
சந்தித்துக் கொள்ளும் ’காதலர்’களைப்போல்
ஜில்லென்று ஸ்பரிசித்துக்கொண்டோம்
மழையும் நானும்
மயிர்க்கால்களெல்லாம் சிலிர்த்தபடி
மரங்கள் மழையை ஏற்பதையும் ஆனந்தமாய் நனைவதையும்
கண்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன்,
’காதல்’ நாட்களை நினைவுகூரும் ஒரு நடுவயதின்னைப் போல
வானம் பூமியெங்கும் மழையால் எழுந்த
ஒலிகள் அனைத்தையும்
என் அறைக்குள்ளிருந்தே நான் கேட்டேன்
பழுத்து ஒடுங்கி அமர்ந்த ஒரு முதியவனைப்போல
மழையின் பேச்சு என்ன என்றோ
என்ன நோக்கில் அது இப்படிப் பெய்கிறது என்றோ
பூமியுடன் அது நடத்திய உரையாடல் என்ன என்றோ
சொல்லு சொல்லு என்று அதை நான் நச்சரிப்பதில்லை
புரிந்துணர்வுமிக்க பண்பட்ட காதலனைப்போல
கம்மென்றிருந்தேன்.
தாகத்துடன் எழுந்து தண்ணீர்ப்பானையை நோக்கி நடந்தேன்
பருகினோம் நாங்கள் கேள்விகளற்ற வாயால்
ஒருவரை ஒருவர்